Wednesday, September 26, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஆயுட்காலம்

'எத்தனை நாள் தான் இப்படி இருப்பாய்?"
என்று கேட்கிறார் ஒரு வாடிக்கையாளர்.
நான் திருப்பிக் கேட்டேன்.
'பூனையின் ஆய்ட்காலம் எது வரை?"
'பத்து ஆண்டுகள்" என்றார்.
"இல்லை' என்றேன்.
'பதினைந்து ஆண்டுகள்" என்றார்.
'இல்லை' என்றேன்.
'எது வரை?" என்று திருப்பிக் கேட்டார்.
'அது நாயின் வாயிலிருந்து தப்பும் வ்ரை.' என்றேன்

Friday, August 31, 2012

பதிலுரைத்தல்

'டேய்..எங்கடா போனான்..ஐயோ..ராமா..முடியலடா பொவாக்கு'
'மொதல்ல ஒன்ன ஓதச்சா சரியாப் போகும்டா கேனக்கூதி..ஒத்த ஆயிர ரூவா நோட்ட எடுத்துக் குடுத்துப்போட்டு நேயப் புண்ட பேசுறியா..'
'நா என்னத்தடா கண்டேன்...இப்புடிப் பண்ணுவான்னு..உருண்டு போயி வந்திருந்தா கூட இன்னேரத்துக்கு
வந்திருக்கோணுமேடா..ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு..ஆண்டவா'

ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்டது.

'நைக் நண்பர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு இறகுப் பந்து போட்டி..மின்னொளியில் மிகச் சிறப்பானதொரு முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....அடுத்து ஆடப் போகும் அணியினர்..யாரப்பா..பிபிசி அணி
சார்பாக பாபு,மணிகண்டன்..அப்புறம்..சுயேட்சை ஆட்டக்காரர்கள் பெருமாள், முருகேசன் என்கிற கோணவாய் முருகேசன்..உடனடியாக களத்திற்கு வரவும்'

'யார்ரா இது..'
'ராஜேந்திரண்டா'
'எந்த ராஜேந்திரன்'
'பொக்லீன் ராஜேந்திரன்'
 'அவனா..இதுக்கு முன்னாடி பேசிட்டிருந்தது'
'தெரியல...இன்னிக்கி அத்தன பேருக்கும் சிவராத்திரிதான்'

பொவாக்கு தம்பியும், கம்பளத்தான் முருகையனும் சுடுகாட்டில், ரங்கசாமி செட்டியார் சமாதியின் மேல் உட்கார்ந்திருந்தார்கள்.

ஒரு மணி நேரத்தில் ஆளுக்கு பத்து பீடியாவது புகைத்து விட்டார்கள்.

'இந்தத் தீவாளி நமக்கு தாண்டா..பெரிய நோம்பி..
' பெரிய ஆப்பா வெச்சிட்டானேடா பொவாக்கு'
'பொலம்பாதடா..வருவான்..போலீஸ் கெடுபிடி வேற..வண்டி பஞ்சர் கிஞ்சர் ஆயிப்போச்சோ என்னமோ'
'ஆயி போச்சோ..ஒன்னுக்கு போச்சோ..எவங்கண்டான்'

'சவுண்ட் சர்வீஸ்' மாரியப்பன் தள்ளாடியபடி வந்தான்.

'மாரிப்பனுக்கு தாண்டா நோம்பி..தாயோளி காலயிலிருந்து குடிச்சுட்டே இருக்கான்....'

'என்றா பொவாக்கு ..நோம்பி பலமாட்ருக்குது'
'மாரி..நக்கல் புண்ட பன்னிட்ருந்தியன்னா எட்டி மிதிச்சு போடுவேன்'
'ஏண்டா இப்ப நா என்றா கேட்டுப் போட்டேன்'
 பொவாக்கு தம்பி பதில் சொல்லவில்லை.பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான்.

'சரக்கு ஒன்னும் சரியில்லடா பொவாக்கு..ரெண்டு கோட்டர் குடிச்சாச்சு மப்பே ஏற மாட்டிங்கிது'
'மாரி இதுக்கு மேல எதுனா பேசுன..பாரு..நீ உக்காண்ட்ருக்குற சமாதியிலயே ஒன்ன பொதச்சு போடுவேன்'

'ஏண்டா முருகா..என்றா பொவாக்கு பயங்கர கோவத்துல இருப்பானாட்ருக்குது..'
'நானும் கோவத்துலதாண்டா இருக்கேன்..மூடிட்டு குடி'
'என்னாச்சுரா?" - கட்டிங்கை குடித்து விட்டு கனைத்துக் கொண்டான்.

' அந்தத் தாயோளி கிட்ட பணத்தக் குடுத்துப் போட்டு ரெண்டு பேரும் பொச்ச சொறிஞ்சுட்டு உக்காண்ட்ருக்குறோம்'
'யாரு கிட்ட குடுத்த?"
'தேக்கம்பட்டி சின்னசாமி கிட்ட..ஆயிர ரூவா நோட்டு..ஒரே நோட்டு..சலவ நோட்டு..வாங்கிட்டுப் போயி ஒரு மணி  நேரத்துக்கு மேல ஆச்சு..எங்க போனான்னே தெரியல...போன் பண்ணா தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்னு வருது..தொடுப்பு வீட்டுக்கு போயிட்டானோ என்னமோ'
'அப்ப சரக்கே அடிக்கிலியா'
'இல்லடா..மண்ட புண்ட எல்லாம் காஞ்சு போயி உக்காண்ட்ருக்குறோம்'
' அவன் கிட்ட எதுக்கு குடுத்த?"
'வண்டியில வந்தான்..சரி சுருக்கா வாங்கிட்டு வந்துருவான்னுட்டு குடுத்தேன்..சில்ற பண்ணிக் குடுக்கலாமுன்னு பாத்தா எல்லா கடையிலயும் தேர்க் கூட்டம்..சரின்னுட்டு குடுத்தேன்'

'பெருமாளும், முருகேசனும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..பிபிசி அணியினரின் அதிரடித் தாக்குதல்களை மிகத் தெளிவாக சமாளித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்..'

'மிகத் தெளிவாக ஆடிக் கொண்டிருக்கிறார்களா? நாங்க மூனு பேருந்தான் கொஞ்ச நேரத்திக்கி முந்தி கெணத்துக்குப் பக்கத்தில ஒக்காந்து
ஆளுக்கொரு கோட்டர் குடிச்சோம்..அப்ப தெளிவாத்தான் ஆடுவாங்க' - சொல்லிவிட்டு மாரியப்பன் கெக்கெக் என்று சிரித்தான்.

மிச்சமிருந்த சரக்கை அடித்து விட்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு மாரியப்பன் கிளம்பினான்.

'டேய் பொவாக்கு..வா..அங்க போயி யாருக்கிட்டயாவது விசாரிக்கிலாம்.மணி ஒம்பாதாகப் போகுது.'
' இரு ஒரு பத்து நிமிசம் பாக்கலாம்'
'டேய் ஒரு வேள போலிஸ் கிட்ட சிக்கிட்டானோ என்னமோ?'
'சிக்கிருந்தா அவ்ளோதான்..அந்தத் தாயோளிங்க நோம்பி நாளதுவுமா வந்து நின்னுட்டு உயிர வாங்குறானுங்க'
'எங்க நிக்கிறாங்க?"
' இந்தப் பக்கம் சக்கரப் பேட்டரி கிட்ட..அந்தப் பக்கம் முடுக்கந்துற சுடுகாடு கிட்ட'
'சின்னசாமி குடிச்சிருந்தானா?"
' இல்ல ..பாத்தா அப்புடித் தெரியல...'

'மைதானத்தை அளந்து அளந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்..ஆட்டத்தில் அனல் பறக்கிறது'

'இந்தத் தாயோளி கிட்ட மைக்கக் குடுத்துட்டு பெரிய ரவுசுப் புண்டையா இருக்குது..அளந்து அளந்து ஆடுறாங்களாம்..குடிச்சுப் போட்டு ஆடுனா அளக்காம..கேனக்கூதி'

'ஏண்டா..ஒரு வேள குடிச்சுப் போட்டு அங்கியே ப்ளாட் ஆயிட்டானா?'
'அந்தளவுக்கு பெரிய குடிகாரனாடா அவன்...'
'ஒனக்குத் தெரியாது பொவாக்கு...ஆசனூர்ல அவம்பண்ண  கூத்த நீ பாத்திருந்தியன்னா தெரியும்...'
'இது எப்ப?'
..'.போனா அமாசைக்கி...ஏக ரவுசு பண்ணிப் போட்டான்...கேனப்புண்ட வரிசையே போட்றான்..சும்மா இர்ரான்னா...தாயோளி வரிச போட்றான்...போயி அவனப் படுக்க வச்சுட்டு வர்ரதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சு..அப்புறம் கொஞ்ச நேரங்கழிச்சுப் பாத்தா ஆளக் காணோம்..ஆளுக்கொரு பக்கம் தேட்றோம்..கடசீல பொதருக்குள்ள படுத்துட்ருக்குறான்'

மாரியப்பனும், கள்ளபார்ட் கவுண்டரும் தள்ளாடியபடி நடந்து வந்தார்கள்.

' என்னங் கவுண்டரே..நோம்பி பலமாட்ருக்குது'
'அவருக்கென்னடா..புள்ளயா..குட்டியா..மைனராட்டமா என்ன ஜபர்தஸ்து'
'இல்றா பொவாக்கு..ரெண்டு கோட்டர் குடிச்சேன்..மப்பு தரத்தட்டு மப்பு..வூட்டுக்குப் போனா உங்க அத்த கொன்னே போடுவா'
மாரியப்பன் இரண்டு டம்ளர்களில் க்வாட்டரை சரி பாதியாக பிரித்து ஊற்றினான்.
'கவுண்டரே..அடிச்சது போதாதா.."
'இல்றா பொவாக்கு ..பைனல் டச்..'
'பைனல் டச்? ' - பொவாக்கு தம்பி அவரையே வெறித்துப் பார்த்தான்.
'என்றா..கரண்ட்டு கம்பத்த நாய் பாத்த மாதிரி பாக்குற'
'அவனவனுக்கு கட்டிங்குக்கு வழியில்ல..உங்களுக்கு பைனல் டச் கேக்குதா?"
'என்றா ஆச்சு...?"
' சின்னசாமி கிட்ட பணத்த குடுத்துப் போட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல தேவுடு காத்துட்ருக்குறாங்க'
'கவுண்டரே..இந்தக் கதய திரும்ப என்னால சொல்ல முடியாது...பணமிருந்தா ஒரு நூறு ரூவா கொடுங்க'
'அத்த கிட்ட எரநூறு வாங்குனேன்..தீத்துப் போட்டேன்...கையில சல்லி பைசா இல்ல'
'டேய் மாரி..உங்கிட்ட இருந்தா குட்றா...'
'முருகா...சத்தியமா மொதல்ல குடிச்ச கோட்டர் மட்டுந்தான் எங்காசு...இதெல்லாம் மத்தவங்க வாங்கிக் குடுத்ததுதான்..
பெருமாளும், முருகேசனும் இந்த ஆட்டத்துல ஜெயிச்சா ஒரு கோட்டர் வாங்கித்தர்றான்னாங்க..அதிய வேணா குடுக்கறேன்'
'அந்தத் தாயோளிங்க குடிச்சு போட்டு ஆடுறானுங்க..ஜெயிச்சா மாரிதான்'

அந்த நேரம் பார்த்து ஜமுக்காளக் கவுண்டர் தவ்வி தவ்வி வந்தார்.

'அப்பா...ஆண்டவா..தெய்வம் குறுக்க வருதுடா..பொவாக்கு..கவுண்டரே பணமிருந்தா ஒரு நூறு குடுங்க'
'ஏண்டா..ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடி கேக்கப்படாது?
'கேட்ருந்தா எரநூறு ரூவாயா குடுத்திருப்பீங்களா?"
'ஐநூறா குடுத்திருப்பேன்.'
'பத்து நிமிசத்துக்கு முன்னாடி யாருக்கு குடுத்தீங்க?"
'சின்னசாமி கிட்ட'
'யாருகிட்ட...?"
'சின்னசாமிடா..நம்ப தேக்கம்பட்டி சின்னசாமிக்கி'
'அவங்கிட்டயா..? அந்த தெட்டுப்பட்ட தேவிடியாப் பையந்தான் எங்ககிட்ட ஆயிர ரூவா நோட்ட வாங்கிட்டு மொந்த வாழப்பழம் குடுத்துட்டு போயிட்டான்..இப்ப எங்க அவன்?"
'பத்து நிமிசத்துக்கு முன்னாடி மேட்டுப்பாளயம் வண்டி ஏறிப் போனான்'
'எங்க?"
'எங்கியா? மேட்டுப்பாளயத்துக்குத்தான்...மாமனார் வூட்டுக்குப் போறான்னு சொல்லிட்டு போனான்'
'பொவாக்கு...கடப்பாறய எடுத்து வாயில சொருகிட்டாண்டா'
'டேய் முருகா..டென்சன் ஆகாத...இந்த வண்டி பவானிசாகர்ல கா மணி நேரம் டிப்பன் பண்றதுக்கு நிக்கும்.இப்ப போய் சேந்திருக்கும்..நாம வண்டி இருந்தா வாய்க்கா மேட்டுல வுட்டு கோடேபாளயம் பிரிவுல டிச்சிரலாம்..புண்டவாயா..
கையில சிக்கட்டும்..ங்கோயாள ஓக்க'
'டேய் ...ஏகப்பட்ட வண்டிய புடிச்சிட்டாங்க...யாரு வண்டி குடுப்பாங்க'
' என்ற வண்டிய எடுத்துட்டுப் போங்கடா' - கள்ளபார்ட் கவுண்டர் போதையில் குளறினார்.
'வண்டி எங்க?"
'அக்கட்ட?"
'அக்கட்டயின்னா? எங்க?"
'ரோட்டுக்கு அக்கட்ட'
முருகையனும், பொவாக்கு தம்பியும் சிறுத்தை மாதிரி சீறிப் பாய்ந்தார்கள்.

மளிகைக் கடையின் முன் அவருடைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டி நின்றிருந்தது.

பொவாக்கு தம்பி என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் எனத் தெரியாமல் கிக்கரை மிதிக்க ஆரம்பித்தான். வண்டி ஸ்டார்ட் ஆகிற வழியைக் காணோம்.

'தள்றா' என்று பொவாக்கை ஓரங்கட்டிவிட்டு முருகையன் கிக்கரை மிதிக்க ஆரம்பித்தான்.

'என்னடா..ஸ்டார்ட் ஆக மாட்டிங்கிது..கவுண்டரு அவருக்கு ஊத்திட்டு வண்டிக்கு பெட்றோல் போட மறந்துட்டாரா?"

'டேய் முருகா..வண்டியில  சாவி இல்லடா'
'ங்கோயாள..'
இருவரும் திரும்பவும் சுடுகாட்டுக்கு விரைந்தார்கள்.
கள்ளபார்ட் மட்டையாகிவிட்டார்.

எழுப்பினார்கள். 'ம்..ம்ம்' என்று முனகினார்.

'கவுண்டரே...சாவி குடுங்க'
'சாவியா? என்ன சாவி?"
'வண்டி சாவி'
' எந்த வண்டி சாவி?"
'உங்க வண்டி சாவி தான்'
' அதுவா..அது..எங்க வச்சேன்னு தெரியலயே..அது...' - குளறியபடி பட்டாபட்டியில் கை விட்டுத் துழாவினார்.
'டேய்..சாவிய ஆட்டம் நடக்குற எடத்துல யாருகிட்டயோ குடுத்தேன்..'
'யாரு கிட்ட குடுத்தீங்க?"
'யாருகிட்ட? ஞாயவகம் வர மாட்டீங்கிது..சாவிய மப்புல தொலச்சுப் போடுவேன்னு யாரு கிட்டயோ குடுத்தேன்'

இருவரும் திரும்பவும் சிறுத்தை மாதிரி சீறினார்கள்.

பொக்லீன் ராஜேந்திரன் வர்ணனை செய்து கொண்டிருந்தான்.

'ஆட்டம் மிக நெருக்கமான கட்டத்திற்கு வந்து விட்டது..இரு அணியினரும் சளைக்காமல் ஆடிக் கொண்...."

'டிருக்கிறார்கள்" என்பதை அவன் முடிக்கும் முன்னரே பொவாக்கு அவன் கையில் இருந்த மைக்கை பிடுங்கி அறிவிப்பு செய்ய ஆரம்பித்தான்.

'அன்பார்ந்த பெரியோர்களே ! கள்ளபார்ட் கவுண்டர் தன்னுடைய வண்டி சாவியை இங்கே தான் யாரிடமோ கொடுத்தார் என்று
சொல்கிறார். யாரிடம் கொடுத்தார் என்று அவருக்குத் தெரியவில்லை. தெரியும் நிலையிலும் அவர் இல்லை. ஆகவே சாவியை
வாங்கியவர் யாராக இருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்'

ராஜேந்திரன் புதுப் பெண்சாதியை யாரோ கையைப் பிடித்து இழுத்தது போல கொதித்து மைக்கை பொவாக்கு தம்பியிடம் இருந்து பிடுங்கினான்.

கரியன் அவர்களை நோக்கி வந்தான்.

'டேய் பொவாக்கு..அவரு டோபாஸ் கிட்டதான் சாவியக் குடுத்தாரு'
'அவனெங்கே?"
"மப்பு எச்சாப் போச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முந்திதா வூட்டுக்குப் போனான்"

மறுபடியும் சிறுத்தைப் பாய்ச்சல்.

டோபாஸ் தங்கவேலுவின் வீட்டுக்குப் போனார்கள்.
' என்ன பொவாக்கு?" - மனைவி கேட்டாள்.
' எங்க அவன்?"
' ஏம் பொவாக்கு..எதுனா பிரச்சினையா?"
'அதெல்லாம் ஒண்ணுமில்ல...எங்க அவன்?"
' உள்ள தூங்கிட்ருக்காரு'

விரைந்து சென்று எழுப்பினார்கள்.
அவனும் தன் பங்குக்கு குளறினான்.

' டேய் டோபாஸ்..கள்ளபார்ட் கவுண்டர் உங்கிட்ட அவரு வண்டி சாவியக் குடுத்தாராமா..எங்கடா சாவி?"

அவன் போதையில் தலையை வரட்டு வரட்டென்று சொறிந்தான்.

'அதுவா?..அத சின்னசாமி கிட்ட குடுத்தேன்?"
'எந்த சின்னசாமி?"
'தேக்கம்பட்டி சின்னசாமி கிட்ட"

இருவரும் ஒரு வார்த்தை பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

இறகுப்பந்து போட்டி மைதானத்தை தாண்டி திரும்பவும் சுடுகாட்டுக்கு நடந்தார்கள்.

பொவாக்கு தம்பி சட்டைப்பையை துழாவினான். பீடி இல்லை.

சவுண்ட் சர்வீஸ் மாரியப்பன் ரோட்டை அளந்து கொண்டு வந்தான்.

இருவரையும் குறுக்காட்டி நிறுத்தினான்.

'டேய் பொவாக்கு...பெருமாளும், முருகேசனும் ஆடுனாங்களே..ஜெயிச்சாங்களா?"

'ஊம்புனாங்க" என்று பொவாக்கு கத்தியது , ஒலிபெருக்கியில் ஒலித்த பொக்லீன் ராஜேந்திரனின் வெண்கலக் குரலையும் தாண்டி எதிரொலித்தது.

Saturday, June 2, 2012

சென்றதினி...

'அட உடப்பா..கரியா...திரும்பத் திரும்ப அதையே சொல்லிகிட்டு..இந்தா இத அடி'

சல்பட் கிளாஸை வேண்டா வெறுப்பாக வாங்கி ஒரே மடக்கில் குடித்தான்.

'இல்ல கவுண்டரே..சத்தியமா அவரு சாகல..என்ன நம்புங்க..நீங்களாவது நம்புங்க..எந்தத் தாயோளியும் என்ர பேச்சக் கேக்க மாட்டீங்கிறான்..நெஜமா அவரு சாகல'

கள்ளபார்ட் கவுண்டருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 ' சரி உடப்பா..உடு..உடு.எல்லாரும் ஒரு நா போய்ச் சேரவேண்டியதுதான்
இன்னொரு கிளாஸ் ஊத்தட்டா' - கரியன் பதில் சொல்லவில்லை.

ஊற்றிக் கொடுத்தார். ஒரே மடக்கில் குடித்து விட்டு' அவரு சாகல' என்று திரும்பவும் ஆரம்பித்தான்.

கவுண்டர் ' அடப் போடா..கிறுக்குத் தாயோளி' என்று கத்திவிட்டுக் கிளம்பினார்.

கரியனுக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. யாரும் அவன் சொல்வதை நம்பவில்லை.

இறந்தது ராஜண்ண செட்டியார். அவரை வீட்டில் கிடத்தியிருந்தார்கள். சுற்றிலும் ஒப்பாரிக் குரல்கள்.

அண்டை அயலில் சீட்டாட்ட ஜமாக்கள். இடும்பைக் கூர் வயிற்றுக்கு சாப்பாடு தயாரிக்க அண்டாக்கள் என்று அமளி துமளியாக இருந்தது. செட்டியார் கலியாணம் செய்து கொள்ளவில்லை.ஒண்டிக்கட்டை. சொத்து நிறைய இருந்தது.

அவருடைய உடன் பிறந்தவர்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு பூத் பூத்தென்று அழுதார்கள். அழுகைக்கேற்ப பங்கு கிடைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள் போல. உச்சகட்டமாக கடைசித் தங்கை இரண்டு முறை மயக்கம் போட்டு விழுந்தாள். அதைக் கண்ட மூத்தவள் ' எங்கண்ண போன எடத்துக்கே நானும் போயிர்ரேன்' என்று 'ஆப்ரே..ஊப்ரே' என அழுது அரற்றினாள். இளையவன் ' அண்ணா..அண்ணா' என்று தலையில் அடித்துக்
கொண்டு துடித்துக் கதறினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரியனுக்கு தீயணைப்பு வண்டியின் குழாயிலிருந்து பீறிட்டுக் கொண்டு வரும் தண்ணீர் போல கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

வீட்டுக்குள் போய் ' அட பொடக்காளியில பொறந்த தாயோளிங்களா..அவரு சாகலடா..கேனக் கூதிகளா' என்று ஏக வசனத்தில் ஏச ஆரம்பித்தான்.
கரியனை யாரும் திட்டவில்லை. அவன் செட்டியாருடைய ஜிகிரி தோஸ்து. அவர் போன துக்கத்தில் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டார்கள்.

எதிர்தரப்பில் இருந்து எந்த ஏச்சும் வராதது கண்டு கரியன் வெளியே வந்து பீடி ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.

யாராவது ஒருவர் நம்புகிறார்களா.? அவனுக்கு வாயிலிருந்து 'தாயோளிகள்' என்ற வார்த்தையைத் தவிர எதுவும் வரவில்லை.

'பொவாக்கு' தம்பி மெதுவாக வந்து அவருக்கருகில் உட்கார்ந்து கொண்டு பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

'அட உடு மாமா' என்று தோளைத் தட்டினான்.

'எந்திரிச்சிப் போடா நாறத் தாயோளி' என்று கரியன் சீறிய சீறலில் தம்பி அரண்டு எழுந்து ஓடிப் போனான்.

அவனும் செட்டியாரும் தான் காலையில் சல்பட் போட கரோலின்(எ) ஜப்புலு ஜாகைக்குப் போனார்கள். மதியம் திரும்பி வரும்போது அடித்த உச்சி வெயிலில் நா வறண்டது. வியர்த்துக் கொட்டியது. எங்கே விழுந்தார்கள் என்று கரியனுக்கு நினைவில்லை. விழித்த போது இருட்டாக இருந்தது. ஒப்பாரிக் குரல் கேட்டது. ஆட்கள் லபோ திபோ வென கத்திக் கொண்டிருந்தார்கள்.
தான் எங்கே இருக்கிறோம் என்றே அவனுக்கு சற்று நேரம் தெரியவில்லை. கண்களை கசக்கிக் கசக்கிப் பார்த்தான். படுத்திருந்த அறையை விட்டு வெளியே வந்தான். தான் இருப்பது செட்டியார் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்று தெரிந்தது. அவருடைய வீட்டிலிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கிறதே என்று ஓடினான்.

அப்போதிருந்துதான். ' அவரு சாகலடா' என்ற புலம்பலை ஆரம்பித்தான். ஒப்பாரிக் குரலைக் கேட்ட போதெல்லாம்   அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. உள்ளே போவதும் செட்டியாரைப் படுக்க வைத்திருந்த கட்டிலைப்
பிடித்துக் கொண்டு கதறுவதும், யாராவது எதாவது சொன்னால் வாய்க்கு வந்தபடி ஏசுவதும், பின் வெளியே வருவதும் பீடி புகைப்பதும், சல்பட் போடுவதும், ' அவரு சாகலடா' என்று புலம்புவதும்,தலையிலடித்துக் கொள்வதும், ஆறுதல் சொல்ல வந்தால் திட்டுவதுமாக இருந்தான்.

கரியனைப் பற்றி அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். போதை ஏறி விட்டால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம்
எதுவும் தெரியாது. செட்டியாருடைய இறப்பு தாங்காமல் போதையில் உளறுகிறான் என்றே அனைவரும் நினைத்தார்கள்.

'அடேய்...அவரு எவ்வளவு சல்பட் போட்டாருன்னு எனக்குத்தாண்டா தெரியும்..மப்பு அதிகமாயிப் போச்சுடா..எழுப்பி உடுங்கடா.இன்னொரு கிளாஸ்
..ஒரே கிளாஸ்..படாபட்...படாபட்..எழுப்பி உடுங்கடா ' - கரியன் இருட்டில் தடுமாறினான்.

ஒரு வலிய உருவம் அவனைப் பிடித்து உட்கார வைத்தது.

'கரியா..ஏண்டா..சும்மா இருக்க மாட்டியா?"

' நீ யார்ரா தாயோளி..சொல்றா தாயோளி' என்று கேட்டவன் செவிட்டில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

அடி வாங்கியவன் ' டேய்..நான் ராமசாமிடா"

' எந்த சுன்னிக்கி பொறந்த ராமசாமிடா நீ....தாயோளி'

' மைனர் கவுண்டன் மகன்டா..ஓமியோபதி ராமசாமிடா'

மறுபடியும் ஓங்கி ஒரு அறை விழுந்தது. ' மொதல்ல ஒன்ன இந்த ஊர உட்டு தொரத்தணுண்டா தாயோளி...' ராமசாமி பலவிதமான குத்துகள் வாங்கிய பின்னரே அவனை கரியனிடம் இருந்து பிரிக்க முடிந்தது.

பத்து பேர் கரியனை தூக்கிக் கொண்டு போய் ஒரு அறையில் அடைத்து வைத்தார்கள்.

மணி பத்து ஆகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லா சடங்குகளும் முடித்து புதைக்க எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

கரியன் கதவை பலமாக உதைக்கலானான். உதை தாங்காமல் கதவு பிய்த்துக் கொண்டு விழுந்தது.

அவனை எல்லோருமாக இழுத்துப் பிடித்தார்கள். முதன் முறையாக அழுதான். கண்ணீர் விட்டுக் கதறி அழுதான். 'அவரு சாகலடா..எழுப்பி உடுங்கடா' - கத்துவதற்கு அவனிடம் தெம்பு இல்லை.

ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டான். பெரிய மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டப்பட்டது.( திருமணமாகாத ஆண்கள் இறந்தால் அவர்களை மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி எடுத்துப் போவது வழக்கம்).

செட்டியாரைத் தூக்கித் தொட்டிலில் வைத்தாயிற்று. முன்னும்,பின்னும் நான்கு பேராக எட்டு பேர் மரத்தை சுமந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

பெண்கள் கொஞ்ச தூரம் ஓடி வந்து சக்கரவட்டமாக கட்டிக் கொண்டு ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக் கொண்டு அழுதார்கள்.
கரியன் ஒரு விசித்திரமான காரியம் செய்தான்.

செட்டியாருடைய உள்ளங்கால்களை தன் விரல்களால் சொறிந்து குழந்தை போல கிச்சு கிச்சு மூட்ட முயற்சித்தான். பலத்த காற்று வீசியது. தாரை தப்பட்டைகள் அதிர்ந்தன. அவனைத் தள்ளி விட்டார்கள். திரும்பவும்  அவருடைய உள்ளங்கால்களை தன் விரல்களால் சொறிந்தான்.

'டேய் அவரு கால் வெரல் அசையுதுடா..நிறுத்துங்கடா..நிறுத்துங்கடா.." - மூங்கில் மரத்தைப் பிடித்துக் கொண்டான்.

யாரோ ஒருவர் அவனை அடித்தே விட்டார்கள். தளராமல் பின்னாலேயே ஓடினான். சுடுகாடு வந்து விட்டது. அவனை யாரும் செட்டியாரை நெருங்க விடவில்லை.

தலையில் அடித்துக் கொண்டான். கூட்டத்தைச் சுற்றி சுற்றி வந்தான்.

' டேய்..நிறுத்துங்கடா..அவரு சாகலடா...ஐயோ பத்து சுன்னிக்கி பொறந்த பசங்களா..நிறுத்துங்கடா.."

தாளாமல் மயக்கம் போட்டு விழுந்தான்.

மூக்கில் தண்ணீர் ஏறியபோது அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அவனை ஆற்றில் முக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கை கால்கள் குளிரில் நடுங்க ஆரம்பித்தன.தூக்கி கரையில் அமர்த்தினார்கள்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தான். இப்போது எங்கே இருக்கிறோம் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை.

பொவாக்கு தம்பி அவருடைய தலையைத் துவட்டி விட்டான். ஒரு கிளாஸ் சல்பட்டை நீட்டினான். ஒரே மடக்கில் குடித்தான். ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான்.

' செட்டியார  நடு ராத்திரியே பொதச்சாச்சு மாமா'

'அவரு சாகலடா' என்று கரியன் சொல்லவில்லை. சொன்னாலும் என்ன பிரயோஜனம்.?

புதைத்து ஆறு மணி நேரம் கழித்து யார்தான் சாகாமலிருப்பார்கள்?

Friday, May 4, 2012

அமுக்கான்

களக்காடு வேலப்பன் குடும்பச் சண்டை காரணமாக தன் மனைவியை வெட்டிச் சாய்த்து விட்டு இரு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு , துரத்தி வந்த ஊர்க்காரர்களிடம் இருந்து தப்பி நெடுந்தூரம் ஓடி வந்து, இனி முடியாது என்ற நிலையில் தன் வேட்டியைக் கொண்டு தூக்குப் போட்டுக் கொண்ட  விட்டத்தின் கீழ் திம்மன் குடி போதையில் படுத்திருந்தான்.


திம்மனுக்கு வயது நற்பதைத் தொட்டுவிட்டது. நல்ல குடிகாரன்.நல்ல வேலைக்காரன்.அருமையானபட்டைச் சாராயம். கொழுத்த இரையை விழுங்கிய மலைப்பாம்பு மாதிரி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.


அவன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போயிருந்தாள். வசதியாகப் போயிற்று. தின்னாமல் விட்ட கருவாடு சிதறிக் கிடந்தது. செவ்வெறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.சிலது அவனையும்
மொய்த்துக் கொண்டிருந்தன.கடித்தால் தெரியாத அளவுக்கு நல்ல போதை.அவன் வீடு அது. எத்தனையோ பேர் எவ்வளவோ சொல்லியும் திம்மன் அந்த வீட்டை காலி செய்யவில்லை.


ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்ட வீட்டிலே பெண்டாட்டி,பிள்ளைகளோடு வாழலாகாது.நல்லதல்ல.கேளப்பா திம்மா!.புத்தி சொன்னவர்கள் அவன் தெளிவாக இருக்கும் போது சொன்னால் ஆயிற்று.போதையில் இருக்கும் போது சொன்னால்?.ஆயிற்றா?.திம்மன் கூலிக்கு வேலை செய்பவன்.சூத்துக் கழுவ தண்ணி இல்லாத ஊரிலே ஆத்துத் தண்ணிக்கு எங்கே
போவது.அடி மாட்டு விலைக்குக் கிடைத்த வீடு.அவன் காலி செய்யவில்லை.


தினமும் வேலை முடிந்ததும் அவன் மனைவி வீட்டுக்குப் போய் விடுவாள். திம்மன் நல்ல சுதி ஏற்றிக் கொண்டு தள்ளாடி நடந்து வருவான். சமையலில் கருவாடு தினமும் உண்டு.சில சமயம் அரை வயிறு உண்பான். அதுவும் மனைவிஅதட்டினால். இல்லையென்றால் ஒரு வாய் இரண்டு வாய்.அவ்வளவுதான்.விட்டத்தின் கீழ் படுத்துக் கொள்வான்.
அங்கே படுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒரு சுகம்.


மறுநாள் காலையில் அவனால் எழ முடியவில்லை. கை கால்கள் எல்லாம் பத்து பேர் சேர்ந்து உருட்டுக் கட்டையால் அடித்தது போல் வலித்தது.உருண்டான்.தலைகீழாக புரட்டிப் போட்ட ஆமை போல தவித்தான். நா வறண்டது. பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து இருந்த மிச்ச நீரை குடித்து பெருமூச்சு விட்டான்.இடது கையை ஊன்றி எழுந்தான். இடறி விழுந்தான்.மறுபடியும் எழுந்தான்.தூணைப் பிடித்துக் கொண்டான்.தலையைச் சாய்த்து பெருமூச்செறிந்தான். வலது கையால் முகத்தை அழுந்தத் துடைத்தான்.கண்களைக் கசக்கினான்.பின் மண்டை வலித்தது.ஜன்னலைத் திறக்க முயன்றான்.கொண்டி மாட்டிக் கொண்டது.தள்ளாடி வந்து வாசற்கதவைத் திறந்தான். பஞ்சு போல மிருதுவான வெயில்.
திண்ணையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான்.வழியில் போன ஒரு பொடியனிடம் சொல்லி வரக்காப்பி வாங்கிக் குடித்தான். மயக்க்ம் தீர்ந்தபாடில்லை.திண்ணையிலேயே சாய்ந்து விட்டான்.


வெயில் சுள்ளென்றது.எழுந்து கை கால்களை விறைப்பாக்கி கொண்டு பொடக்காளி பக்கம் நடந்தான். கோவணத்தோடு நின்று தண்ணீரை எடுத்து பொட பொடவென்று தலையில் ஊற்றிக் கொண்டான்.தொட்டி தண்ணீர் தீர்ந்ததும் துவட்டிக் கொண்டு  ஜிட்டக்கியின் வீடு நோக்கி நடந்தான்.


ஜிட்டக்கி கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்தாள்.


'ஜிட்டம்மா..பசிக்கிது..'


இரண்டு கம்பு அடையுடன் நேற்றிரவு வைத்த ஆட்டுக்கறிக் குழம்பை சுவைத்து உண்டான்.


'ஏண்டா திம்மா...ஒடம்புக்கு சொகமில்லியா?"

'ஆமா..ஒடம்பெல்லாம் திண்டு திண்டா வலிக்கிது.."

'எளவு அந்த வூட்ட காலி பண்ணியும் தொலயுன்னா கேட்டாத்தானே?'

'இப்ப அதுக்கென்ன..புள்ள குட்டிகளோட நல்லாத்தான இருக்கேன்.."

'அதுக்கில்லடா...வீடு ஒத்தக் கட்டு வீடு..விட்டம் ஒத்த விட்டம்..அதுவும் வேலப்பன் செத்த விட்டம்..அமுக்கான் அமுக்கிப் போடும்டா"

'கத வுடாத ஆத்தா...' - திம்மனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.இடது கையை தலைக்கு வைத்து திண்ணையில் படுத்துக் கொண்டான்.வயிற்றைப் பிசைந்தது.


'கத இல்ல திம்மா...விட்டத்துல எப்பவுமே அமுக்கான் இருக்கும்டா'- கஞ்சாவை இழுத்தாள்.


'கேளு...ஒரு காலத்துல ஒருத்தன் வீடு கட்ட நெலம் வாங்குனானாம்..அந்த நெலத்துல இருந்த ஒரு புங்க மரத்த வெட்டி விட்டத்துக்கு செதுக்கி வச்சானாம்.அது ஒருத்தன் தூக்கு போட்டு செத்த மரம்.அடிக்கால் நாட்றதுலர்ந்து, கருங்கல் வக்கிறது,செம்மண் பூசுரதுன்னு எல்லாத்தயும் நல்ல நேரத்துலயே செஞ்சானாம்..வீடு கட்ட அறுவது வருஷம் ஆச்சாம்..ஆனா விட்டத்தமட்டும் தப்பா எமகண்டத்துல வெச்சானாம்..அவன் கெட்ட நேரம்..தெரியாமத்தான் வெச்சிருப்பான்..வீடு புகுந்து மொத நா ராத்திரி
விட்டத்துக்கு கீழே பஞ்சு மெத்த போட்டு தூங்கிக்கிட்டு இருந்தானாம்.அவம்பொண்டாட்டி கால அமுக்கி விட்டுக்கிட்டிருந்தா..
அவனும் நல்லா தூங்கிப் போட்டான்..அப்ப ஒரு கனாக் கண்டானாம் ...அதுல ஒரு கொரல் கேட்டுச்சாம் ' அமுக்கவா..தள்ளவா' னு..இவனும் நல்ல தூக்கத்துல பொண்டாட்டி தான் கேக்குறளோனு ' அமுக்குன்னு' சொன்னானாம். விட்டம் இடிஞ்சு ஒரேடியா அமுக்கிப் போட்டுதாம்.அவனும் ரத்தங்கக்கி செத்துப் போனானாம்...தெரியுதாடா திம்மா..எளவு அந்த வூடு ஆகாது திம்மா..இது எங்கம்மா எனக்கு சொன்னது..இப்ப நாஞ்சொல்றேன்...உஞ்சவுரியமப்பா..திம்மா...அடேய் திம்மா..எந்திரிடா'.


உலுக்கினாள். திம்மன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தோடு திண்ணையிலிருந்து பொத்தென்று விழுந்தான்.


திம்மனை அமுக்கான் தான் அமுக்கி விட்டதென்று ஊர் பேசிக் கொண்டது. இருந்தாலும் இருக்கலாம் யார் கண்டது?

Sunday, April 22, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - மறுதலிப்பு

வாயில் குதப்பிய வெற்றிலையோடு வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கும் என்னிடம் தன் அழுக்கான வலது கையை நீட்டி பசிக்கிறது என்று தன் இடது கையை வயிற்றில் தடவி இரந்து நிற்கும் சிறுமியைக் காணும் போது சுரக்க மறுக்கிறது நான் பெறாத பிள்ளைகளுக்காக மார்பில் தேக்கிய முலைப்பால்.

Saturday, March 31, 2012

கூப்பர்

கனத்து,சிவந்து,பாரமாகிப் போன மார்புகளைக் கொண்ட அப்பெண்மணி, அந்த மதுபானக் கடையின் வடக்கு மூலையில் இடது கையைத் தன் மழமழப்பான கன்னத்தில் ஊன்றிக் கொண்டு, சிற்பிக்கோ, தேர்ந்த ஒவியனுக்கோ, ஊடு பொருளாகக் காட்சி காட்டுவது போல அமர்ந்திருந்தாள்.

இரண்டு வயதுக் குழந்தைக்குப் பிதுக்கி ஊட்டிய தயிர்சாதம் வாயிலிருந்து வழிவதைப் போல கண்ணில் சோகம் வழிந்து கொண்டிருந்தது.

அத்துவானக் காட்டில் காயும் நிலவைப் போல அவள் சோகத்தை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.அதைப் பற்றி அவள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.

லாங் ஐலண்ட் காக்டெயிலை மிடறாக விழுங்கிக் கொண்டிருந்தாள்.கையில் மால்பரோ சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

கனத்த மார்பு நிறைய சோகம் ததும்பியது போல அடிக்கடி பெருமூச்சு விட்டாள். ஊற்று நீர் போல சோகம் திரும்ப ஊறியது. இடது கையில் எந்த விரலிலும் மோதிரம் இல்லை.தனியாக வசிக்கிறாளோ என்னவோ.ஆண் நண்பர்கள் இருக்கலாம்.

இளைஞன் ஒருவன் அவளுடைய மேசையை நெருங்கினான்.

'நான் இங்கே அமரலாமா?" என்று பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டினான்.
'ஓ! தாராளமாக!"

கணவனிடம் சண்டை போட்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மனைவி, வீட்டுக்குத் திடீரென வந்த தன் தாயைக் கண்டதும் கண்ணீரை மறைத்துக் கொள்வதைப் போல தன் சோகத்தை மறைக்க முயன்றாள்.

அறிமுகம் செய்து கொண்டார்கள்.

"நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் ஒன்று கேட்கலாமா?"

'தாராளமாய்க் கேளுங்கள்"

'நீங்கள் பெரும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது'

அடிபம்பை அழுத்தியது போல கொஞ்சம் சோகம் வெளிவந்தது.

'ஆம்'
'அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?"
'கூப்பர் இறந்து விட்டான்'
சிறிய அமைதிக்குப் பிறகு சொன்னான்.
'உங்கள் இழப்புக்கு என் அனுதாபங்கள்'
'நன்றி'
நாய்க்குத் தீனி போடுவது போல அந்த வாத்தைகள் வந்து விழுந்தன.
'எப்படி நடந்தது?"
'ஒரு வாரமாக தீராத வயிற்றுப்போக்கு.மருத்துவரிடம் காட்டியும் பலனில்லை.நேற்று..' மார்புகள் விம்மின.தேற்றினான்.
'கூப்பர் போல சிறந்த நண்பனைப் பார்க்காவே முடியாது.என் மேல் அளவிட முடியாத அன்பு.இந்த உலகில் எனக்கு இருந்தது அவன் மட்டும் தான். இப்போது அவனும் இல்லை.'
குலுங்கி அழ ஆரம்பித்தார்.தேற்றினான்.

'கூப்பரை உங்களுக்கு எத்தனை நாட்களாகத் தெரியும்?"
'கடந்த இரண்டு வருடங்களாக'
அடக்கம் செய்தாகிவிட்டதா என்று கேட்க நினைத்தவன் கேட்கவில்லை.

இரண்டு செய்லர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'இழப்புகள் இயல்பானது.வருத்தப்பட வேண்டாம்.கடவுள் விதித்தது அவ்வளவுதான்.'

'அதை நினைத்துதான் மனதைத் தேற்றிக் கொள்கிறேன்'
'நன்று!என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீர்களா?"
மெலிதாகச் சிரித்தார்.

'அதற்கென்ன தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன்.உங்கள் அன்புக்கு என் நன்றிகள்'
'மகிழ்ச்சி.நீங்கள் எங்கே பணி புரிகிறீர்கள்'
'நான் ஒரு செவிலி. நீங்கள்?"
'ஒரு பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணி புரிகிறேன்'
'ஓ!ஒரு நிமிடம் இருங்கள்.நான் என் கைகளைக் கழுவிக் கொண்டு வருகிறேன்.சிகரெட் சாம்பலில் என் கைகளை வைத்து விட்டேன்'
'சரி'
ஒரு நிமிடம் கழித்து தன் கனத்த மார்புகள் குலுங்க ஓடி வந்து நாற்காலியை அவனுக்குப் பக்கத்தில் மெலிதாக இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

'உங்களுக்கு மணமாகிவிட்டதா?"

'இல்லை. நான் ஒண்டிக்கட்டைதான்.எந்தப் பெண்ணுக்கும் என்னைப் பிடிப்பதில்லை.ஏனோ தெரியவில்லை.உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?"

'பிடித்திருக்கிறது.நல்ல மனிதர் நீங்கள். உங்களை யாருக்கும் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்'

'நல்லவனாக இருப்பதால்தானோ என்னவோ'

தன் வலது கையை அவளது இடது கை விரல்களுடன் சேர்த்துக் கொண்டான். விடுவிக்க அவள் முயலவில்லை.

'வேறு ஏதாவது பானத்திற்கு ஆணை கொடுக்கட்டுமா?"
'உங்கள் இஷ்டம்'

பணிப்பெண்ணை அழைத்து இரண்டு யெகமைஸ்டர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?"

'ஹோஜன்வில்'
'கெண்டகியா? லிங்கன் பிறந்த ஊர்தானே?"
'ஆம்.நான் கூட அவர் பிறந்த நாளில் தான் பிறந்தேன்'
'பிப்ரவரி பனிரெண்டா?'
'ஆம்.நீங்கள்'
'நான் இந்த ஊர்தான்.லிங்கனுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்"
'தெரியும்.'

அவர்களுடைய உதடுகள் அனிச்சையாக முத்தமிட்டுக் கொண்டன.

இரண்டு கோல்ட்ஸ்லாகர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'உங்கள் வேலை எப்படிப் போகிறது?'
'பல் துலக்குவது போல ஒரே மாதிரியான வேலை. என்ன செய்வது?"
'என் கதையும் அதேதான்.'
நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அவளுடைய இடது கன்னத்தில் முத்தமிட்டான்.பல நாள் பசித்தவன் தன் தட்டில் இடப்பட்ட அப்பத்தை ஏற்றுக் கொள்வது போல ஏற்றுக் கொண்டாள்.

'இன்றிரவு என்ன செய்கிறீர்கள்?"
'ஒன்றுமில்லை'
'என் வீட்டுக்கு வருகிறீர்களா?"
'ஓ! தாராளமாக"

இறுக்கி அணைத்தபடி மதுபானக் கூடத்தை விட்டு வெளியேறினார்கள்.

அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

படுக்கையில் அவளுடைய கனத்த மார்புகளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு கேட்டான்.

'கூப்பரை பார்க்க ஆசையாக இருக்கிறது.புகைப்படம் ஏதாவது இருக்கிறதா?"

'ஓ!"

தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.

அவளும் கூப்பரும் இரவில் கட்டிலில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

கூப்பருக்கு நல்ல பொசுபொசுவென்ற செம்பட்டைத் தலைமுடி. மெலிதான மீசை.கோதுமை நிறம். ஒளிரும் கண்கள். நான்கு கால்கள்.

Tuesday, February 7, 2012

ஆயிரத்தில் ஒருவன்

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

அந்த மிகப் பெரிய அலுவலக வளாகத்திற்கு வெளியே இருக்கும் கடைகளுக்கு சாப்பிடுவதற்காயும்,டீ குடித்துவிட்டு புகைப்பதற்காயும் வெளியே வரும் பணியாளர்களை நோக்கி, ' சார்!ப்ளீஸ் சார்' என்றவாறு ' பதினைந்து லட்சம் தனி நபர் கடன்.சுலபத் தவணை.உடனடியாக' என்று அச்சடிக்கப்பட்ட தாளை நீட்டியபடி இருந்தார் அவர்.

பசி எடுத்தது. எதிரே இருந்த டீக் கடைக்குப் போய் ஒரு போண்டா சாப்பிட்டு விட்டு டீ குடித்துவிட்டு வந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டு தொடர்ந்தார். ' சார்! ப்ளீஸ் சார்"

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

செக்யூரிட்டி வந்து சத்தம் போட்டான்.' தும் உதர் ஜாவோ! யஹா கடே ரஹேனே கி ஜரூரத் நஹி ஹே! தும் ஜாவோ' வளாகத்தை ஒட்டி வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் நின்று கொண்டிருந்தவர், எதிரே இருந்த கடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டார்.

'யோவ்! கொஞ்சம் தள்ளி நில்லுய்யா" கடைக்காரனின் சத்தத்திற்கு இணங்கி சற்றுத் தள்ளி மண்டையைப் பிளக்கும் வெயிலில் நின்று கொண்டார்.

மதிய நேரம் ஆக ஆக பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். ' சார்!ப்ளீஸ் சார்"

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

கூட்டம் குறைந்ததும் பசி எடுப்பதை உணரத் தொடங்கினார். பக்கத்துக் கடைக்குப் போய் ஒரு ஆறிப் போன போண்டாவை சாப்பிட்டு , டீ குடித்து விட்டு வந்து வெயிலில் நின்று கொண்டார்.உட்கார அங்கே எதுவுமில்லை.

சுவற்றில் சாய்ந்து கொண்டார்.தாகம் எடுத்த போது கைப்பையில் இருந்த தண்ணீர்ப் போத்தலில் இருந்து கொஞ்சம் தண்ணீரை மிடறாக விழுங்கினார்.

ஒருவன் அவர் கொடுத்த தாளை வாங்கி இரண்டு எட்டு வைப்பதற்குள் கீழே போட்டு விட்டு போனான்.

காற்றில் பறந்த அந்தத் தாளைப் பிடித்து கையில் இருந்த கட்டோடு சேர்த்துக் கொண்டார்.

'தெரியாமத் தூக்கிப் போட்டுட்டுப் போனா பரவால்ல சார்.இஷ்டம் இருந்தா லோன் வாங்கப் போறாங்க.வாங்கி கண்ணுக்கு முன்னாடி போட்டுட்டுப் போனா என்ன சார் அர்த்தம்" என்று பக்கத்தில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்.

மாலை வேளை வந்ததும் மிச்சமிருந்த தாள்களை கைப்பையில் போட்டுக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி தளர்வாக நடக்க ஆரம்பித்தார்.

அடுத்த நாள் காலை சுமார் ஏழு மணியளவில் அந்த அலுவலக வளாகத்திற்கெதிராகவும், கடைகளுக்கெதிராகவும் வழியெங்கும் சிதறிக் கிடந்த ' தனி நபர் கடன் தாள்களை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், மற்ற
குப்பைகளோடு பெருக்கி கூடையில் போட்டார்கள்.

சுமார் எட்டு மணியளவில் அவர் வளாகத்திற்கு எதிரே இருந்த கடையில் ஒரு டீயும் போண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்து இளவெயிலில் நின்று கொண்டார். தன் ' தனி நபர் கடன்' தாள்களுடன்.

Friday, January 20, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஏழைகள் வாழும் வீடு

கருவளையத்தில் இடுங்கிய கண்கள்.
ஒட்டிப் போன கன்னங்கள்.
உலர்ந்து போன உதடுகள்.
துவண்டு போன கழுத்து.
தொங்கிப் போன மார்புகள்.
வற்றிப் போன முலைகள்.
சுருங்கிப் போன வயிறு.
தூர்ந்து போன தொடைகள்.
சலித்துப் போன பெண்மை.
"என் மூலதனம் இதுதான்.
அடிக்காதீர்கள் ஐயா" என்று
எவ்வளவு கதறினாலும்
கேட்பதில்லை காவலர்கள்.
பசித்த வயிறுக்காகவும்,
காயத்துக்கு போட வேண்டிய கட்டுக்காகவும்
உடலெங்கும் பொங்கி வழியும் உஷ்ணத்தோடும்,
சொருகும் கண்களோடும்,
சொல்ல முடியாத வலியோடும்
கட்டிலில் காத்திருக்கும் என் மேல்
படரும் வாடிக்கையாளர்
கிழிந்து ரத்தம் தோய்ந்த என்
உதடுகளின் மீது தர முனையும்
முத்தத்தைத் தவிர்க்க
என் முகத்தைத் திருப்பி அவர் முகத்தை
என் மார்போடு அணைத்துக் கொள்கிறேன் இதமாக.
அவரோ முயங்குகிறார் மூர்க்கமாக.