Friday, September 23, 2011

பிலாத்து சொன்னார்....

"இந்த எளிய மனிதரை ஏன் கொல்லச் சொல்லி என்னை வற்புறுத்துகிறீர்கள். இவர் மேல் நான் எந்தக் குற்றமும் காண்பதற்கில்லை.இவருக்கு மரணதண்டனை வழங்க முடியாது.யாரங்கே! இவரை அவிழ்த்து விடுங்கள். நீங்கள் அனைவரும் போகலாம்."

சொல்லிவிட்டு உள்ளே போக யத்தனித்த பிலாத்துவின் கால்களைக் கட்டிக் கொண்டான் பரபாஸ்.

' மேதகு பிலாத்து அவர்களே ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்.நீங்கள் செய்திருக்கும் காரியத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகிறது தெரியுமா. அவருக்கு பதிலாக நான் கொல்லப் படப்போவதால் இப்படி சொல்கிறான் என்று நினைத்து விடாதீர்கள்.இந்தத் தீர்ப்பினால்
எத்தனையோ காத்திருப்புகள் வீணாகிவிட்டன.அவரை சிலுவையில் அறைய உத்தரவிடுங்கள் மாட்சிமை பொருந்திய பிலாத்துவே!"

'உளறாதே பரபாஸ். என்ன காத்திருப்புகள் வீணாகிவிட்டன?"

'என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் மேன்மை தாங்கிய பிலாத்துவே. அவர் சுமக்க சிலுவை, அவர் சூட முள் க்ரீடம், அவர் உடலை கிழிக்க சாட்டைகள், சிந்துவதற்கு ரத்தம்,கை, கால் நரம்புகளை,தசையை,எலும்பை ஊடுருவி சிலுவையோடு பொருத்த ஆணிகள் எல்லாம் காத்திருக்கின்றன.

அவரை அடித்துத் துவைத்து இழுத்துச் செல்வதற்கு சேவகர்கள், அவர் நடக்கப் பாதை,அவரை அறைந்த சிலுவையைத் தாங்க கோல்கதா மலை,அறைந்த பின் வலது விலாவில் குத்துவதற்கு ஈட்டி எல்லாம் காத்திருக்கின்றன.

இடிந்து தூள் தூளாவதற்கு ஹெரோது மன்னனின் கோவிலும்,அவர் உயிர்த்தெழுவதற்கு 72 மணித் தியாலங்களும் காத்திருக்கின்றன.

உயிர்த்தெழுந்த பின் அது அவர் தானா என சோதிக்க சந்தேகப் பேர்வழி தோமஸ், குற்றவுணர்ச்சி காரணமாகத் தூக்கு மாட்டிக் கொள்ள யூதாஸ் ஆகியோர் காத்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டு நாடு நாடாக , உயிரையும் உடமையும் காத்துக் கொள்வதற்காக ஓட யூத இனமே காத்திருக்கிறது.கொல்லப்படுவதற்காகவே பிறக்க ஏராளமான யூதக் குழந்தைகள் காலத்தின் கட்டற்ற பெருவெளியில் காத்திருக்கின்றன.

மதம் ஒன்று தோன்றி பின்னாளில் பலவாகப் பிரியக் காத்திருக்கிறது.
பின்பற்றுவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.
நம்பிக்கைகள்,,பிரார்த்தனைகள் எல்லாம் காத்திருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் காத்திருக்காத காலம் இதை எல்லாம் நிறைவேற்றக் காத்திருக்கிறது. கருணை காட்டுங்கள் மேதகு பிலாத்து அவர்களே!

பிலாத்து திரும்பி ஆர்ப்பரிக்கும் கூட்டத்தையும், கால்களைக் கட்டிக் கொண்டிருக்கும் பரபாஸையும் பார்த்தார்.

இந்தப் பாவத்தில் எனக்கு பங்கு இல்லை என்பதற்கு சாட்சியாக இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டிவிட்டு புனித நீரில் கையைக் கழுவிக் கொண்டு சொன்னார்.

'அப்படியே ஆகட்டும்' என்று.

அது அப்படியே ஆனது.

Saturday, September 17, 2011

திரவம்

' எம்பது ரூவாயா? ரொம்ப அதிகந்தம்பி!"
'இங்க பாருங்கய்யா..நாங்களே போலீசுக்கு தெரியாம இத விக்கிறோம்.
தெரிஞ்சுதுன்னா உரிச்சிரிவாய்ங்க.இஷ்டம் இருந்தா வாங்குங்க..இல்லன்ன
போய்ட்டே இருங்க"

'கள்ளபார்ட்' ரங்கசாமிக் கவுண்டர், தன் சகாவைப் பார்த்தார். இருவருடைய
கைகளும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தன.காலை,மாலை ஆறு மணியளவில் ஏற்படும் நடுக்கம்.குடிக்காவிட்டால் வரும் நடுக்கம்.

சுற்றுலா வந்த இடத்தில் கோயிலுக்கு போயே தீரவேண்டும் என்று இவர்கள் இருவரைத் தவிர எல்லோரும் ஜபர்தஸ்து பண்ணி ஊருக்கு திரும்பும் வழியில் இங்கே கொண்டு நிறுத்திவிட்டார்கள். கோயிலுக்கு போவதை விட்டு விட்டு கடை, கடையாக போய் மெதுவாக விசாரித்தார்கள்.
'சரக்கு எங்க கிடைக்கும்?'

பலசரக்கு கடை,டீக்கடை,ஹோட்டல், உச்சமாக தேங்காய்ப் பழக் கடையிலும் விசாரித்து ஒருவனைப் பிடித்தார்கள். அவனோ இருப்பது ஒரே பாட்டில். விலை எண்பது என்கிறான்.

வேறு வழியில்லை.கவுண்டர் மெலிதாக நடுங்கும் கைகளால் தன் பட்டாபட்டியில் இருந்து பத்து ரூபாய்த் தாள்களாக உருவிக் கொடுத்தார்.

கொடுத்த கையோடு பாட்டிலைத் திறக்க முயற்சி செய்தார்.

'ஐயா சாமி..புண்ணியமாப் போகும்..மறவாப் போய்க் குடிங்கப்பு' என்று
விரட்டினான் அந்த எண்பது ரூபாய் பார்ட்டி.

கவுண்டர் தன் சகாவைக் கூட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக
பஸ்ஸுக்கு விரைந்தார். பின் சீட்டில் அமர்ந்து அவசரமாகத் திறந்தார்.
இரண்டு தம்ளர்களில் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கை ஊற்றினார். பாட்டிலை மூடி இடுப்பில் சொருகிக் கொண்டார். இரண்டு தம்ளர்களிலும் கொஞ்சம் தண்ணியை கலக்கினார். வழக்கமாக பூமிக்கு விடும் மூன்று சொட்டு தீர்த்தத்தையும் விடாமல் அப்படியே இருவரும் வாயில் வைத்துக் கவிழ்த்தார்கள்.

அந்தத் திரவமானது நாக்கைத் தாண்டி தொண்டையில் இறங்கியபோது
ப்ப்ப்பூபூபூச்ச்ச்ச்ச்ச் என்ற பலத்த சத்தத்துடன் இருவரும் எடுத்த வாந்தி பஸ்ஸின்
நடுப்பகுதி வரை பாய்ந்தது.

*************************************************

'டேய் பழன்ச்சாமி..டேய்..எந்திரிடா.மணி அஞ்சாச்சு.இன்னும் என்னடா தூக்கம்?"

கவுண்டர் ஊருக்கு வெளியில் இருந்த தனியார் மதுபானக் கடையின் கதவுக்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தார்.

அவருடைய சகா ஜமுக்காளக் கவுண்டர் பொறுமையிழந்து கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்.

இருவருடைய கைகளும் இப்போது பலமாக நடுங்க ஆரம்பித்திருந்தன.

சில வினாடிகள் கழித்து கதவுக்கு பின்னால் ஒரு தூக்கக் கலக்கக் குரல் கேட்டது.

'ஆரு?"

'நாந்தாண்டா..கள்ளபார்ட்டு'

'என்ன இவ்வளவு நேரத்துல..மணி என்னாச்சு?"

'எல்லாம் எந்திரிக்கிற நேரந்தான்...கோட்டரு ஒன்னு குடு.. சீக்கிரம்'

கை நடுக்கம் குறைந்து சம நிலைக்கு வர அரை மணி நேரம் பிடித்தது.

கடையின் படிக்கட்டில் இருவரும் சாய்ந்து உட்கார்ந்தார்கள்.

முன் தினம் மாலையில் வாந்தி எடுத்ததிலிருந்து அவர்கள் பட்ட துயரம்
சொல்லி மாளாது.

கூட வந்தவர்களின் ஏச்சைத் தொடர்ந்து, பஸ்ஸை சுத்தமாகக் கழுவி விட்டது முதல்,ராத்திரி சாப்பிடாமல் , தூக்கம் வராமல், நடுங்கும் கைகளோடு
எப்போது ஊருக்கு போய்ச் சேருவோம் என்ற தவிப்போடு , ட்ரைவரிடம் போய்
இன்னும் எத்தனை மணி நேரம் ஆகும் என்று பத்து நிமிடத்துக்கொரு முறை
விசாரித்துக் கொண்டு, ஆந்தை மாதிரி விழித்திருந்தது வரை.

கள்ளபார்ட் மெதுவாக தன் இடுப்பிலிருந்த பாட்டிலை எடுத்து மங்கிய குண்டு
பல்பின் வெளிச்சத்தில் பார்த்தார்.

கருஞ்சிவப்பு நிறத்தில் அமைதியாக பாட்டிலில் அடங்கியிருந்தது.

ஒரு தம்ளர் கூட இல்லை அதிலும் பாதி குடித்ததற்கே இந்தப் பாடு படுத்திவிட்டது.

' யோவ்..அந்தக் கெரகத்த எந்த மசுத்துக்கு இன்னும் வெச்சுட்ருக்கற..தூக்கி வீசு'-ஜமுக்காளக் கவுண்டர் சத்தம் போட்டார்.

கள்ளபார்ட் மெதுவாகத் திறந்து முகர்ந்து பார்த்தார்.

ஒரு விரக்திப் புன்னகை அவருடைய மேல்,கீழ் உதடுகள் இடது பக்கம் ஒன்று
சேருமிடத்தில் தோன்றியது.

மொபட்டில் வந்த 'டோபாஸ்' தங்கவேலு இருவரையும் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி இறங்கி வந்தான்.

'என்ன மாமா? டூரெல்லாம் பலமா..ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க கடக்கி?"

'பலந்தான்..பலந்தான்'

அவருடைய கையில் இருந்த பாட்டிலைப் பார்த்து விட்டுக் கேட்டான்.

'இதுவா..போயிருந்த எடத்துல ஒரு இந்திக்காரன் கிட்ட வாங்கினோம்..
பாட்டிலு எம்பது ரூவா..ஆனா அருமையான சரக்கு..அடிக்கிறியா..அரக் கோட்டரு அதிலயும் ஆளுக்குப் பப்பாதி தான் அடிச்சோம்...சரியான மப்பு'

ஜமுக்காளக் கவுண்டரின் முகத்தில் கலவர ரேகைகள் படர்ந்தன.

'சரி குடுங்க"

கள்ளபார்ட் தன் பையில் இருந்த பிளாஸ்டிக் தம்ளரில் மிச்சமிருந்த மொத்தத்தையும் ஊற்றி தண்ணீரைக் கலந்து நீட்டினார்.

ஒரே மடக்கில் குடித்து விடுபவன் போல தலையை அண்ணாந்து வைத்துக் கொண்டு கவிழ்த்தான்.

அந்தத் திரவமானது நாக்கைத் தாண்டி தொண்டையில் இறங்கியபோது
ப்ப்ப்பூபூபூச்ச்ச்ச்ச்ச் என்ற பலத்த சத்தத்துடன் டோபாஸ் எடுத்த வாந்தி மொபட்
மொத்தத்தையும் நனைத்து விட்டது.

அவர்கள் இருவருக்கும் வாய் வழியே வந்தது, இவனுக்கு இலவச இணைப்பாக
மூக்கு வழியேயும் வந்தது.

அடுத்த ஐந்து நிமிடங்களில் பொங்கிப் பொங்கி, குமுறிக் குமுறி, ரோட்டின்
இரண்டு பக்கமும் பாய்ந்து பாய்ந்து வாந்தி எடுத்தான். காலையில் பால்
வயிற்றில் அப்படியொரு திரவத்தை குடித்தால் யாருக்குத்தான் வராது.

அவன் கண்கள் கலங்கியிருந்தன. அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.

ஜமுக்காளக் கவுண்டர் அவனுடைய தலையைப் பிடித்துக் கொண்டு கள்ளபார்ட்டை நோக்கி சத்தம் போட்டார்.

'யோவ் அறிவு கெட்டக் கூதி...வெவரப் புண்ட இருந்தா இந்த மாதிரி செய்வியா..கேனக் கூதி'

கள்ளபார்ட் கவுண்டர் உரத்துச் சிரித்தார். கண்ணில் நீர் வரச் சிரித்தார்.

சிரித்து விட்டு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு சொன்னார்.

'இந்த ஒலகத்துல ஒரு பாட்டில் டீ டிக்காசனை எம்பது ரூவா குடுத்து வாங்குன ஒரே இளிச்சவாய்க் கூதிக நாமதாண்டா ஜமுக்காளம்'

Friday, September 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -- பெய்தல்

அரை நூற்றாண்டுக்கான
அன்பை
அந்த நேரத்தில்
பொழிகிறார்
குடை மேல் மட்டும்
அதிகமாகப் பொழியும்
மழை போல