Saturday, June 2, 2012

சென்றதினி...

'அட உடப்பா..கரியா...திரும்பத் திரும்ப அதையே சொல்லிகிட்டு..இந்தா இத அடி'

சல்பட் கிளாஸை வேண்டா வெறுப்பாக வாங்கி ஒரே மடக்கில் குடித்தான்.

'இல்ல கவுண்டரே..சத்தியமா அவரு சாகல..என்ன நம்புங்க..நீங்களாவது நம்புங்க..எந்தத் தாயோளியும் என்ர பேச்சக் கேக்க மாட்டீங்கிறான்..நெஜமா அவரு சாகல'

கள்ளபார்ட் கவுண்டருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 ' சரி உடப்பா..உடு..உடு.எல்லாரும் ஒரு நா போய்ச் சேரவேண்டியதுதான்
இன்னொரு கிளாஸ் ஊத்தட்டா' - கரியன் பதில் சொல்லவில்லை.

ஊற்றிக் கொடுத்தார். ஒரே மடக்கில் குடித்து விட்டு' அவரு சாகல' என்று திரும்பவும் ஆரம்பித்தான்.

கவுண்டர் ' அடப் போடா..கிறுக்குத் தாயோளி' என்று கத்திவிட்டுக் கிளம்பினார்.

கரியனுக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. யாரும் அவன் சொல்வதை நம்பவில்லை.

இறந்தது ராஜண்ண செட்டியார். அவரை வீட்டில் கிடத்தியிருந்தார்கள். சுற்றிலும் ஒப்பாரிக் குரல்கள்.

அண்டை அயலில் சீட்டாட்ட ஜமாக்கள். இடும்பைக் கூர் வயிற்றுக்கு சாப்பாடு தயாரிக்க அண்டாக்கள் என்று அமளி துமளியாக இருந்தது. செட்டியார் கலியாணம் செய்து கொள்ளவில்லை.ஒண்டிக்கட்டை. சொத்து நிறைய இருந்தது.

அவருடைய உடன் பிறந்தவர்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு பூத் பூத்தென்று அழுதார்கள். அழுகைக்கேற்ப பங்கு கிடைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள் போல. உச்சகட்டமாக கடைசித் தங்கை இரண்டு முறை மயக்கம் போட்டு விழுந்தாள். அதைக் கண்ட மூத்தவள் ' எங்கண்ண போன எடத்துக்கே நானும் போயிர்ரேன்' என்று 'ஆப்ரே..ஊப்ரே' என அழுது அரற்றினாள். இளையவன் ' அண்ணா..அண்ணா' என்று தலையில் அடித்துக்
கொண்டு துடித்துக் கதறினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரியனுக்கு தீயணைப்பு வண்டியின் குழாயிலிருந்து பீறிட்டுக் கொண்டு வரும் தண்ணீர் போல கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

வீட்டுக்குள் போய் ' அட பொடக்காளியில பொறந்த தாயோளிங்களா..அவரு சாகலடா..கேனக் கூதிகளா' என்று ஏக வசனத்தில் ஏச ஆரம்பித்தான்.
கரியனை யாரும் திட்டவில்லை. அவன் செட்டியாருடைய ஜிகிரி தோஸ்து. அவர் போன துக்கத்தில் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டார்கள்.

எதிர்தரப்பில் இருந்து எந்த ஏச்சும் வராதது கண்டு கரியன் வெளியே வந்து பீடி ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.

யாராவது ஒருவர் நம்புகிறார்களா.? அவனுக்கு வாயிலிருந்து 'தாயோளிகள்' என்ற வார்த்தையைத் தவிர எதுவும் வரவில்லை.

'பொவாக்கு' தம்பி மெதுவாக வந்து அவருக்கருகில் உட்கார்ந்து கொண்டு பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

'அட உடு மாமா' என்று தோளைத் தட்டினான்.

'எந்திரிச்சிப் போடா நாறத் தாயோளி' என்று கரியன் சீறிய சீறலில் தம்பி அரண்டு எழுந்து ஓடிப் போனான்.

அவனும் செட்டியாரும் தான் காலையில் சல்பட் போட கரோலின்(எ) ஜப்புலு ஜாகைக்குப் போனார்கள். மதியம் திரும்பி வரும்போது அடித்த உச்சி வெயிலில் நா வறண்டது. வியர்த்துக் கொட்டியது. எங்கே விழுந்தார்கள் என்று கரியனுக்கு நினைவில்லை. விழித்த போது இருட்டாக இருந்தது. ஒப்பாரிக் குரல் கேட்டது. ஆட்கள் லபோ திபோ வென கத்திக் கொண்டிருந்தார்கள்.
தான் எங்கே இருக்கிறோம் என்றே அவனுக்கு சற்று நேரம் தெரியவில்லை. கண்களை கசக்கிக் கசக்கிப் பார்த்தான். படுத்திருந்த அறையை விட்டு வெளியே வந்தான். தான் இருப்பது செட்டியார் வீட்டுக்குப் பக்கத்து வீடு என்று தெரிந்தது. அவருடைய வீட்டிலிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கிறதே என்று ஓடினான்.

அப்போதிருந்துதான். ' அவரு சாகலடா' என்ற புலம்பலை ஆரம்பித்தான். ஒப்பாரிக் குரலைக் கேட்ட போதெல்லாம்   அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. உள்ளே போவதும் செட்டியாரைப் படுக்க வைத்திருந்த கட்டிலைப்
பிடித்துக் கொண்டு கதறுவதும், யாராவது எதாவது சொன்னால் வாய்க்கு வந்தபடி ஏசுவதும், பின் வெளியே வருவதும் பீடி புகைப்பதும், சல்பட் போடுவதும், ' அவரு சாகலடா' என்று புலம்புவதும்,தலையிலடித்துக் கொள்வதும், ஆறுதல் சொல்ல வந்தால் திட்டுவதுமாக இருந்தான்.

கரியனைப் பற்றி அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். போதை ஏறி விட்டால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம்
எதுவும் தெரியாது. செட்டியாருடைய இறப்பு தாங்காமல் போதையில் உளறுகிறான் என்றே அனைவரும் நினைத்தார்கள்.

'அடேய்...அவரு எவ்வளவு சல்பட் போட்டாருன்னு எனக்குத்தாண்டா தெரியும்..மப்பு அதிகமாயிப் போச்சுடா..எழுப்பி உடுங்கடா.இன்னொரு கிளாஸ்
..ஒரே கிளாஸ்..படாபட்...படாபட்..எழுப்பி உடுங்கடா ' - கரியன் இருட்டில் தடுமாறினான்.

ஒரு வலிய உருவம் அவனைப் பிடித்து உட்கார வைத்தது.

'கரியா..ஏண்டா..சும்மா இருக்க மாட்டியா?"

' நீ யார்ரா தாயோளி..சொல்றா தாயோளி' என்று கேட்டவன் செவிட்டில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

அடி வாங்கியவன் ' டேய்..நான் ராமசாமிடா"

' எந்த சுன்னிக்கி பொறந்த ராமசாமிடா நீ....தாயோளி'

' மைனர் கவுண்டன் மகன்டா..ஓமியோபதி ராமசாமிடா'

மறுபடியும் ஓங்கி ஒரு அறை விழுந்தது. ' மொதல்ல ஒன்ன இந்த ஊர உட்டு தொரத்தணுண்டா தாயோளி...' ராமசாமி பலவிதமான குத்துகள் வாங்கிய பின்னரே அவனை கரியனிடம் இருந்து பிரிக்க முடிந்தது.

பத்து பேர் கரியனை தூக்கிக் கொண்டு போய் ஒரு அறையில் அடைத்து வைத்தார்கள்.

மணி பத்து ஆகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லா சடங்குகளும் முடித்து புதைக்க எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

கரியன் கதவை பலமாக உதைக்கலானான். உதை தாங்காமல் கதவு பிய்த்துக் கொண்டு விழுந்தது.

அவனை எல்லோருமாக இழுத்துப் பிடித்தார்கள். முதன் முறையாக அழுதான். கண்ணீர் விட்டுக் கதறி அழுதான். 'அவரு சாகலடா..எழுப்பி உடுங்கடா' - கத்துவதற்கு அவனிடம் தெம்பு இல்லை.

ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டான். பெரிய மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டப்பட்டது.( திருமணமாகாத ஆண்கள் இறந்தால் அவர்களை மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி எடுத்துப் போவது வழக்கம்).

செட்டியாரைத் தூக்கித் தொட்டிலில் வைத்தாயிற்று. முன்னும்,பின்னும் நான்கு பேராக எட்டு பேர் மரத்தை சுமந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

பெண்கள் கொஞ்ச தூரம் ஓடி வந்து சக்கரவட்டமாக கட்டிக் கொண்டு ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக் கொண்டு அழுதார்கள்.
கரியன் ஒரு விசித்திரமான காரியம் செய்தான்.

செட்டியாருடைய உள்ளங்கால்களை தன் விரல்களால் சொறிந்து குழந்தை போல கிச்சு கிச்சு மூட்ட முயற்சித்தான். பலத்த காற்று வீசியது. தாரை தப்பட்டைகள் அதிர்ந்தன. அவனைத் தள்ளி விட்டார்கள். திரும்பவும்  அவருடைய உள்ளங்கால்களை தன் விரல்களால் சொறிந்தான்.

'டேய் அவரு கால் வெரல் அசையுதுடா..நிறுத்துங்கடா..நிறுத்துங்கடா.." - மூங்கில் மரத்தைப் பிடித்துக் கொண்டான்.

யாரோ ஒருவர் அவனை அடித்தே விட்டார்கள். தளராமல் பின்னாலேயே ஓடினான். சுடுகாடு வந்து விட்டது. அவனை யாரும் செட்டியாரை நெருங்க விடவில்லை.

தலையில் அடித்துக் கொண்டான். கூட்டத்தைச் சுற்றி சுற்றி வந்தான்.

' டேய்..நிறுத்துங்கடா..அவரு சாகலடா...ஐயோ பத்து சுன்னிக்கி பொறந்த பசங்களா..நிறுத்துங்கடா.."

தாளாமல் மயக்கம் போட்டு விழுந்தான்.

மூக்கில் தண்ணீர் ஏறியபோது அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அவனை ஆற்றில் முக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கை கால்கள் குளிரில் நடுங்க ஆரம்பித்தன.தூக்கி கரையில் அமர்த்தினார்கள்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தான். இப்போது எங்கே இருக்கிறோம் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை.

பொவாக்கு தம்பி அவருடைய தலையைத் துவட்டி விட்டான். ஒரு கிளாஸ் சல்பட்டை நீட்டினான். ஒரே மடக்கில் குடித்தான். ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான்.

' செட்டியார  நடு ராத்திரியே பொதச்சாச்சு மாமா'

'அவரு சாகலடா' என்று கரியன் சொல்லவில்லை. சொன்னாலும் என்ன பிரயோஜனம்.?

புதைத்து ஆறு மணி நேரம் கழித்து யார்தான் சாகாமலிருப்பார்கள்?