Friday, May 27, 2011

ஒரு பொய்யின் கதை

குமரேசனின் அப்பா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டது.அவர் ஏன் இறந்தார்,எப்படி இறந்தார் என்ற கேள்விகள்
இப்போது அனாவசியம். அவர் இறந்ததால் என்ன ஆனது என்பதை , தற்போது குமரேசன் கூத்தாமண்டி பஸ் ஸ்டாப்பில்

நின்று கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தாலே தெரியும்.வயதில் இளையவன் தான். ஆனால் ஒரு குருட்டு

பிச்சைக்காரனின் கோலத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த சட்டை கிழிந்திருக்கவில்லை.

நைந்திருந்தது.நிறம் மங்கிய பீட்ரூட் நிறத்தில் அந்த சட்டை இருந்தது.இரண்டு பித்தான்களுக்கு பதிலாக ஊக்கு

மாட்டியிருந்தான்.



அவனுடைய கால்சட்டை, அணிந்திருந்த தூசி படிந்திருந்த ரப்பர் செருப்பிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலிருந்தது.

சற்று நேரம் முன்புதான் அம்மா கட்டிக் கொடுத்திருந்த புளி சாதத்தை சாப்பிட்டுவிட்டு கொஞ்சமாகத் தண்ணீர்

குடித்திருந்தான். பஸ் வர இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். அதற்கு மேலும் ஆகலாம். நல்ல அடர்த்தியான

வெயில் காலம். கூத்தாமண்டியில் குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காது.உப்புத் தண்ணீர் தான். சற்று தூரத்தில்

இலை உதிர்ந்த ஒரு மரத்தடியில் ஒருவர் இளனீர் விற்கிறார். எப்படியும் பத்து ரூபாய்க்கு குறையாமல்

இருக்கும். அவனிடம் இருப்பதே ஐந்து ரூபாய்தான்.அதுவும் டிக்கெட்டுக்கு. அருகிலிருந்த பெட்டிக் கடையில்

ஒரு தண்ணீர் பாக்கட் வாங்கிக் குடிக்கலாம். நாலு ரூபாய் டிக்கெட் எடுத்தால் ஊருக்கு வெளியே இறக்கி விட்டு

விடுவான். நடந்து கூட போய்விடலாம்.



இந்த யோசனையில் நாக்கிலிருந்து சுரக்கும் எச்சிலை மேல் அண்ணத்தில் தடவியபடி நின்றிருந்தான்.தாகத்தில்

இருக்கும்போது நல்ல குளிர்ந்த,ஆற்று நீரைக் குடிப்பதுபோல சுகம் வேறொன்றில்லை.இப்போது அவனுக்கு அதற்கு

கூட வழியில்லை.சில வருடங்களுக்கு முன்பு அவன் இருந்த நிலை வேறு.இரண்டு அக்காமார்கள், ஒரு தங்கை.

அம்மா,அப்பா,அப்பத்தாவுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கொண்ட சற்றே பெரிய குடும்பம்.



பெரிய அக்கா படிக்கவில்லை.சிறிய அக்கா ப்ளஸ்2 வரை படித்திருந்தாள்.இவன் பத்தாவதும்,தங்கை மூன்றாவதும்

படித்துக் கொண்டிருந்தார்கள்.ஊரில் மிக வசதியான குடும்பம். ஏழு ஏக்கர் கிணற்றுப் பாசன நிலத்தை குத்தகைக்கு

விட்டிருந்தார்கள். ஐந்து ஏக்கர் ஆற்றுப் பாசன நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். மஞ்சள்,பருத்தி,புகையிலை

என்று எப்பொது பணப்பயிராகவே அவருடைய அப்பா பயிரிடுவார். மூன்று வீடுகள். வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த

நகை எப்படியும் நூறு பவுனுக்கு குறையாது.



ஆனால் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட பாறையைப் போல கடந்த இரண்டு வருடங்களில் கொஞ்சம்,

கொஞ்சமாக கீழே வந்து கொண்டிருந்தார்கள். காலுக்குக் கீழே வாழ்க்கை வழுக்கிக் கொண்டிருந்தது.சரியாக ஆறு

வருடங்களுக்கு முன்பிருந்து இதை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். அப்போது குமரேசன் ஆறாவது பாரம் படித்துக்

கொண்டிருந்தான். ஒரு வெள்ளிக் கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, அப்பா வெளியிருந்த கயிற்றுக்

கட்டிலில் அமர்ந்திருந்தார்.அவருடைய முகத்தைப் பார்த்தாலே அவர் நன்றாகக் குடித்திருக்கிறார் என்று தெரிகிறது



அவர் ஒன்றும் மொடாக் குடியர் அல்ல. அவ்வப்போது மிதமாகக் குடிப்பார். வீட்டின் உள்ளிருந்து விசும்பல் சத்தம்

கேட்டது. அம்மா அழுகிறாள்.சரி. பாட்டியும் அழுகிறாளே? சிறிய அக்காவும் அழுகிறாள். பெரியவளைக் காணவில்லை.

போய் விட்டாள். யாருடன் என்று தெரியவில்லை.



அடுத்த வாரமே அவர் ஒரு காரியம் செய்தார். சிறிய அக்காவுக்கு திருமணம் செய்வித்தார்.மிகுந்த ஆரவாரத்தோடு அது

நடந்தது. பெரியவளுக்கு வைத்திருந்த அத்தனையும் சிறியவளுக்குத் தூக்கிக் கொடுத்தார்.எதோவொரு கோபத்தில்

அப்படி செய்தார்.ஆனால் சிறியவளுக்கு வாய்த்த கணவன் ஒரு மூர்க்கன். அடிக்கடி அதை வாங்கி வா, இதை வாங்கி வா

என்று பிறந்த வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான்.



அப்பாவின் மன உறுதி நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டே வந்தது.சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெரியவள்

கையில் ஒரு குழந்தையுடன் வந்து நின்றாள். அப்பா அவளை வீட்டை விட்டு போகச் சொல்லவில்லை. அது பாவம் என்று

அவருக்குத் தெரியும். ஏனென்றால் அவள் தன் கணவனை இழந்து விதவையாக வந்திருந்தாள். ஒரு மூலையில்

இருந்து விட்டுப் போ என்று அனுமதித்தார்.



இது அவனுடைய சிறிய மாமாவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை. வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு போனவர்கள் தான்.

ஒரு நல்லது,கெட்டது எதற்கும் வருவதில்லை.ஆனால் சிறிய அக்கா மட்டும் வருவாள். அது வேண்டும், இது வேண்டும்

என்று.எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு.



அது ஒரு அமாவாசை நாள்.காலை ஏழு மணிக்கு முடுக்கந்துறைக்காரி குமரேசனின் வீட்டுக்கு முன் வந்து நின்று கொண்டு

வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். கண நேரத்தில் ஊர் கூடி விட்டது.அவள் பல பேருக்கு தொடுப்பாக இருந்தாள்.

அவனுடைய அப்பாவும் அதில் ஒருவர் என்பது தாமதமாகத்தான் அவனுக்குப் புரிந்தது.



அவள் சொன்ன ஒரு விசயம் யாருமே ஜீரணிக்கத் தகுந்ததல்ல. தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம்

குமரேசனின் அப்பாதான் என்றும் அழுது ஓலமிட்டாள்.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு

வார்த்தையும் சொல்லாமல் தலை குனிந்த வண்ணமிருந்தார்.பேரப் பிள்ளைகள் கண்ட பிறகு இதென்ன ஒரு அவிசேரித்தனம்

என்று ஊர்க்காரர்கள் காறித் துப்பிவிட்டார்கள்.ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து, ஜீவனாம்சமாக கொஞ்சம் பணம்,

ரெண்டு ஏக்கர் நிலம் என்று கொடுத்து அனுப்பி விட்டார்கள். பின்னே..இல்லையென்றால் கெடுத்து விட்டதாக புகார்

குடுப்பேன் என்று சேலையை மடித்துக் கொண்டு நிற்கிறாள்.



ஒருவரது பார்வையையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனுடைய இளைய தங்கையைத் தொடக் கூட அவருக்கு

கை கூசியது. நேராகப் போனார்.அறைக் கதவை சாத்தினார். பதினோறாம் நாள் காரியம் முடிந்ததும், கடன் காரர்கள் வரிசையாக

பாண்டு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்பா இத்தனை பேரிடம் கடன் வாங்கியிருக்கிறாரா என்று அவனுக்கு

மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கூட்டிக் கழித்து பார்த்ததில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தான் மிஞ்சியது.



அந்த மட்டிலும் அவர்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் அதற்கும் ஆபத்து வந்தது, நிலவள வங்கியின் ஏல அறிவிப்பு கார்டு

மூலமாக. வீட்டை மட்டுமல்லாது அவர்கள் மொத்த பேரின் வாழ்க்கையையும் அடமானம் வைத்து விட்டு போயிருந்தார்.

மொத்தமாக காலி செய்துவிட்டு 'சிட்டேபாளையம்' சுப்பைய நாயக்கரின் ஒரு ஒதுக்குப் புறமான சிறிய வீட்டில்

வாடகைக்குத் தங்கிக் கொண்டார்கள். அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது.இத்தனை நாளாக அவன் பள்ளிக்குச்

செல்லவில்லை. இனி மேல் அது நடக்காது என்பது அவனுக்குத் தெரியும்.



அவனும், பெரியக்காவும் பக்கத்திலிருந்த மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள். பஞ்சு மில். பஞ்சுத் துசி மூக்கில் ஏறி அவனுடைய

அக்காவிற்கு, அவள் சிறியவளாக இருந்த ஆஸ்த்துமா திரும்பவும் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு பிறகு அவளும் வேலைக்குப்

போவதை விட்டுவிட்டாள். வீட்டில் மூன்று விதவைகள்.இரண்டு குழந்தைகள். அத்தனை பேரும் பெண்கள்.



அவன் தனியனாகத் தான் போராடிக் கொண்டிருந்தான். அவர்கள் ரேஷன் அரிசி உணவுக்கு பழக்கப் பட்டுவிட்டார்கள்.

கொசுக்கடிக்கும்,வியர்வைக்கும் பழக்கப் பட்டு விட்டார்கள். சில நேரத்தில் விஷம் குடித்து விடலாமா என்று கூட அவன்

யோசித்ததுண்டு. ஆனால் அவன் தங்கையும்,அக்காவின் சிறிய குழந்தையும் அதன் வீரியத்தை தாங்குவார்களா.ஒரு வேளை

அவன் மட்டும் செத்து அத்தனை பேரும் பிழைத்துவிட்டால்.அவன் தங்கை, நைந்து போன சட்டையும், பாவாடையும்

போட்டுக் கொண்டு, மூக்கில் ஒழுகும் சளியோடு ஸ்கூலுக்குப் போகிறது. வந்து சிரத்தையாக வீட்டுப் பாடம் எழுதுகிறது.

அதன் வாழ்க்கையை தீர்மானிக்க அவன் யார். இப்படியாக பல யோசனைகள்.



ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா மயங்கி விழுந்தாள். டாக்டரிடம் காட்டியதில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக அறிய வந்தது.

மருத்துவச் செலவுக்கு பணம்? அவன் கால்கள் நிற்காமல் சிறிய அக்காவின் வீட்டுக்குப் போய் நின்றது. சிறிய மாமா ஒரு வண்டி

அவனுடைய அப்பாவைத் திட்டிவிட்டு பணத்தைக் கொடுத்தார். ஒரு மாசத்தில் திருப்பி கொடுக்க வேணுமாய் ஒப்பந்தம்.



சர்ஜரி முடிந்த உடனேயே, அவனுக்கு வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது என்ற யோசனை எழுந்தது. பெரிய அக்கா இரண்டு

கம்மல்களைக் கொடுத்தாள். மிச்சப் பணத்துக்கு என்ன செய்வது. ஒரு வழி தெரிந்தது.'மொரப்பா' கந்தசாமியிடம் போய் விஷயத்தைச்

சொன்னான். அவன் அதைக் கேட்டு 'ஓ' வென்று அழுது ஓலமிட்டான். அத்தனையும் அடமானம் வைத்து விட்டு போன அப்பா

இரண்டு மாடுகளை மட்டும் விட்டு வைத்துவிட்டு போயிருந்தார்.அதை 'மொரப்பா' கந்தசாமி பாதுகாத்து, பராமரித்து வந்தான்.

அவ்வப்போது மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, மண், ஜல்லி, சிமெண்ட் என்று லோடு அடிப்பான். அவர்கள் பண்ணையத்தில்

இருபது வருடமாக வேலை செய்ததற்கு, இது தான் கிடைத்தது. அதற்கும் வந்தது ஆபத்து. கண்ணைத் துடைத்துக் கொண்டு

கொடுத்து விட்டான்.



கூத்தாமண்டி பொம்மு நாயக்கர் அதை விலைக்கு வாங்கிக் கொண்டார். முதல் தவணையாக நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்.

இரண்டவதாக நாலாயிரம். இப்போது மூன்றாவது தடவையாக வந்து வெறும் கையுடன் திரும்பி நாம் முதலில் பார்த்த

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறான்.



பஸ் எப்போது வரும் என்று நான்கு தடவை பெட்டிக் கடைக்காரனை கேட்டாகி விட்டது. மாலை ஐந்து மணிக்கு அவன் மில்

வேலைக்குப் போக வேண்டும். வெயிலோடு புழுதியும், தூசியும் நிறைந்த காற்று மெலிதாக வீசிக் கொண்டிருந்தது.



தூரத்தில் ஒரு இரு சக்கர மோட்டார் வண்டி வருகிறது. சரி, இவரிடம் கேட்டு பார்ப்போம்.எது வரை போகிறாரென்று.

பெத்திக் குட்டை வரை போனால் கூட போதும். கள்ளிப்பட்டி பிரிவு வரை நடந்தால், நம்பியூர் மார்க்கமாக செல்லும் பஸ்ஸில்

ஏறிப் போய் விடலாம் என்ற நினைப்புடன் கையைக் குறுக்கே நீட்டினான்.



ஆனால், பின்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். கையை இறக்கி, பெட்டிக் கடை பக்கமாக முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டான்.

அந்த வண்டி நிற்காமல் போனதே நல்லது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் வண்டி நின்றது.ஒரு பெண் அதிலிருந்து இறங்கி

நடந்து வருவதை அவனால் உணர முடிந்தது. அவள் வேறு யாருமல்ல. அவன் ஒரு காலத்தில் மிகுந்த ப்ரேமை கொண்டிருந்த பரிமளா.



அது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு கல்யாணாம் நடந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இவள் எதற்கு இங்கே வருகிறாள். அடையாளம்

கண்டு கொண்டாளா என்ற பரிதவிப்பில் முகத்தை திருப்பாமலே நின்றான்.



வெயிலோடு, புழுதியும் தூசியும் கலந்த காற்று இப்போது பலமாக வீசியது.கண்களில் விழுந்து அழுத்தியது. கண்களில் நீர் திரண்டது.



பின்னால் ஒரு குரல் கேட்டது." குமரேசா ! நல்லா இருக்கியா?"



அவன் மெதுவாக கண்களைக் கசக்கியபடியே திரும்பினான். ' என்ன கேட்ட பரிமளா?"



"நல்லா இருக்கியானு கேட்டேன்" என்று இழுத்தாள்.



இப்போது அவனுக்கு நிஜமாகவே கண்ணீர் வந்தது. புழுதியின் துணை தேவைப்படவில்லை.



பொம்மு நாயக்கரிடம் மிச்சப் பணத்தை வாங்கி பத்திரமாக கொண்டு போவதற்கா அவன் கொண்டு வந்திருந்த சிறிய மஞ்சள்

பையை பார்த்து விட்டு உதடு குவிந்த புன்னகையோடு சொன்னான்.



'ரொம்ப சௌக்கியம்'