Friday, November 4, 2011

பல் விளக்கிக் கொண்டிருந்த ஜப்பானியரிடம் போய் பைசாசா நகரத்திற்கு வழி கேட்டவர்

இகுஷிமோ காகயாமா ஜப்பானின் ஏன் உலகம் கண்ட மாபெரும் கவி ஆளுமை என்று நான் சொல்ல மாட்டேன்.ஏனென்றால் அவரே அப்படி சொல்லிக் கொண்டதில்லை.ஆனால் நல்ல சிந்தனையாளர். அவருடைய மண்டையில் மயிரில்லாததற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறதா என்று என்னைக் கேட்காதீர்கள். அவருடைய சிந்தனைகள் எப்போது உதிக்கும்,எப்போது ஒளி விடும் என்று தீர்க்கமாய்ச் சொல்ல முடியாது.

அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர் கூட்டம் இருக்கும்.அவரிடமிருந்து சிதறும் சிந்தனைகளை சொட்டு பாக்கியில்லாது பிடித்து பானைகளை நிரப்பி விடுவார்கள்.அவர் சிந்தனை செய்யும் பாங்கு பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. முதலில் விட்டத்தைப் பார்த்தபடி சிந்தித்துக் கொண்டிருந்தவர், வேதாளம் போல் மரத்தில் ஏறி சிந்தனை செய்ய ஆரம்பித்தார். இது ஒரு கட்டத்தில் விபரீதத்தில் முடிந்தது.

அது என்னவென்றால்,ஒரு அஷ்டமி தினத்தன்று காலையில் எழுந்து பல் விளக்க ஆரம்பித்தவர் சிந்தனை வயப்பட்டார். அந்த சிந்தனை வயம் சற்று நீண்டதில் முன்பகல் வந்து விட்டது.கை பற்தூரிகையை ( மொழி'பெயர்'ப்பு) இடதும், வலதுமாக ஆட்டிக் கொண்டேயிருந்தது.சீடர்கள் அவரது முகத்தைப் பார்த்தபடி, எதாவது சொல்வாரென்று உட்கார்ந்திருந்தார்கள்.ஒரு வழியாக மாலை ஆறு மணிக்கு சிந்தனை வயத்திலிருந்து விடுபட்டார்.

அன்றிலிருந்து அவருக்கு வாயில் பற்தூரிகையை வைத்தால்தான் சிந்தனைக் குதிரைகள் ஓடும் என்றானது. அவரது சிந்தனைகளைக் குறிப்பெடுக்க சீடர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள்.வாயிலிருந்து பொங்கி வரும் நுரையினூடே அவர் சொல்லும் சிந்தனைக் குறிப்புகள் அவர் போகும் வழியெங்கும் சிதறிக் கிடக்கும்.

அன்றொரு நாள்.

ஒரு கிழவன் தள்ளாடியபடி அவருடைய வீட்டை நோக்கி வந்தான். பார்த்தால் நீண்ட தூரம் பிரயாணம் செய்து வந்தவன் போல் அத்தனை களைப்பு. வந்தவன் வீட்டு வாசலிலேயே மயங்கி பொத்தென்று விழுந்தான்.

சீடர்கள் அவனுக்கு மயக்கம் தெளிவித்து உண்ண உணவு கொடுத்தார்கள்.
பற்தூரிகை இடதும் வலதுமாக ஆட நம் சிந்தனைச் சிற்பி அவரிடம் பேசலானார்.

'எங்கிருந்து வருகிறீர்?"
கிழவனுக்குத் தலை சுற்றியது.
'நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.வாயிலிருந்து
அதை எடுத்து விட்டு பேசுங்கள்.'

சிந்தனைச் சிற்பியின் முகம் ஜிவ்வென்று சிவந்தது.

தன் சீடன் ஒருவனைப் பார்த்து சைகை செய்ய அவன் அதே கேள்வியைக் கேட்டான்.

'நான் கிகுஜிரோ மலையிலிருந்து வருகிறேன்'
'அந்த மாதிரி ஒரு மலையை நாங்கள் கேள்விப்பட்டதேயில்லையே.அது எங்கிருக்கிறது?"
'எனக்கு சரியாகத் தெரியாது. அங்கிருந்து நான் கிளம்பி இன்றோடு வருடம் ஐம்பது ஆகிறது.என்னுடைய இருபதாவது வயதில் நான் புறப்பட்டேன்'
'இவ்வளவு வருடங்களாக ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தீர்களா?"
'ஆம். நான் பைசாசா நகரத்திற்கு போவதற்கு வேண்டிதான் கிளம்பினேன்.
கடைசியில் எப்படியோ கண்டுபிடித்து விட்டேன். இது பைசாசா நகரம் தானே?"
'இல்லை. இது புகுஷிமோ நகரம். பைசாசா நகரத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை'

கிழவன் அழ ஆரம்பித்தான்.
'கடவுளே! என் உயிர் பிரிவதற்குள்ளாகவேனும் அந்த நகரத்திற்குப் போய் விடவேண்டும்.கருணை காட்டு'

'கிழவரே! அழாதீரும். அப்படி அந்த நகரத்தில் என்ன சிறப்பு?. அங்கு போவதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறீர்கள்."

'அந்த நகரத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே உண்டு.அந்த வீட்டில் ஆட்களும் கிடையாது.அந்த வீட்டிற்கு சென்றால் நான் யார் என்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வேன். அதற்காகத்தான் நான் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.என்னிடம் ஒரு வரைபடம் இருந்தது. அதன்படி நான் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் நடந்தேன்.ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது என்னுடைய கழுதை அதைத் தின்று விட்டது.
அதற்குப் பிறகு நான் ஊர் ஊராக அலைந்தேன். யாருக்கும் பைசாசா
நகரத்தைப் பற்றித் தெரியவில்லை. இதோ பாருங்கள் உங்களுக்கும் தெரியவில்லை.'

'எனக்குத் தெரியும்'

குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்பினர்.

சிந்தனைச் சிற்பி தூரிகையை வாயிலிருந்து எடுத்து விட்டு தெளிந்த குரலில் பேசினார்.

'என்ன? உங்களுக்குத் தெரியுமா?'
'தெரியும். என்னிடம் வரைபடம் கூட உண்டு.'
'கடவுளே! நின் கருணையே கருணை. அதை எனக்குத் தருவீர்களா?'
'நீங்கள் திரும்ப வந்து அதைக் கொடுப்பீர்கள் என்பது என்ன நிச்சயம்.?"
'வயதில் நான் பெரியவனானாலும் உங்கள் காலில் விழுகிறேன். ஐம்பது
வருடங்களாக நான் அந்த நகரத்துக்குப் போக நாயாய் அலைகிறேன். சத்தியமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.என்னை நம்புங்கள்"
'சரி.அந்த வரைபடத்தின் படி நீங்கள் போனால் வரும் குளிர்காலத்தில் நீங்கள்
அந்த நகரத்தை அடைவீர்கள். உங்கள் ஐம்பதாண்டு காலத் தேடல் முடிவுக்கு வரும்'.

கிழவன் வாய் நிறையப் புன்னகையோடு வரைபடத்தைப் பெற்றுக் கொண்டான்.

அந்த வரைபடத்தில் நான்கு பகுதிகள் இருந்தன. முதல் பகுதி முழுவதையும் அவன் கோடையில் கடந்தான். இரண்டாம் பகுதி முழுவதையும் அவன் வசந்தத்தில் கடந்தான்.மூன்றாவது பகுதி முழுவதையும் அவன் மழைக்காலத்தில் கடந்தான்.நான்காவது பகுதியை அவன் நடக்க ஆரம்பித்தபோது குளிர்காலம் தொடங்கியது.

கடைசி அம்புக் குறியை அவன் நடக்கத் தொடங்கியதும் கடுமையான பனிப்புயல்
வீசத் தொடங்கியது. மிகுந்த சிரமத்துடன் அவன் நடக்கலானான். இன்னும் கொஞ்ச தூரம்தான்.அவன் தன் ஐம்பது வருடக் கனவை அடைந்து விடுவான். தான் யார் என்றும், வாழ்க்கை என்றால் என்னவென்றும் அவன் தெரிந்து கொள்வான்.

பனிப்புயல் உக்கிரம் அடைந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தான்.இரண்டு நாட்கள் அப்படியே நடந்தான்.இரண்டாம் நாளின் இறுதியில் அவன் அந்த வீட்டைக் கண்டான். எங்கும் பனி மூடிக் கிடந்தது.

அழுகை பொங்கும் கண்களோடு அவன் அந்த வீட்டை அடைந்து அதன் கதவை மெல்லத் திறந்தான்.

உள்ளே வாயில் பற்தூரிகையோடு சிந்தனைச் சிற்பி மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

தூரிகையை எடுத்து தூர எறிந்து விட்டு சொன்னார்.

'என்ன கிழவரே! வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா?நீர் ஒரு உத்தமன் ஐயா.வரைபடத்தைத் திருப்பிக் கொடுக்க கடும் பனிப்புயல் என்றும் பாராது வந்திருக்கிறீர்களே?"

2 comments:

  1. வாழ்க்கை ஒரு வட்டம். நல்ல கதை

    ReplyDelete
  2. பார்த்தசாரதி ஜெயபாலன்November 4, 2011 at 4:39 AM

    நன்றி அழகிரி. என்னுடைய முந்தைய பதிவுக்கு ஆறுதலாக இருந்தது உங்கள் பின்னூட்டம்

    ReplyDelete