Monday, November 21, 2011

கிளிஞ்சல்கள்

யாருமே நிறைய நேரம் இருக்க விரும்பாத இடம் அது.மிக அழுத்தமான இறுக்கம்
அங்கு நிலவியது. என்னுடைய முறை எப்போது வரும் என்று தெரியவில்லை. அரை மணி நேரம் ஆகலாம்.அதற்கு மேலும் ஆகலாம்.உள்ளே இருந்த காற்று சுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக இல்லை. பத்து பேர் அமர்ந்திருந்தோம்.

ஒரு தம்பதி. பார்ப்பதற்கு வடநாட்டவர்கள் போல் தெரிந்தார்கள்.வடநாட்டவர்கள்
என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டாலும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தீர்மானமாய் என்னால் கணிக்க முடியவில்லை.

மனைவி மிகவும் சோர்ந்திருந்தார். கணவன் அதற்கு இணையாக சோர்ந்திருந்தான்.குழந்தை மட்டும் கார்ப்பெட்டில் உட்கார்ந்து கொண்டு , வெல்வெட் துணிப் பொட்டலத்தை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அடிக்கடி அவர்களின் கால்களைப் பிறாண்டி துணிப் பொட்டலத்தை அவிழ்த்துத் தருமாறு சைகை செய்தது.
அவர்கள் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

'மிஸ்டர். நாகராஜன்'

எனக்குப் பக்கத்தில் இருந்த வயதானவர் எழுந்தார்.

'நேராப் போயி ரைட்ல ஃபஸ்ட் லேப்'

'ரிப்போர்ட் எப்ப கெடைக்கும்.' - கரகரப்பான குரலில் கேட்டார்.

'ஈவ்னிங் சிக்ஸ் ஓ க்ளாக் ஆகும் சார்.நாளைக்கி காலையில கலெக்ட் பண்ணிக்குங்க.இல்லன்ன போய்ட்டு சாயந்திரம் வாங்க'

தளர் நடை பெரியவர் மறைந்தார்.

நகரத்தின் மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றின் கிளை அது.பரிசோதனைகளுக்காக மட்டுமே அந்தக் கிளை.மேலிருந்து கீழ் வரை அத்தனையையும் பரிசோதிப்பார்கள்.

குழந்தை ஆக மட்டும் முயன்று பார்த்தது.முடியவில்லை.

என்னைப் பார்த்தது.

'வா' என்று சைகை செய்தேன். தம்பதிகள் என்னைப் பார்த்து விட்டு கண்ணை
மூடிக் கொண்டார்கள்.

'என்ன?" என்று சைகை காட்டினேன்.

எதோ ஒரு மொழியில் எதோ ஒன்று சொன்னது.

பொட்டலத்தைப் பிரித்துக் கொடுத்தேன். உள்ளே வெண்மையான கிளிஞ்சல்கள்.

அதன் மொழியில் எதோ சொல்லிக் கொண்டே ஒவ்வொரு கிளிஞ்சலாக எடுத்து
என்னுடைய கைப்பையில் போட்டது. ஒன் டூ த்ரீ ஆக இருக்கலாம்.

எல்லாக் கிளிஞ்சல்களையும் என்னுடைய பையில் போட்டதும், கீழே உட்கார்ந்து
கொண்டு வெல்வெட் துணியை விரித்து வைத்துக் கொண்டது.

உன்னுடைய பையில் இருப்பதை எடுத்து என்னுடைய துணியில் போடு என்று
சைகை செய்தபடியே எதோ சொன்னது.

இந்த ஆட்டம் ஒரு கால் மணி நேரத்திற்கு மேலே நீடித்தது.

'மிஸ்டர்.திருக்குமரன்'

நான் எழுந்தேன்.

'ஃபஸ்ட் ரைட். லாஸ்ட் லேப் சார். ரிப்போட்ட டைரெக்டா நாங்க உங்க ஆஃபீஸுக்கு அனுப்பிடுவோம். நோ நீட் டூ வெய்ட்'

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி மதியம் மூன்று ஆகிவிட்டிருந்தது.மிதமான வெயில். தூரத்தில் கரையும் காகங்கள். என்னுடைய கைப்பையில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தேன்.

அந்தக் குழந்தையின் அத்தனைக் கிளிஞ்சல்களும் என்னுடைய பையில் இருந்தன.

நான் சென்ற பிறகு அந்தக் குழந்தை அவளது அம்மா அல்லது அப்பாவின் காலைப் பிறாண்டிக் கொண்டிருந்திருக்கும். அவர்கள் சோர்வில் கண் மூடி சாய்ந்திருப்பார்கள். வழக்கம் போல.

No comments:

Post a Comment