Friday, October 21, 2011

கிழவியின் மார்பும்,வயதானவருடன் உடலுறவும்.

மேற்கண்ட குறிச்சொற்களைத் தேடிக் கொண்டு இரண்டு
ஆண்மீக மெய்யன்பர்கள் என்னுடைய வலைப்பக்கத்திற்கு வந்திருக்கிறார்கள்.

வயதானவருடன் உடலுறவு - இந்தக் 'குறிச்'சொல்லில் இருக்கும் 'எழுச்சி'யை என்னால் உணர முடிகிறது.
கிழவியின் மார்பு - என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வருகிறவர்கள் , கதைளையும் ,கவிதைகளையும்( அப்படி என்றுதான்
நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்) படிக்கத்தான் வருகிறார்கள் என்ற என் நினைப்பில்
ஒரு மணல் லாரியையே கவிழ்த்த அந்த பக்தகோடிகள் எங்கிருந்தாலும் வாழ்க!!

Thursday, October 6, 2011

நன்னம்பிக்கை முனை

'சவுண்ட் சர்வீஸ்' மாரியப்பன் தன் முதல் அடிப்பொடியுடன் கோவிலில் பலவண்ண அலங்கார விளக்குகளை அமைப்பதில் மும்முரமாக இருந்தான். மற்ற இருவரும் ஊரின் முக்கிய சந்திப்புகளில் ஒலி பெருக்கி கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்.

கோவிலுக்கு அருகிலிருக்கும் மைதானத்தில் இரண்டு ஆட்டாந்தூரிக்காரர்கள் ( நான்கு பெட்டிகள் கொண்ட சுழல் ராட்டினம்) , கம்பங்களை நிறுத்துவதற்கு குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஈயத்தில் வார்ப்படச் சிலைகளைச் செய்யும் அந்தியூர்க்காரர்கள் முன் தினம் இரவே வந்து விட்டிருந்தார்கள்.

பலூன் காரர்கள், சின்ன சின்ன பிளாஸ்டிக் பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருள் ஆகியவற்றை விற்பவர்கள், நடிகர்கள் , க்ரிக்கெட் வீரர்களின் வண்ணப் பட வியாபாரிகள், கம்ப்யூட்டர் ஜோசியக்காரர்கள், வளைய விளையாட்டுக்காரர்கள் ஆகியோர் காலையிலிருந்தே ஊருக்கு இரண்டு திசையிலிருந்து வரும் பேருந்துகளில் வந்து இறங்கிய வண்ணம்
இருந்தார்கள். இறங்கியவர்கள் ஆற்றோரம் இருக்கும் காபி, டிபன் கடையில் காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு கடை போட அவரவர்க்குத் தோதான இடங்களைத் தேடிச் சென்றார்கள்.

எதிர்பாரா விதமாக வந்த சர்க்கஸ்காரர்களுக்கும் ஊரின் ஒரு ஓரத்தில் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.

பெண்கள் அனைவரும் வீட்டைத் தூய்மைப் படுத்துவதில் தீவிரமாக இருந்தார்கள்.பரணில் இருந்த வெண்கலப் பாத்திரங்கள் அனைத்தும் வெளியே எடுத்து வைக்கப்பட்டு புளியினால் தேய்த்துக் கழுவப் பட்டு கவிழ்த்தப்பட்டன.

வெள்ளை அடிக்க ஆள் கிடைக்காமால் ஆளாளுக்கு கட்டைத் துடைப்பத்தால் சுண்ணாம்பை முக்கி எடுத்து கை போன போக்கில் வீட்டுக்கு பொலிவு சேர்த்தார்கள்.

பலசரக்கு கடைகளில் காலையில் இருந்தே நல்ல கூட்டம். பட்டியல் வைத்துக் கொண்டு ஆளாளுக்கு லபோ திபோ என்று கத்தி கடைக்காரர்களின் சுடு பேச்சிற்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள்.

ஆடவர்கள் வெகு மும்முரமாக செலவுக்கு வேண்டிய பணத்துக்காக கடைசி சேலையை நெய்து கொண்டிருந்தார்கள்.

இப்படி ஊர் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்
தன் சகாக்களோடு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார் 'ஜட்கா' ராமசாமி நாயக்கர்

***********************
இந்த வருடம் உட்டி( மூங்கில்) மரம் உயரம் அதிகமாக இருப்பதாகவும், ரொம்பக் கனப்பதாகவும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.கடந்த இரு வருடங்களாக சாமி சப்பரம் ஊர் சுற்றிக் கோவில் சேரும் போது யாரும் மரத்து மேலேறி, பத்தே கால் ரூபா , தேங்காய்ப் பழக் காணிக்கை வாங்கவில்லை. இந்த உயரம் இருந்தால் யார் ஏறுவார்கள் ? அடுத்த வருடமாவது உயரம்
குறைந்த மரத்தை நட வேண்டும் என்று காற்றில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஆண்கள், பெண்கள் , சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி உட்டி நடும் நிகழ்ச்சியைக் காண கோவிலின் முன் கூடிய வண்ணமிருந்தனர். ஒலி பெருக்கியில் ' ஆயர் பாடி மாளிகையில்'ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

குடிமக்கள் ஆற்றோரப் புல்வெளியில் அமர்ந்து தாக சாந்தி செய்து கொண்டிருந்தனர்.

அம்மாக்களின் இடுப்பில் அமர்ந்து கொண்டும், அப்பாக்களின் கையைப் பிடித்துக் கொண்டும் வரும் குழந்தைகள் பொம்மைக் கடையைக் கண்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்தன.

கட்டிளம் காளையர் கூட்டம் ஒன்று சர்க்கஸுக்கு முன்பாக நடக்கும் ரெக்கார்ட் டேன்ஸைக் காண விரைந்தது.

படுக்கப் போட்டிருந்த உட்டி மரத்தில் பலமான கயிறுகள் கட்டப்பட்டு நான்கு திசைகளிலும் திடகாத்திரமான ஆண்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள்,

கோவிலின் மேல் இருந்த இளைஞர் கூட்டம் ஒன்று மெதுவாக வடக்குத் திசை கயிறை இழுக்க மரம் குழியில் இறக்கப் பட்டு மெதுவாக மேலேறியது.

மத்தளக்காரர்கள் ஆவேசமாக மத்தளங்களை முழக்கினார்கள். கொம்பு வாத்தியம் பலமாக ஊதப்பட்டது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கூட்டம் ஒன்று மத்தாளச் சத்தத்திற்கு ஏற்றவாறு ஆடிக் கொண்டிருந்தது.

'ஜட்கா' ராமசாமி நாயக்கர் தன் சகாக்களோடு திங்கு திங்கென்று குதித்துக் கொண்டிருந்தார்.இடுப்பில் வேட்டி இல்லாமல்.

*********************************************
என்ன சொன்னாலும் அவர் சமாதானமாகவில்லை.

'அட வுடப்பா..எதோ சின்னப் பையன் சொல்லிப் போட்டான்னு இப்பிடி உம்முனு
உக்காந்துருக்க காலங்காத்தால..ஒன்ர மகந்தானே..வேற யாரா..ஆனாலும் நேத்திக்கி நீ பண்ணுனது கொஞ்சம் ஓவரு..ஆடு ..உன்ன ஆரு வேண்டாமுன்னு சொன்னது.ஆனா இடுப்புல வேட்டி இருக்கான்னு பாத்துப் போட்டல்ல ஆடோனும்..நீ பாட்டுக்கு ஜிங்கு ஜிங்குன்னு சிலுக்கு மாதிரி குதிக்கிற..என்ன இருந்தாலும் படிக்கிற புள்ளக..நீ கொஞ்சம் நாகரீகமா இருந்தாத்தான அவனுக்கு மரியாதி..காலேஜுக்கு போறானுக..நாலு எடம்,நாலு மனுசனுகள பாக்குறானுக..ஊருக்கு வந்தா ஜபர்தஸ்தா பேண்ட்,சட்ட
போட்டுகிட்டு திரியிரானுக..நீ இப்பிடி வேட்டி இல்லாம ஊரு கூடியிருக்கிற எடத்துல குதிச்சா அவனுக்கு ஒரு 'இது' வா இருக்காதா..சின்னப் புள்ளங்க மாதிரி நாமளும் இருக்கணுமின்னு நெனச்சா ஆகுதா..சரி..நேத்து உட்டி நிலுத்துறப்ப பாத்தியா..படிச்ச பசங்க அத்தன பேரும் சுத்தி நின்னு வேடிக்க பாக்குறானுகளே ஒழிய எவனாவது வந்து ஒதவி பன்னானா? கெழக்க இழுத்தா வடக்க போகுது..தெக்க இழுத்தா மேக்க போகுது உட்டிய நிலுத்துனதே ஊருல நெசவு பன்னிகிட்டு, தோட்ட வேலக்கி போய்க்கிட்டு இருக்குற பசங்கதா..அத கூட வுடப்பா..நம்ம அத்தனாரி சாமி..வக்காலோழி..காலயிலிருந்து
நம்ம கூடதான் சீட்டு ஆடிக்கிட்டு இருந்தான்..சாயந்தரம் பாத்தா..வெள்ள வேட்டி என்ன..சட்ட என்ன..அடேயப்பா..கஞ்சி போட்டு சும்மா மொட மொடன்னு..கழுத சுன்னி மாதிரி வெறச்சிகிட்டு நிக்கிது நாலு வருஷத்துக்கு முந்தி அவன் பண்ணாத அட்டுழியமா? இப்ப பாரு ..பையன் வேலக்கி
போறான்..கை நெறய சம்பாதிக்கிறான்..இவனும் கவுரவமா ஊருக்குள்ள வெள்ள வேட்டி சட்ட போட்டுகிட்டு ஜபர்தஸ்தா திரியிறான்...நம்ம காலத்துக்காவது இந்த நோம்பி எல்லாம் நடக்குது..இன்னும் பத்து வருஷங்கழிச்சு இதெல்லாம் நடக்குமா இல்லியானே தெரியாது..
நீ இப்ப என்ன பண்றியன்னா..சாயந்தரம் சாமி ஊர்வலம் போறப்ப..வெள்ள வேட்டி சட்ட போட்டுகிட்டு சும்மா ஜம்முன்னு..சாமிக்கு முன்னாடி கவுரமா போ..அவ்ளவுதான்..சின்னப் பையன் நாலு வார்த்த காரமாப் பேசிப் போட்டான்னு...நோம்பி நாளதுவுமா..இந்தா இதக் குடி..
எல்லாஞ்சரியாப் போகும்'

தன் சகா நீட்டிய பிராந்திக் கலவையை ஒரே மூச்சில் குடித்து விட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார் 'ஜட்கா' ராமசாமி நாயக்கர்.

******************************

சாமி ஊர்வலம் தொடங்கிய ஐந்து மணியிலிருந்து , நல்ல பிள்ளையாக
வெள்ளை வேட்டி சட்டையுடன், நெற்றியில் சந்தனமும்,குங்குமமும் துலங்க,
கமகமவென்று தன் சகாக்களோடு ஊர்வலத்துக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த 'ஜட்கா' ராமசாமி நாயக்கர், உறியடிக்காக ஊர்வலம் 'கிரஷர்' மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு நிறுத்தப்பட்டபோது மைதானத்துக்கு எதிரில் இருக்கும் ஜெபசிங் நாடார் கடைக்குப் பின்புறம்
போய் தாகசாந்தி செய்து கொண்டு வந்தார்.

பவானி TMK மெஹபூப் பேண்டு வாத்தியக் குழுவினரின் தலைமை ட்ரம்பெட்காரன் ஆரம்பித்தான். ' சித்தாட கட்டிக்கிட்டு..சிங்காரம் பண்ணிக்கிட்டு"

யாருடைய கால்களும் நிலத்தில் நிற்கவில்லை. ஜட்கா வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்தார். 'வித்தார கள்ளி கழுத்தில், முத்தாரம் போட்டானாம்' வரிகளை வாசித்த போது மடிப்பு அவிழ்ந்தது.

'அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்' வந்தபோது இறுக்கிக் கட்டியிருந்த வேட்டி மெல்ல அவிழ ஆரம்பித்தது.

கட்டக்கடைசியாக ' சித்தாட கட்டிக்கிட்டு..சிங்காரம் பண்ணிக்கிட்டு" என்று பல்லவியை திரும்பவும் அதி வேகத்தில் அவர்கள் வாசித்தபோது பட்டு ஜரிகை தரித்த வெள்ளை வேட்டி ஜட்காவின் இடுப்பிலேதான் இருந்தது.

ஆனால் வேட்டியின் நான்கு முனைகளும் அவருடைய வலது கையில் இருந்தது.