Sunday, July 31, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 05.த்தூ

காதோரம் நரை
கண்ணுக்குக் கீழே சுருக்கம்
வயது ஐம்பதுக்கு மேல் காணும்
ஜி.நாகராஜனின் கதைநாயகன் போல்
டெரிலீன் சர்ட், எட்டு முழ வேட்டி.

போகலாமா என்றார்.
முடியாது இன்று என்றேன்.

வெளியே வேண்டாம் என்றால்
உன் வீட்டில் சரியா என்றார்.

எங்கேயும் சரியில்லை
இன்று என்றேன்.

வயதானவன் என்று பார்க்கிறாயா?என்றார்.

காதோர நரை பார்த்து
கணிக்கிறவள் நானில்லை என்றேன்.

பின் என்ன? என்றார்.

ஒன்றுமில்லை.
இன்று முடியாது என்றேன்.

பணமா பிரச்சினை?
கேள்..தருகிறேன்.என்றார்.

நீங்கள் தருவது லட்சமென்றாலும்
இன்று முடியாது என்றேன்.

ஏன்? என்றார்.

முடியாது.அவ்வளவுதான் என்றேன்.

சரி.நாளை? கேட்டார்.

நாளையும் முடியாது என்றேன்.

தொழிலை விட்டுவிட்டாயா? என்றார்.

இல்லை. நாளை மறுநாள் வாருங்கள் என்றேன்.

நாளை மறு நாள் எதற்கு? இன்று என்ன உனக்கு ?என்று அவர் கேட்கவில்லை.

அவர் கேட்க மாட்டார்.

கேட்டாலும் இருக்கவே இருக்கு

காட்ட தூமைத்துணி.

Wednesday, July 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் 4 - இன்று வரப்போகிறவர்

இங்கு வந்து
எத்தனை நாளானது இன்றோடு
என்பது நினைவில் இல்லை.

என் அறைக்கு
முதன் முதலாக வந்தவர்
முகமும்,பெயரும் நினைவில் இல்லை.

எத்தனை பேர்
என் அறைக்கு வந்திருப்பார்கள்
என்பதும் நினைவில் இல்லை.

எத்தனை பேர்
'எனக்கு இது முதல் முறை'
என்று சொன்னார்கள் என்பதும்
நினைவில் இல்லை

இன்றைக்கு
வரப் போகிறவர்
எப்படி இருப்பார் என்பது
தெரியவில்லை.

இது அவருக்கு
முதல் முறையா என்பதும்
தெரியவில்லை.

அப்படி இல்லை
எனும் பட்சத்தில்
என் அறைக்கு
வந்த முதல் ஆள்
அவராகக் கூட இருக்கலாம்.

Tuesday, July 26, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 3 மூவர்

வந்தனர் மூவர் இன்று.
அதிலொருவன் இல்லை
திருப்தியென்று வாங்கிக்
கொண்டான் கொடுத்த பணத்தில்
பாதியை.

ஜாகையின் ஒழுகும் கூரையை
மாற்றிக் கொடுத்தவன்
வேண்டாம் பணம்
படுத்துத் தீர்த்துக் கொள்கிறேன்
என்று விட்டான்.

வாங்கிய கடனுக்கு
கட்ட வேண்டிய வட்டி போக
மிச்சப் பணத்தில்
இன்றிரவு நாலு இட்லி
நாளைக்கு
கவுளி வெத்திலை
சுருட்டு ரெண்டு
தீர்ந்து போன பாக்கெட் ஒன்று
மல்லி ஒரு முழம்
போக வர நான்கு
உண்டியலில் போட பத்து
போக மீதம்
ஒன்றுமில்லை.

எப்படியும் வரும் நாளை மாலை.
எப்படியும் வருவார்
எனக்காக மூவர்.

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 2 . விலாசம் கேட்டதற்கு

வேசி என்றார்கள்
விலைமகள் என்றார்கள்
நிறம் கறுப்பு,
வளைந்த தேகம்
தலையில் மல்லிகை
நிறத்திற்கொவ்வாத உதட்டுச் சாயம்
மல்லிகைப் பூ செண்ட் அவள் அடையாளம்
என்றார்கள்.
ஐந்து மணிக்கு வரும்
கவன்மேந்து பஸ்ஸில் பக்கத்து
டவுனுக்கு தொழிலுக்குப்
போவாள் என்றார்கள்.
பதினோரு மணிக்கு
கடைசி வண்டியில்
திரும்பி வருவாள் என்றார்கள்.

விலாசம் என்று திரும்பக் கேட்டதற்கு

ஊர் சாக்கடைகள் அனைத்தும் கூடும்
ஓரிடத்தில் அவள் வீடு என்றார்கள்.

ழார் பத்தாயின் குதிரை - எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் தளத்தில் வெளியான என் சிறுகதை

ழார் பத்தாயின் குதிரை

மெலிந்த இடையும் அகன்ற இடுப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் புணருவதற்கு முன்னரோ,புணரும்போதோ இல்லை புணர்ந்த பின்னோ பாப்லோ நெரூதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

தந்தி அலுவலகத்துக்கு சென்றார்.
'எங்கிருந்தாலும் உடனடியாக என் வீட்டுக்கு வரவும்'
தந்தி கொடுத்தார். உலக இலக்கியவாதிகள் அனைவருக்கும்.

அன்ன கரீனினாவுடன் படுக்கையில் இருந்த தொல்ஸ்தோய் அரை நிஜாருடன் வந்து சேர்ந்தார்.நாடகக்காரியுடன் படுக்கையில் இருந்த செகாவ், தனது கரமசோவ் சகோதரர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த தஸ்தாவெஸ்கி(உச்சரிப்பு சரி என்றே நினைக்கிறேன்), தனது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீட்டைப் பற்றி உள்ளூர் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்று கொண்டிருந்த கொத்தஸார்,போர்ஹே,காப்கா,புதுமைப்பித்தன் என்று எல்லோரும் வந்தார்கள்.

வந்தவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.

'எதற்கு அழைத்தீர்?"

'நாம் எல்லோரும் உலக இலக்கியவாதிகள் என்று அறியப்படுகிறோம் அல்லவா?"
'ஆம்.அதிலென்ன சந்தேகம்"
'அதில் சந்தேகம் ஒன்றுமில்லை.நாம் எல்லோரும் உலகத்தின் பல மூலைகளில் சிதறிக் கிடக்கிறோம். நாளை நாம் இல்லாமல் போகலாம். நாம் வருங்கால சந்ததியினரால் மறக்கப் படக்கூடும்"
'அதெப்படி.நாம் வண்டி வண்டியாக, மரங்களுக்குக் கேடாக எழுதி வைத்த புத்தகங்கள் இருக்கிறதே.அதெப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவார்கள். பார்த்து விடலாம்' என்று ஆளுக்கொரு திசையில் பிரிந்து , பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்தார்கள்.

நெரூதா அவர்களை சமாதானப் படுத்தினார்.
'நான் சொல்ல வந்தது அதுவல்ல. நமக்காக ஒரு தேர் செய்யலாம். இதுவரை யாருமே அந்த மாதிரி பார்த்திருக்கக் கூடாது.காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய தேர்'
'தங்கத்தாலும் பொன்னாலும் இழைக்கச் சொல்கிறாயா?"
'இல்லை. நமது புத்தகங்களால்'

மார்க்கேசுக்கு மயக்கம் வருவது மாதிரி இருந்தது.
'புத்தகங்களாலா?"
'ஆம்'
'ஸரி'
ஆரம்பித்து விட்டார்கள்.
உலமெங்கும் உள்ள சனாதாநிகள் கவலை கொண்டார்கள்.

தனித் தனியாக இருந்தாலே இவர்களை சமாளிப்பது கடினம்.இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.என்ன செய்யலாம்? என்று பல ரகசியக் கூட்டங்கள் நடத்தினார்கள்.

தீவிரவாதக் கூட்டம் ஒன்று அவர்கள் ஒன்று கூடி இருக்கும் போது குண்டு வீசலாம் என்று முடிவு செய்தது.பின்னர் அது கைவிடப்பட்டதாக தகவல் வந்தது.

ஒரே மாதத்தில் அந்தத் தேர் செய்யப்பட்டது. எல்லோரும் குதிரைகளைக் கொண்டு வந்து கட்டினார்கள்.புதுமைப்பித்தனின் குதிரை சற்று உயரமாக இருந்தபடியால் அது முன்னாலே நிறுத்தப்பட்டது. மற்ற குதிரைகள் இரண்டு வரிசைகளாக தேரில் பிணைக்கப் பட்டன.ழார் பத்தாயின் குதிரை இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நிறுத்தப்பட்டது.

ஆனால் அவர்கள் அஞ்சியது போல் ஆபத்து சனாதாநிகள் மூலமாக வரவில்லை.
வேறொரு வடிவில் வந்தது.
*************************************************

அந்தப் பிராந்தியம் எங்கும் ஒரே ரணகளம். அடிதடி. புகை மண்டலம்.

பெரிய தலை கொண்ட நிறைய மனிதர்கள் அந்தச் சண்டையில் கலந்து கொண்டிருந்தார்கள்.அவர்களைப் பார்த்தால் எழுத்தாளர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் சமாதானம் செய்தும் அவர்கள் சண்டையை நிறுத்துவதாகத் தெரியவில்லை.கடைசியில் காம்யூ எல்லோரையும் ஒரு உதைபந்தாட்ட உதை விட்ட பிறகுதான் நிறுத்தினார்கள்.

'இப்போது என்ன. இந்தத் தேரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டு அவ்வளவுதானே"
'ஆம்"

"நான் ஒரு உபாயம் சொல்கிறேன். எல்லோரும் பயணம் செய்யலாம்"
'அதெப்படி எல்லோரும் பயணம் செய்ய முடியும். ஒருவருக்கு மேல் ஏறினாலே இந்தத் தேர் தாங்காது போலிருக்கிறதே'
'உங்களுடைய ஆக்ரோஷத்தைப் பார்த்தால் ஒருவர் ஏறினாலே தாங்காது போலிருக்கிறது.பொறுமையாக வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவராகப் பயணம் செய்யலாம்"

முதலில் ஒருவர் ஏறினார். கையில் சாட்டை ஒன்று தரப்பட்டது.
'சுளீர்' என்று ஒரு வீசு வீசினார். குதிரைகள் புயல் வேகத்தில் பறந்தன.
மணலும், காற்றும் மட்டுமே உள்ள ஒரு கட்டற்ற பெருவெளியில் பாய்ந்தோடிய அக்குதிரைகள் ஒரு புளிய மரத்தைக் கண்டதும் நின்று விட்டன. அதற்கு மேல் நகரவில்லை. அவ்வளவுதான். அவர் இறக்கி விடப்பட்டார்.

இரண்டாமவர். குஸ்தி வாத்தியாரோ எனும்படியான தோற்றம் கொண்டிருந்தார்.
கையில் சாட்டையை வாங்கிய மறு கணமே குதிரைகள் கிளம்பி விட்டன. இப்போது அக்குதிரைகள் சென்ற வழியெல்லாம் இலைகள் ரம்பியிருந்தன.சீரான வேகத்தில் சென்ற அக்குதிரைகள் சிறிது ஒய்வெடுத்து விட்டு மறுபடியும் ஏவுகணைகள் போன்று சீறின. ஒரு இடத்தில் முட்டையும், பழைய பேப்பரும் விற்பனை செய்யும் கடையைக் கண்டதும் அவை நின்று விட்டன. அவர் இறக்கி விடப்பட்டார்.

மூன்றாமவர். மோட்சம் அளிப்பதற்காகவே வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல் காணப்பட்டார்.முதல் இருவரும் தேரை ஓட்டும் போது வாயைத் திறக்கவில்லை. ஆனால் இவர் ஓயாது சொற்பொழிவாற்றிய வண்ணம்
வந்தார். அவர் செய்த உபதேசத்திற்கு குதிரைகள் தான் தூங்கியிருக்க வேண்டும்.ஆனால் அவர் தூங்கியபடியே உபன்யாசம் செய்து வந்தார்.வாய் எதையோ பிதற்றியபடியே இருந்தது. ஒரு இடத்தில் குதிரைகள் வளைவைக் கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தவர் புரண்டு படுத்தார். குதிரைகள் நின்று விட்டன.

நான்காமவர்.இவர் முகம் மிகவும் சாந்தமாகக் காணப்பட்டது. அத்தனை குதிரைகளையும் அன்போடு தடவிக் கொடுத்தார்.குதிரைகள் நெகிழ்ந்தன. தேரில் ஏறியவர் குதிரைகளை சாட்டையால் விளாசவில்லை.வலது காலை எடுத்து இடது கால் மேல் போட்டுக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிரபலமாகப் போகும் பப்புவா நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின்
நூலைப் படித்தபடி வந்தார். குதிரைகள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தன. ஒரு இடம் வந்தது. அந்த இடத்தில் வெயில் தவிர வேறு எதுவும் இல்லை. பாறைகளில் வெயில்.கள்ளிச் செடிகளில் வெயில். வெயில் அந்தப் பிரதேசக்
கிண்ணத்தில் வழிந்து வழிந்து நிரம்பிக் கொண்டிருந்தது. குதிரைகள் நிற்கவில்லை. இவராகவே குதித்து விட்டார்.

ஐந்தாமவர். இவரைக் கண்டதும் அத்தனை குதிரைகளின் முகத்திலும் இனம் புரியாத பீதி( இந்த "இனம் புரியாத பீதி"எனும் வார்த்தைப் பிரயோகம் ஆரம்ப நிலை எழுத்தாளர்களால் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியது என்று ஒரு
பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.ஆகவே "இனம் புரியாத பீதி").
சாட்டையைக் கம்பீரமாக வாங்கிக் கொண்டார். சுற்றி ஒரு முறை பார்த்தார். ஆசனத்தில் அமர்ந்து 'ஹொய்"என்ற பலத்த சத்தத்துடன் சாட்டையை வீசினார். அவ்வளவுதான்.குதிரைகள் தேரிலிருந்து பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாகப் பறந்தன. காற்றினும் கடிய வேகத்தில் அவை
மறைந்தன. ஒரே ஒரு குதிரையைத் தவிர. அது ழார் பத்தாயின் குதிரை. தேருடன் பலமாகப் பிணைத்து விட்டார்களோ என்னவோ. பரிதாபமாக அசைய முடியாமல் அப்படியே நின்றது.ஐந்தாமவர் விடுவதாக இல்லை. 'ஹொய்' என்று மறுபடியும் சாட்டையை வீசினார்.முன் இரண்டு கால்களையும் சட்டென்று மடித்து தரையில் சாய்ந்து விட்டது.நீண்ட நேரம் அவர் 'ஹொய்' என்று சாட்டையை வீசிக் கொண்டே இருந்தார்.ழார் பத்தாயின் குதிரை மட்டும் எழுந்த பாட்டைக் காணோம்.

ஜிட்டக்கியும் ஒரு மழை நாள் இரவும் - ஒரு அஞ்சலி

என் முதல் கதையின் நாயகியான ஜிட்டக்கி நேற்று இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 110.

எப்போதும் போல் படுக்கையில் விழுந்தவர்தான். காலையில் எழுந்து விடுவார் என்று தான் நினைத்திருந்தோம்.

ஆனால் எழுந்திருக்கவில்லை.

நூறு ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்திருக்கிறார். யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல்.

அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கப் போவதில்லை. அது தேவையுமில்லை.

மேடக் சீக் ரஹா ஹே

அந்த சிறிய ரயில் நிலையத்தில் நானும், நிதின் துபேவும் வந்து இறங்கிய போது
விடிந்திருக்கவில்லை.மணி நான்கு இருக்கலாம். எங்களுடைய பெட்டி,படுக்கை,
பாரங்களோடு நான் பிளாட்பாரத்திலிருந்த , உடைந்த ஒரு சிமெண்ட் திண்ணையில் சாய்ந்து கொண்டேன். விழிப்பும் இல்லாமல், நித்திரை கலக்கமும் இல்லாமல் ஒரு வித, கபால மோட்சம் அடைந்தவனின் கடைசி மணித்துளிகளில் இருக்கும் கிறக்கம் என் கபாலத்தில் இருந்தது.

காரணம் அவன் தான். நிதின் துபே. இரவெல்லாம் குடித்துக் கொண்டே வந்தேன்.மூன்று மணிக்கு உறங்கச் செல்லும் போது இன்னும் எட்டு மணி நேரப் பிரயாணம் பாக்கி இருப்பதாகச் சொன்னான். கண்ணயர்ந்து, கனவின் ஆரம்பக் காட்சியில் எழுப்பினான். இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது என்று.

துபே எங்களுடைய மூட்டை முடிச்சுகளை சரி பார்த்துக் கொண்டான்.

'சாப், நீங்க இங்க இருங்க. நா போய் ஊர்ல பேசிட்டு வரேன்'
'சீக்கிரமா வந்து சேரு..இந்த எடமே பாக்க ஒரு மாதிரி இருக்கு'


இமைகள், கிணற்றுக்குள் இறங்கும் வாளியைப் போல மெதுவாக கீழ் நோக்கி
இறங்கிக் கொண்டிருந்தன. ஒரு வலிமையான கரம் தோளைத் தொட்டு உசுப்பியது.ஸ்டேஷன் மாஸ்டர்.

'கோன் ஹே தும்? யஹா கியா கர்தாஹே தும்?'
எனக்கு இந்தி புரியும் .ஆனால் பேச வராது.

அதற்குப் பின் அவருக்குத் தெரிந்த பட்லர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
அவரைக் கேள்வி கேட்க விடாமல் நானே எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் சொன்னேன்.
'சாப். நாங்கள் இந்த கிராமத்தை,மக்களை படம் எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறோம்.இரண்டு நாட்கள் இங்கே இருப்போம். வேண்டுமானால் போகும் போது உங்களையும் படம் எடுக்கிறேன்.இந்தப் படம் கவர்மெண்ட் நியூஸ் ரீலுக்காக. எனக்கு இந்தி பேச வராது.போதுமா"

இத்தனையும் நான் சொல்லிக் கொண்டு வந்தபோது அவர் தன் காதை என் வாயருகே வைத்திருந்தார். காரணம் உண்டு. என் குரல் மிக மெல்லியது.எனக்கு சிறு வயதில் தொண்டையில் ஒரு சர்ஜரி நடந்தது. அதற்குப் பின் என் குரல் மிக மெல்லியதாக மாறிவிட்டது. என்னால்
ஓங்கிக் கத்த முடியாது.வலி எடுத்துவிடும்.மிகக் குறைவாகவே பேசுவேன்.அதிலும் தூக்கக் கலக்கத்தில் குரல் மிகவும் மெலிதாகவே வரும்.

ஆனால் நிதின் துபே அதற்கு நேர் எதிர். குடித்து விட்டு மேடையில் 'சொற்பொழிவாற்றும்" 143 வது வட்டச் செயலாளர் மாதிரி உரக்கப் பேசுவான். பேசிக் கொண்டே இருப்பான். அவன் தமிழ்நாட்டுக்கு
வந்து ஒரு இருபது வருடங்கள் இருக்கலாம்.அவனுக்கு நன்றாகத் தமிழ் பேச வரும்.இந்தி வாயால் அவன் பேசும் தமிழ் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும்.

விளம்பரங்கள்,ஆவணப் படங்கள் எடுப்பது எங்கள் நிறுவனத்தின் தொழில். அவன் கேமிராமேன்.நான் டைரக்டர். இந்தியா முழுக்க சுற்றிச் சுற்றி படம் எடுத்திருக்கிறோம்.நானும் அவனும் பூட்டுக்கு ஏற்ற சாவி மாதிரி. அவன் நன்றாக சமைப்பான். நான் நன்றாக சாப்பிடுவேன்.
நான் முட்டக் குடித்து விட்டு சீக்கிரத்தில் சாய்ந்து விடுவேன். அவன் மெலிதாகக் குடித்து விட்டு என்னை பத்திரமாக வீட்டில் சேர்ப்பான். இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

அவனிடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவனுடைய குரல்.காட்டுக்கத்து கத்துவான்.தொண்டையில் ஆம்ப்ளிஃபையர் வைத்திருப்பானோ என்னவோ.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. துபே வந்து எழுப்பினான்.மணி காலை எட்டு.

'என்னாச்சு"
"மொதல்ல பிடி குடுக்கல சாப்..அப்புறம் ஊர்ப் பெரியவர் கிட்ட பேசி..கையில கால்ல விழுந்து சம்மதிக்க வெச்சேன்.ஆனா ஒன்னு.ஊருக்குள்ள தங்கறதுக்கு எடம் தர மாட்டாங்களாம்.வெளிய டேரா போட்டுக்க சொல்லிட்டாங்க."
'அது பரவால்ல'

பாரங்களைத் தூக்கிக் கொண்டு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு கையாட்டிவிட்டு புறப்பட்டோம்.என்னைப் படம் பிடிக்க மறந்து விட வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே சைகை காட்டினார்.மறக்க மாட்டேன் என்று பதில் சைகை காட்டினேன்.

'அப்புறம் இன்னொரு விஷயம் சாப்'
'என்ன?'
'ஆறு மணிக்கு மேல நாம ஊருக்குள்ள இருக்கக் கூடாதாம்'
'சரி'

துபே மூச்சு வாங்கினான். அவனுக்கு கொஞ்சம் பூசினாற் போல உடல் வாகு.
நின்று, இரண்டு தடவை மூச்சை இழுத்து விட்டு விட்டு, திரும்பவும் பாரங்களைத் தூக்கிக் கொண்டு எப்படியோ வந்து சேர்ந்தாகி விட்டது.

'சாப்.இங்கயே டேரா போட்டுடலாம் சாப்'
'இங்கிருந்து ஊர் எவ்வளவு தூரம்"
'எப்படியும் ஒரு கிலோ மீட்டர் இருக்கும். இப்ப ஸ்டேஷன்லர்ந்து நடந்து வந்த தூரம் இருக்கும்'
"சரி. கூடாரத்த நாம்பாத்துக்குறேன்.நீ என்ன பண்றன்னா சுத்தி இருக்குறத அப்பிடியே கவர் பண்ணிடு.
மொதல்ல அங்க இருக்குற முள்ளுச் செடிகள படம் புடி.வேணுமுன்ன யூஸ் பண்ணிக்கலாம்.
அப்புறம்..இங்க குளம்,குட்டை எதுனா இருக்கா..ஒடம்பெல்லாம் நச நசன்னு பிக்கிது'

'கொஞ்ச தூரத்துல ஒரு ஏரி இருக்குதுன்னு கெழவன் சொன்னா சாப். இப்ப குளிக்க வேண்டா.ஊர்ப் பொம்பளைங்க தண்ணி எடுக்க,தொவைக்க போவாங்க..ஆறு மணிக்கு மேல, வேல முடியட்டும்.
அப்புறம் போலாம்"

துபே படம் பிடிக்க ஆரம்பித்தான். நான் கூடாரத்தை முடித்து விட்டு, சப்பாத்தி மாவு பிசைய ஆரம்பித்தேன்.சுட்டுத் தின்று விட்டு ஒரு 11 மணி வாக்கில் ஊருக்குள் போனோம்.

'எல்லா ஊர்லயும் பஞ்சாயத்து மரத்தடிக்கு கீழதான் நடக்கும் போல சாப்'
நாங்கள் போன போது எதோ ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
'படம் புடிக்கலாமானு கேளு'
யாரிடமோ போய்ப் பேசி விட்டு வந்தான்.
'புடிக்கலாம் பாஸ்."


பஞ்சாயத்துத் தலைவர் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார். கோழி திருடிய வழக்கு.

திருடியவன் ஒரு மாசத்துக்கு ஊரைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். தீர்ப்பு.
'அநியாயமப்பா.சரி ..எல்லாம் கவர் ஆகிருக்கானு செக் பண்ணிக்க..'
'கவர் ஆகலன்னா..இன்னொரு தடவ அவங்கள பஞ்சாயத்து பண்ண சொல்லலாமா சாப்'
'வேலயப் பாருடா'

அடுத்து கோவில்,பெண்கள் நடனம் ஆடுவது, பானைகளைத் தலையில் வைத்துக் கொண்டு தண்ணீர் சுமந்து வருவது,ரொட்டி சுடுவது என்று எடுத்தோம். முன் தினம் தூங்காத அலுப்பு.ஐந்து மணிக்கே பேக்கப் செய்தாகிவிட்டது.

குளித்து விட்டு கூடாரத்திற்கு வந்தோம்.

துபே எடுத்த வரை சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். நான் பிராந்தியை ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தேன்.

மணி இரவு 11. துபே நாலு ரவுண்டு முடித்திருந்தான். என்னுடையது கணக்கு தெரியவில்லை.

திடீரென்று ஒரு வினோத சப்தம்.'கொர்..கொர்' என்று ஏரி இருந்த திசையில் இருந்து வந்தது.போகப் போக அது பெரிதாகி அந்தப் பிரதேசம் முழுதும் எதிரொலித்தது.

'மேடக் சீக் ரஹா ஹே சாப்' என்று சொல்லி விட்டு 'கெக்.. கெக்' என்று குலுங்கி குலுங்கி சிரித்தான்.

அதிசயமாக போதை அதிகமாகி விட்டால் இப்படி சிரிப்பான்.

'தவளைங்க கத்துது சாப்.மேடக் சீக் ரஹா ஹே' திரும்பவும் 'கெக்.. கெக்' என்று குலுங்கி குலுங்கி சிரித்தான்.

'மூடிட்டு குடி.சொல்லலன்னா தெரியாது பாரு'


*************************************************************************** இந்த கிராமத்திற்கு பள்ளிக் கூடத்தைக் கொண்டு வர அரசாங்கம் படாத பாடு பட்டது என்று டீச்சர் சொன்னார். அதை விட இந்தப் பள்ளிக் கூடத்திற்கு குழந்தைகளைச் சேர்க்க தான் பட்ட பாடு பெரிது என்றும் சொன்னார்.
துபே டீச்சரை வளைத்து வளைத்து படம் பிடித்தான்.

என்னவாக வர விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை எல்லாக் குழந்தைகளிடம் டீச்சர் கேட்க அவர்கள் சொல்லி வைத்த மாதிரி பேந்தப் பேந்த விழித்தார்கள்.

தோளைக் குறுக்கி, தலையைச் சாய்த்து வெட்கப்பட்டார்கள்.

மதிய உணவு முடிந்து ஏரிக்கு போனோம்.

'துபே..மிச்ச இருக்குற நேரத்துக்கு இந்த ஏரி , பாரு அங்க இருக்குற சோளக் காடு எல்லாத்தயும் புடி..நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்".

இந்தி பேச முடியாத குறைக்கு பெயருக்குத் தான் நான் டைரக்டர். மற்றபடி எல்லாமே அவன் தான்.

முகத்தில் துண்டைப் போட்டுக் கொண்டு ஒரு மரத்தோடு சாய்ந்து படுத்துக் கொண்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. சோளக் காட்டிலிருந்து யாரோ இரண்டு பெண்கள் கத்தும் சத்தம் கேட்டது.

துபேயின் குரலும் கூடவே கேட்டது. விழுந்தடித்துக் கொண்டு குரல் வந்த திசையில் ஓடினேன்.

ஒரு குடிசை. இரண்டு பெண்கள். கையை ஆட்டி ஆட்டி கத்திக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்தவுடன் ஒருத்தி ' கான் ஹே தும் லோக்' என்று உரக்கக் கத்தினாள்.

துபே கையை வாயில் வைத்துப் பொத்தி அமைதியாக இருக்கும் படி இறைஞ்சினான்.

'துமே யஹா நஹி ஆனா ச்சாயியே.ஜாவ்..ஜாவ்"

'பூல் சே ஹம் யஹா ஆகயே.தீதீ.பூல் சே ஹம் யஹா ஆகயே'

'ஜாவ்..ஜாவ்'

என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு விடுவிடு வென்று சோளக் காட்டை விட்டு வெளியேறத் தொடங்கினான்.

'யாருடா அது?"

'தெரியல சாப். பேசாம வாங்க'. நடையில் வேகம் கூட்டினான்.

வழியில் இன்னொரு குடிசை தென்பட்டது. அதில் ஒரு பெண் கதவோரம் நின்று கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெள்ளைப் புடவை உடுத்தியிருந்தாள். வயது 16, 17 இருக்கலாம். அதற்கு மேல் சொல்ல முடியாது.

சோளக் காடு முடியும் இடம் வந்ததும், என்னை நிற்கச் சொல்லி விட்டு, சோளத் தட்டைகளைப் பிரித்து தலையை கொஞ்சமாக வெளியே நீட்டி யாராவது வருகிறார்களா என்று பார்த்தான்.

யாருமில்லை என்று தெரிந்ததும் ' வாங்க சாப். போயிடலாம்.ரொம்ப டேஞ்சரான ஊரு போலிருக்குது சாப்'

கூடாரத்தை நெருங்கி விட்டோம்.

'சாப்..சாப்'

டீச்சர் வெகு வேகமாக எங்களை நோக்கிக் கத்தியபடியே மான் மாதிரி துள்ளித் துள்ளி வந்தார்.

அந்தத் துள்ளலில் பரவசம் தெரியவில்லை. ஏதோவொரு துஷ்ட மிருகத்திடமிருந்து தப்பி வந்த பயம் தெரிந்தது.

'கித்னே பஜே துமாஹ்ரி ட்ரைன் ஹே?" - மூச்சு வாங்கினார்.

'பாரா பஜே ராத் கோ."

'சாப். மெனே தும்லோகோ கோ உஸ் கன்னே கே கேத் சே நிகல்தே ஹுவே தேக்கா. தும் லோக் வஹா க்யூ கயா தா?"

அவளிடம் தெரிந்த பயம் அப்படியே துபேவின் முகத்தில் தெரிந்தது. என்னை ஒரு முறை பார்த்தான்.

'ஹம் லோக் கல்தி சே சலே கயே தா?"

'அகர் கோய் துமே தேக் லேதா, தும் லோகோ கோ மார் பட்தி"

'என்னடா சொல்றா.எதுக்கு நம்மள அடிப்பானுங்களாம். அங்க தெரிஞ்சா போனோம்'

'கொஞ்சம் இருங்க சாப். ஏசா கியா? அகர் ஹம் கல்தி சே கயே, தப் பி?"

'ஹா'

நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டேன்.

' ஹம் லோகோ நே தோ லட்கியோ கோ குட்டியா மே தேக்கா. கான் ஹே வோ? வோ லோக் வஹா க்யூ ரெஹதே ஹே?"

'உன்லோகோ கி மங்க்னி ஹொ கயி ஹே. ஜப் தக் உன்கி சாதி நஹி ஹோத்தி, டப் தக் உன்கோ வஹா ரெஹ்னா ஹோகா"

'உஸ் குட்டியா பே ஆர் ஏக் லட்கி சஃபேத் கப்டே மே ஹே.வோ கோன் ஹே?"

'உஸ்கி பி மங்க்னி ஹோ ச்சுக்கி ஹே,லேகின் உஸ்கே மங்கேதார் அபி நஹி ரஹே. இஸ்தியே வோ வித்வா ஜெய்சி ஹே ஆர் உஸ்கோ
வஹா பே ஜிந்தகி பர் ரெஹ்னா ஹே'

'இஸ் காவ் மே, மேனே வித்வா தேக்கே ஹே, லேகின் இஸ் லட்கி கோ வஹா க்யூ ரெஹ்னா ஹே?"

"யஹ் அலக் ஹே.துமே பத்தாவோ நஹி ஹே க்யா? முஜே நஹி பத்தாவோ, கெய்சே போல்னா சாஹியே?"

' மே சமஜ் கயா'

'தயா சே. ஜிந்தா கர் ஜாவோ. யே லோக் பாஹுத் கராப் ஹே. முஜே ட்ரைன் லியே தர் ஹோ ரஹி ஹே, தும் லோகோ கோ தேக்கே அச்சா லகா.Bye'

டீச்சர் துள்ளிக் கொண்டு போய் விட்டாள்.

' சாப். இது வில்லங்கமான ஊரு சாப்."

கூடாரத்திற்கு வந்து ஆளுக்கொரு க்ளாஸ் பிராந்தியை ஊற்றிக் கொண்டோம்.

'அந்த டீச்சர் சொன்னதெல்லாம் உண்மையா? அந்த ரெண்டு பொண்ணுங்க சரி.கல்யாணம் முடிஞ்சதுமே அந்த குடிசய விட்டுப் போய்டுவாங்க. ஆனா அந்த வெள்ளப் பொடவ கட்டின பொண்ணு சாகற வரெக்கும் அங்கேயேதான்
இருக்கணுமா..என்னடா அநியாயம் இது'

துபே பேசவில்லை. அமைதியாக பிராந்தியை உறிஞ்சிய படி எதோ யோசனையில் இருந்தான்.

' சரி. அந்தப் பொண்ணப் பத்தி கேட்டதுக்கு..இது வேற.உங்களுக்குப் புரியலயா..எனக்கு சொல்லத் தெரியலனு சொன்னாளே..
அவ என்ன சொல்ல வந்தான்னு உனக்கு புரிஞ்சுதா..புரிஞ்ச பாரி சமஜ் கயா ன்னே"

அவன் பேசவேயில்லை.

'டேய். ஒன்னத்தாண்டா"

'சாப். அந்தப் பொண்ண நாம கூட்டிகிட்டு போயிடலாம் சாப்'

தூக்கி வாரிப் போட்டது.

'நம்ம ட்ரைன் எத்தன மணிக்கி'

'சாப். அந்தப் பொண்ணு ரொம்ப பாவம் சாப். அந்தப் பொண்ணுக்கு 16 வயசுக்கு மேல சொல்ல முடியாது.பாவம் சாப்'

'.கூடாரத்த பிரிச்சு மூட்ட கட்டு. நாம ஸ்டேஷனுக்கு போயிடலாம்"

'சாப்.ஒன்னு சொல்லட்டுமா?' - குரல் மிகத் தீர்க்கமாக இருந்தது.

'நீ என்ன சொன்னாலும் சரி. இது நமக்கு தேவையில்லாத வேல.'

'சாப்.அந்தப் பொண்ணு இந்த ஊர்ல இருக்குற "ஆம்பளங்க" எல்லோருக்கும் சொந்தம் சாப்.பாவம் சாப்.ரொம்ப சின்ன வயசு சாப்' - கெஞ்சினான்.

'அப்டீன்னா?"

'அப்டீன்னா..இந்த ஊர்க்காரங்க எவன் வேணாலும் எப்ப வேணாலும் அந்தப் பொண்ணு இருக்குற குடிசைக்கு போகலாம்.ஒருத்தன் போகும் போது இன்னொருத்தன் இருந்தா அவன் வர்ர வரைக்கும் இவன் வெய்ட் பண்ணிட்டு உள்ளே போவான்.புரியுதா.போதுமா. தாயோளிக. தேவிடியாப் பசங்க.." - கடுமையான கோபத்தில் க்ளாஸை விட்டெறிந்தான்.

*********************************************************************

'உன்கோ மத் மாரோ.'

.உன்கோ மத் மாரோ.

மே பீக் மாங்க்தி ஹூ.

சோட் தோ.சோட் தோ."

வெள்ளை நிறப் புடவை அணிந்த அந்தப் பெண் நிலத்தில் விழுந்து கதறினாள்.ஆளுக்கொரு பிடியாக பிடித்துக் கொண்டார்கள்.

துபேயின் முகம் ரத்த விளாறாக இருந்தது. பௌர்ணமி நிலவொளியில் அவன் வாயிலிருந்து எச்சிலோடு வழிந்த ரத்தம் ஒரு வினோதமான நிறத்தில் இருந்தது. அவன் அடிவயிற்றை பிடித்துக் கொண்டு எழுப்பிய அலறல்,
கை கால்களைப் பிணைத்து விலாவில் குத்தப்பட்ட வெறி கொண்ட ஒரு மிருகத்தின் அலறலைப் போலிருந்தது.

என்னுடைய கண்கள் பாதி மூடி, எந்தக் கணத்திலும் முழுவதுமாக மூடி விடக் கூடிய நிலையில் இருந்தது.

கனத்த தோல் செருப்பணிந்த ஒருவன் என் முகத்தில் அவன் காலை வைத்து அழுத்தினான்.'க்..க்' என்ற சத்தம் என் தொண்டையில் இருந்து மூக்கு வழியாக ரத்தமாக வந்தது.

'பெஹ்லே உஸ் லட்கே கதம் கரோ. ஜல்திகரோ..ஜல்தி..ஜல்தி' - துபேவைப் பார்த்து ஒருவன் கை காட்டினான்.

அவன் அலறல் குறைந்தபாடில்லை.

ஒருவன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு பெரிய கல்லைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தான்.

அந்தப் பெண் தன்னைப் பிடித்திருந்தவர்களை உதறி விட்டு கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருந்த நரைத்த மீசைக் கிழவனின் காலில் விழுந்து என்னமோ சொன்னாள்.

கிழவன் எழுந்து அவளின் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து எல்லோர் முன்னால் தரையில் தள்ளி விட்டான்.

உரத்த குரலில் எதோ சொன்னான்.

அத்தனை பேரும் எங்களை விட்டு விட்டு அவளை நோக்கி ஓடினார்கள்.

கல்லைத் தூக்கிக் கொண்டு வந்தவன் அதைப் போட்டு விட்டு அந்தப் பெண்ணின் பால் வயிற்றில் உதைத்துத் தள்ளினான்.

மற்றொருவன் அவளுடைய இடது முழங்காலில் எட்டி உதைத்தான்.

அவள் எனக்குப் பக்கத்தில் குப்புற விழுந்ததும் அவளுடைய கைகள் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்டன.

சணல் கயிற்றில் அவள் வாயும், கால்களும் கட்டப்பட்டன.

அவளுடைய சேலை இடுப்பு வரை தூக்கப்பட்டது.

கனத்த தோல் செருப்புக்காரன் என்னை விட்டு விட்டு அவளருகே போய் கையில் சாக்குத் தைக்கும் ஒரு கோணி ஊசியை எடுத்து நூலைக் கோர்க்கத் துவங்கினான்.

அவளுடைய முதுகையும், இடுப்பையும் ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள , கனத்த தோல் செருப்புக்காரன் ஊசியை அவளின் இடது தொடையின் ஆடுசதையில் விட்டு வலது தொடை வழியாக எடுத்து முடிச்சுப் போட்டான்.

நான் மெதுவாக எழ முயற்சி செய்தேன்.

என் பின் மண்டையில் ஒரு பலமான உதை விழுந்தது.

நான் கீழே விழுந்தவுடன் அவர்கள் போய் விட்டார்கள்.போயே விட்டார்கள்.

அவர்கள் உரத்து பேசிக் கொண்டு செல்லும் சப்தம் குறைந்து கொண்டே வந்து நின்றது.துபேவின் முகத்தில் ரத்தமும், மண்ணும் கலந்து விகாரமாகக் காட்சியளித்தது.

மெதுவாக நகர்ந்து அவன் பக்கத்தில் போனேன்.

'சாப்..சாப்..என்னால முடியல சாப்..சுன்னி மேல பலமா ஒதச்சிட்டான் சாப்' வார்த்தைகள் சொட்டு சொட்டாக வந்தன.

கொஞ்ச நேரம் அனத்தினான். அவன் கண்கள் மெல்ல சொருகிக் கொண்டன.

மூச்சு மட்டும் மெலிதாக வந்து கொண்டிருந்தது.

நான் கொஞ்ச நேரம் எழ முயற்சி செய்து முடியாமல் அப்படியே மண்ணில் சாய்ந்து கொண்டேன்.

நாங்கள் போக வேண்டிய ரயிலின் சப்தம் தொலை தூரத்தில் கேட்டது.

காற்றில்லாத அறையில் வைத்த எண்ணெய்ப் பாத்திரம் போன்ற சலனமற்ற முகத்தைக் கொண்ட அந்தப் பெண்ணின் அலறல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து மொத்தமாக நின்றது.

'கொர்..கொர்' என்ற தவளைகளின் சப்தம் மெதுவாக ஆரம்பித்து அந்தப் பிரதேசம் எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது.