Saturday, November 20, 2010

மயக்கம் வந்தது

நான் வளர்க்கும் அடங்காப்பிடாரி பூனை என் மேல் விழுந்து பிறாண்டியபோது எனக்கு தூக்கம் தெளிந்தது. எதிரில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஆறு என்றது. அப்பாடா!! தப்பித்தேன்.பிழைத்தேன்.
எத்தனையோ தடவை முட்டக் குடித்து விட்டு  அடுத்த நாள் ஆபீஸுக்கு லேட்டாகப் போவது என் வழக்கம்.
ஏழு மணிக்கு எழுந்தால் கூட எட்டு மணிக்கு போய் விடலாம்.தெய்வாதீனமாக சீக்கிரமே முழிப்பு வந்துவிட்டது.
கையில் லேசான சிராய்ப்பு இருந்தது. நேற்று குடித்து விட்டு வரும் போது எங்கேயோ கீழே விழுந்திருப்பேன்.
குடித்து விட்டு கீழே விழுவது எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.நான்
எதற்கு கவலைப்பட வேண்டும். யாரும் விழுவதேயில்லையா என்ன. விழுகிறார்கள். சாகிறார்கள்.நான் எத்தனையோ
தடவை விழுந்திருக்கிறேன். எழுந்து கைகளை உதறி, ஒட்டியிருக்கும் மண்ணை துடைத்து விட்டு நெடுஞ்சாலையில்
நீதி கேட்டு நெடும்பயணம் போவது போல் போய்க்கொண்டேயிருப்பேன்.இதெல்லாம் அவனுடன் நான் குடிக்க போகும்
போதுதான் நடக்கிறது. அப்படித்தான் நினைக்கிறேன்.அவனால்தான் எனக்கு எப்போதுமே பிரச்சனை. அவனால்தான் என்று
நிச்சயமாக சொல்ல முடியாது.என்னுடைய தப்பும் அதில் கொஞ்சம் உண்டு, இல்லையென்று மறுக்க முடியாது.மறுக்கவும் கூடாது.

சரி.இனிமேல் அவனுடன் குடிக்க போகக்கூடாது. இல்லை.அப்படி ஒரேயடியாக நான் முடிவெடுக்க முடியாது.அப்படி முடிவெடுக்கவும்
 கூடாது. அவன் என் உற்ற நண்பன். நண்பன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்.எனக்கு என்ன செய்திருக்கிறான். நிறைய செய்திருக்கிறான்.
 பரிமளாவை நான் காதலிப்பது தெரிந்தவுடன் என்னுடைய மூன்று வருட பொறுமையை, ஆற்றாமையை, காதலை அவளிடம் நான் சொல்லாமல்
மறைத்து மறைத்து எனக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த கொடுமையைக் காணச் சகிக்காமல் பரிமளாவிடம் அல்லாமல் அவளுடைய ராங்கிக்காரி
அம்மாவிடமே சொல்லி எனக்கு நடுவீதியில் செருப்படி வாங்கிக் கொடுத்ததை நான் மறக்க முடியாது.அதுவும் நல்லதுதான்.பரிமளா.அவளும் அவள்
மூஞ்சியும். ஒரு நாள் நள்ளிரவில், நான் மிக்க போதையில் இருந்தபோது,வேட்டைப் பரிசல் ஓட்டும் குமரேசனுடன் கடைசி வண்டி எப்போது வரும்
என்று என்னிடமே கேட்டு விட்டு,ஊரை விட்டு ஓட்டம் எடுத்தவள்.நல்லா இருக்கட்டும்.எனக்கு நல்லதுதான் செய்தாள்.மகராசி.ஒருவேளை எனக்கு
அவளை கல்யாணம் செய்து வைத்திருந்தால். கல்யாணம் செய்தவுடன் அவள் யாருடனாவது ஓடிப் போயிருந்தால்.
எனக்குத்தான் அவமானம்.இல்லையா..? அவமானம்தான். கேள்வி என்ன?


சரி.அவளைப் பற்றி எனக்கென்ன.அவள் ஓட்டம் எடுத்து வருஷம் பத்து ஆகிறது.அதெல்லாம் ஒரு அவமானமா? தினம் தினம்
நான் அலுவலகத்தில் வாங்கும் வசைகளைப் பார்க்கும்போது அந்த அவமானமெல்லாம் போட்டுத் துப்பிய பாக்குதான்.எனக்கு குறையாமல்
வசவு வாங்குபவன் என் நண்பன்தான்.அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி என்பது எல்லா ஊரிலும் ஒன்றுதான்.
துக்கம், சோர்வு,அன்பு. அமைதி,அலட்டல்,ஆயாசம்,பாயாசம்,ஆபாசம்,அதிரசம் எல்லாம் எல்லா ஊரிலும் ஒன்றுதான்.இங்கேயும் அதே கதைதான்.
ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு பால்வாடி ஸ்கூலுக்கு போன நாள் முதல் டை கட்டிக் கொண்டு கம்ப்யூட்டரை வில்லுப்பாட்டுக்காரன் போல
ஜங் ஜங் என்று தட்டும் இந்த நாள் வரை அவன் என் பின் தொடரும் நிழலின் குரல். அவனுக்கு கவிதை வடிக்கத் தெரியும். கண்ணீர் விடத் தெரியும்.
கடிதம் எழுதத் தெரியும் அவனுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. அதற்குண்டான அத்தனை தகுதியும் அவனுக்கு இருக்கிறது. இருக்கிறது என்றுதான்
நான் நினைக்கிறேன். இல்லையென்றால் அவனுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன், அவனுக்கு முக்கியமான வேலை என்றவுடன் நேரடியாக மேனேஜரைப்
போய்ப் பார்ப்பானா ?. பார்க்கவே மாட்டான். அவனைப் பற்றி இந்த காலை நேரத்தில், விழிப்பு வந்த நேரத்தில் நினைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு எழவும் இல்லை.



ஆனால், ஒரு எழவும் இல்லை என்று ஒரேயடியாக அவனை வெறுத்து ஒதுக்கி விட முடியாது.
இப்படித்தான் போன தடவை அவன் மனைவி ஊருக்கு போன போது , கார் வாங்கியிருக்கிறேன் என்று என்னை ஒரு பாடாவதி பாருக்கு
கூட்டிப் போனான்.நான் மிதமிஞ்சிய போதையில் எங்கள் மேனேஜரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிட்டு ஓய்ந்தபோது, என் மேனேஜராகப் பட்டவர்
என் தோளைத் தட்டி, தான் சிகரெட் புகைக்க வேண்டுமென்றும், வத்திப் பெட்டி கிடைக்குமா என்றும் முகம் நிறைந்த புன்னகையோடு என்னை வினவினார்.
நான் மிக்க பீதியோடு அவருக்கு அவர் கேட்டதைக் கொடுத்தபோது மிக்க மகிழ்ச்சியுடன், நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். நான் மிக்க
போதைக்குழறலூடே உங்களுக்கு கீழ்தான் வேலை பார்க்கிறோம் என்று சொன்னவுடன், நான் ராஜினாமா செய்து விட்டேன். புதியவர் ஒருவர் வருவார் என்று சொல்லி விட்டு
சிகரெட்டைப் புகைத்தபடி நீண்ட நெடும் வீதியில் போய்க்கொண்டிருந்தார். அவருக்குப் பின் அவர் இடத்துக்கு வந்தவரைப் பார்த்து நாங்கள் சிரித்துக் கொம்மாளமிட்டோம்.
அதுவும் ஒரு நாளுக்குத்தான்.

ஒரு நாள்தான் என்று நினைக்கிறேன்.சரியாக நினைவில் இல்லை.அவர் எனக்கு சரியான சிம்மசொப்பனம்.
எனக்கு மட்டுமில்லை. என்னுடன் வேலை பார்த்த எல்லோருக்கும்தான்.யார் அவர்? எங்கே இருந்து வந்தார்? எதுவும் தெரியாது.முதல் நாளே
என்னையும் என் நண்பனையும் கூப்பிட்டு வைத்து வாங்கிவிட்டார். எதற்கு என்று எங்களுக்குத் தெரியவில்லை. அலுவலகத்தில் துடியான பசங்கள்
என்று நினைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி ஓன்றும் இல்லை. அவருக்கே தெரியும்,ஏன் அப்படி செய்தார் என்று அவரிடம் கேட்க திட்டமிட்டிருந்தோம்.
அவருக்கு குடிப்பழக்கம் இல்லையாதலால் அது சாத்தியமற்று போயிற்று.ஆனால் பின்னாளில் அது தெரிய வந்தது.
முதல் நாள் அவர் படியில் இறங்கி வரும்போது அ.முத்துலிங்கத்தின் " யானை பள்ளத்தாக்கில் இறங்கியது போல்" என்ற ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.
அவர் ஸ்தூல சரீரி.அதுதான் காரண்ம்.குடித்துவிட்டு, என்னையும் அறியாமல் உறங்கி, நேரம் தெரியாமல், சிறிது தாமதமாகப் போன ஒரு நாளன்று ,
அத்தனை பேர் முன்னும் வைத்து '' நீ சோறு தான் சாப்பிடுகிறாயா?என்ற பொருள்படும்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டார். என் நண்பன் ரோஷம் வந்து
 ' இல்லை டீயும், மெதுவடையும் சாப்பிட்டுவிட்டு வந்தோம்" என்று சொல்லிஒரு லோடு மண்ணை அள்ளி தலையில் கொட்டிக் கொண்டதுபோல் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டான்.

அவர் சாதரணமானவராகத் தெரியவில்லை. சலித்து சலித்து அத்தனை பேரையும் வேலையை விட்டு
விரட்டிக் கொண்டே இருந்தார்..என் நண்பனும் அதில் அடக்கம்.அவர் அதற்குத்தான் வந்திருக்கிறார் என்று அப்புறம்தான் எனக்கு தெரிந்தது.
அத்தனை பேர் போன பிறகும் வேலை எதுவும் முடக்கமானதாகத் தெரியவில்லை.அது பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தது.எனக்கு அவரை போகப் போக
பிடிக்க ஆரம்பித்துவிட்டது.ஆனால் அவருக்கு என்னை பிடிக்கவில்லை.ஏன் என்று தெரியவில்லை.என்ன எழவோ! அவருக்கு பிடித்தால் என்ன .
பிடிக்காவிட்டால் என்ன...என் வேலை ..நான் செய்கிறேன்...எனக்கு பிடிக்காவிட்டாலும், எனக்கு பிடிக்காத ஒரு வேலையைச் செய்தேன்.
செய்தேன் என்று சொல்லுவதற்கில்லை.  செய்து விட்டேன்.மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கினேன்.வட்டி இல்லாக் கடன். யாருமே வாங்கியிராத கடன்.
அவரிடமிருந்து அல்ல. அலுவலகத்தில் இருந்து. அது என்ன பிறன்மனை விழைதல் போல அவ்வளவு பெரிய குற்றமா? சத்தியமாக இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.
இல்லை என்றாலும் நான் பட்ட பாடுகள் ஒன்றல்ல,ரெண்டல்ல.

நாலு பேர் வேலையை என்னைப் பார்க்கச் சொன்னார்.முடியாது என்றபோது மூன்று லட்ச ரூபாயை கட்டு இப்போதே என்றார்.சத்தியத்துக்கு கட்டுப்பட்டு
 நானும் பார்த்தேன் நாலு பேர் வேலையை. இந்த மூன்று லட்ச ரூபாயும், நாலு பேர் வேலையும் என்னை படுத்தி எடுத்தது.எனக்கு அது பற்றிக் கவலையில்லை.
இந்த உலகில் காறித் துப்புகிற மனிதர்கள் இருக்கும் வரை எனக்கு அந்த வேலையைச் செய்வது ஒன்றும் பிரச்சனையல்ல.
" காறி உமிழ்தலும், நான்கு பேர் வேலையை ஒருவன் செய்தலும்".பிரமாதம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல்.கேட்டால் கொடுக்க மாட்டார்களா என்ன?



என் நிலைமை அப்படித்தான் ஆகிப்போனது. இந்த வேலை போனால் நான் எங்கு போவேன் என்று ஆகிப்போனது.
என்னால் அந்தப் பணத்தைக் கட்ட முடியாதா? முடியும், என் வலது கால் ஒரு விபத்தில் "இல்லை" என்று
ஆகிப்போகாமலிருந்தால். நான் முடவனாகிப் போனேன். அது ஒன்றும் பெரிய கதை இல்லை.சின்ன கதைதான்.
எனக்கு வலது கால் போனது.அம்மவின் உயிர் அங்கேயே போனது. அப்பவுக்கு நினைவு போனது. கொஞ்ச நாள் கழித்து அவர் உயிரும் போனது.
எனக்கு நான் கூட இல்லை. நகுலன் சொன்னது போல.
கையாலாகாதவன் என்று என்னை ஒழித்துக் கட்டப் பார்த்தார்கள். மூன்று லட்ச ரூபாய் தடுத்தது.
நான் இந்த நிலையிலும் குடிக்கிறேன் என்று வசை பாடினார்கள். அதுவும் சரிதான்.அதிலென்ன தப்பு.
எனக்கு அம்மா கிடையாது.அப்பா இல்லை. நான் ஒரு அனாதை. எனக்கு "நான்" வேண்டும்.
என்னை நான் எங்கு போய்த் தேடுவேன். என்னைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்.யாராலும் முடியாதது அது.இல்லையா?
வசவுகளும், திட்டுகளும் வழக்கின்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல தொடர்ந்த வண்ணமிருந்தது.பரவாயில்லை நான் என் வேலையிலிருந்து
 ஒரு நாளும் தவறியதில்லை. யாரும் என்னை நோக்கி ஒரு சுண்டு விரல் நீட்ட முடியாது.
இந்த காலை நேர அமர்வுகள் மட்டும் எனக்கு பெரிய தலைவலி.
எனக்கு இந்த வேலை வேண்டும், பணம் வேண்டும்.உண்ண நல்ல உணவு வேண்டும். நல்ல உடுப்புகள் வேண்டும்.
நாலு பேர் என்னை மதிக்க வேண்டும்.தடுக்கி விழுந்தால் என்னைத் தூக்கிவிட்டு, என் கைக்கோல்களை என் கைகளில்
கொடுத்து "பாத்துப் போங்க தம்பி" என்று சொல்லும் ஒரு கருணை பொங்கும் ஒரு மனிதர் வேண்டும். அவரது அனுதாபம் எனக்கு வேண்டாம்.
வேண்டவே வேண்டாம்.இல்லை. வேண்டாம்.இன்று கூட முக்கியமான ஒரு அமர்வு இருக்கிறதென்று மேனேஜர் சொன்னார்.
நேரத்துக்கு வந்துவிடும்படி கடுமையாகச் சொன்னார்.வராவிட்டால் என்
வேலை போகும் என்று சொன்னார்..என்னையும் மற்றவர் போலவே பாவிக்கிறார்
எனக்கு சலுகை எதுவுமில்லை.அதனால்தான் அவரை எனக்கு மிகப் பிடித்திருந்தது.

இதோ எழுந்து விட்டேன்.மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன். தலை சுற்றி சுற்றி வந்தது.
கைக்கோல் ஊன்றி எழுந்து தரையில் பாவித்தேன். மூட்டு வலி வந்தது.மெதுவாகப் போய் ஜன்னலைத் திறந்தேன். காற்று வந்தது.
வானத்தைப் பார்த்தேன். மழை வந்தது.தத்தித் தத்தி நடந்து போய் குளியலறையைத் திறந்தேன். மெலிதான நாற்றம் வந்தது.
பல் துலக்கிவிட்டு கட்டைவிரல் கொண்டு உள்நாக்கை வழித்தேன்.குமட்டல் வந்தது.குமட்டலுக்குப் பின் வாந்தி வந்தது.
குழாயைத் திறந்தேன். குளிரான தண்ணீர் வந்தது. ஒரு 'மொடக்கு' எடுத்து தலையில் ஊற்றினேன். நடுக்கம் வந்தது. சோப்பைத் தேய்த்தேன்.
நுரை வந்தது.தலையைத் துவட்டினேன். தலைமுடி கொஞ்சம் துவட்டிய துண்டோடு ஒட்டிக் கொண்டு வந்தது. ஹாலுக்கு வந்து விளக்கைப் போட்டேன்.
வெளிச்சம் வந்தது. கிழக்கு திசை நோக்கி அம்மாவை எண்ணி பிரார்த்தித்தேன்.கண்ணீர் வந்தது.
கைக்கோலைத் தாங்கியபடி ஒரு சுற்று திரும்பி கடிகாரத்தைப் பார்த்தேன்.
மணி ஆறு என்று காட்டியது. கண்ணைக் கசக்கி திரும்பவும் பார்த்தேன்.
ஆறு என்றுதான் காட்டியது. என் மேனேஜரின் முகம் கண் முன் வந்தது.

என் வலது காலைப் பார்த்தேன்.

மயக்கம் வந்தது.