Tuesday, November 8, 2011

வைகுண்டத்தின் இரும்புக் கதவுகள்

'அண்ணே ! எப்பண்ணே போடும்'
'டேய்! இதென்ன பஸ்ஸா, ரயிலா.நேரத்துக்கு வாரதுக்கு..போடும்போது எடுத்துட்டு போடா"

சரிதான். மாடு எப்போது சாணி போடும் என்று யாருக்குத் தெரியும்.

அதிகாலை நான்கு மணிக்கு வீடு வழிக்க சாணி எடுக்க வந்து மாட்டின் ஆசன வாயை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.எனக்குக் கிடைத்தது அன்று.

நான் தூங்குவது போல் நடித்து நடித்துப் பார்த்தேன். அம்மா விடவில்லை.
கடைசியில் பலம் கொண்ட மட்டும் என் போர்வையை உருவினாள்.

அதென்ன பாஞ்சாலியின் புடவையா உருவ உருவ வந்து கொண்டே இருப்பதற்கு.
ஒரே உருவலில் வந்து விட்டது.

எழுப்பித் துரத்தி விட்டாள். காப்பி கேட்டேன். வந்து குடிச்சுக்கோ என்று விட்டாள்.

முன் தினம் இரவு குடித்தது,உண்டது எல்லாம் எப்போது வேண்டுமானாலும்
வாய் வழியே வரத் தயாராக இருந்தது.

அம்மாவுக்கு சாணி வழிப்பது என்பது ஒரு சடங்கல்ல. அதுவும் சனிக்கிழமை
வழித்தே தீர வேண்டும்.

அதுவும் அன்று புரட்டாசி முதல் நாள்.சனிக்கிழமை. முதல் நாளே சனிக்கிழமை.
போதாதா?

மாட்டுக்கு அருகில் போய் வயிற்றைத் தடவிக் கொடுத்தேன். வைக்கோலை
அள்ளியெடுத்து வாய்க்கருகில் காட்டினேன். தண்ணீர் காட்டினேன்.
எதையும் சட்டை செய்யவில்லை.

'நான் போட்டு விடுவேன்.நீயும் எடுத்துக் கொண்டு போய் விடுவாய். அப்படித்தானே அற்பனே?" என்பது போல் நின்றது.

கடைசியில் மனமிறங்கி போட்டது ஐந்தரை மணிக்கு.

காப்பி கேட்டேன்.

'குளிச்சுட்டு வந்து குடி'.

'சரி. சுடு தண்ணி வச்சியா?"

'வெறகில்ல..ஒரு மயிரில்ல..ஆத்து நொம்ப தண்ணி போகுது...போ'

அதிகாலை நாலு மணிக்கு நான் எழுந்ததேயில்லை. இப்போது குளியல் ஆறு மணிக்கு.

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு ஆறை ஒரு அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குதித்தேன்.

வெடவெடக்கும் உடம்போடு வீட்டுக்கு வந்தேன்.

வாசலில் அம்மா வாயெல்லாம் பல்லாக கையில் வெண்கலச் செம்போடு நின்றிருந்தாள்.

பால்காரனுக்காக நிற்கிறாளா ?. இல்லையே..பால் எவர்சில்வர் பாத்திரத்தில் தானே வாங்குவாள்.

' டேய்..ராஜா..போய் கோமியம் கொஞ்சம் புடிச்சுட்டு வந்திருப்பா?"

'கோமியமா..அது எதுக்கு'

'கெழவி செத்த தீட்டு நேத்துதான் முடிஞ்சுருக்கில்லியா..அதுக்கு தான்..தெளிச்சா நல்லதாம்'

'ஆரு சொன்னா'

'நம்ம பூசாரிதான்'

'அடேய் பூசாரி' என்று கலைஞரின் பராசக்தி வசனம் வாயிலிருந்து பீறிட்டுக் கிளம்பியது.அடக்கிக் கொண்டு கிளம்பினேன்.

இந்த முறை மாட்டை நான் தாஜா செய்யவில்லை.

அது ஊற்றும் போது சரியாக கவனித்துப் பிடித்தால் போதும்.போனால் போனது தானே.அடுத்த தடவை ஊற்றும் வரை அல்லவா காத்திருக்க வேண்டும்?.

அந்த நேரத்தில் மாடு என்பது கட்டற்ற பெருவெளியாகவும், சாணி என்பது எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளாகவும், கோமியம் என்பது போனால் திரும்ப வராத காலமாகவும் எனக்குத் தோன்றியது.

ஒருவழியாக மனமிறங்கி ஊற்றியது எட்டு மணிக்கு.

வீட்டுக்குள் நுழையும் போதே இட்லி அவிக்கும் மணமும், தேங்காய்ச் சட்னியில் தாளித்துக் கொட்டும் மணமும் நாக்கில் தட தட வென்று நீர் வரச் செய்தது.

இரண்டு இட்லிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு கொஞ்சம் தேங்காய்ச் சட்னியை ஊற்றி முதல் விள்ளலைத் தோய்த்து வாயில் இறக்கப் போகும் போது தங்கை பார்த்து விட்டுக் கத்தினாள்.

'அம்மா! இங்க வந்து பாரேன்'

நான் வாய்க்கு கொண்டு போனதை அப்படியே வைத்துக் கொண்டு நின்றேன்.

'அடேய்' என்று பலத்த சத்தத்துடன் அம்மா புயல் வேகத்தில் வந்து தட்டைப் பிடுங்கினாள்.

எனக்கு கண்ணில் நீர் வரும் போலிருந்தது.

'என்னம்மா?"

'நல்ல நாள் அதுமா..சாமி கும்பிடாம என்னடா வகுத்துக்கு வேண்டிக் கெடக்கு'

கையில் தேங்காய்ப் பழத்தட்டுடன் வீதியில் இறங்கி நடந்தேன்.

நெற்றியில் நாமம். வயிற்றில் பசி. வாழைத்தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும்
'கோவிந்தசாமி திருக்கோவிலுக்கு'

இருபது நிமிட நடை.

அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை நின்றிருந்தது. கோவிந்தசாமியை தரிசிக்க.
*********************************

இவருக்கும் எனக்கும் ஒரு 'நெருங்கிய' தொடர்பு உண்டு. இவருடைய பெயர்தான் என்னுடைய பெயரும்

இந்தப் பேரை வைத்திருப்பவன் பள்ளியிலும், கல்லூரியிலும் என்ன பாடு படுவான் என்பது யாரும் அறியாததல்ல.

அதனால் இவர் மேல் நான் கட்டற்ற 'பக்தி' வைத்திருந்தேன்.

இவர் சுற்று வட்டாரத்தில் மிகுந்த பிரசித்தி பெற்றவர். குடியானவர்கள் இவரைக் கேட்காமல் எதுவும் பயிரிட மாட்டார்கள்.

கோயில் என்னமோ மிகச் சிறியதுதான். முப்பது பேருக்கு மேல் நிற்க முடியாது.சிலையும் சிறியது தான்.

அதனாலென்ன மூர்த்தி சிறிதெனினும்.கீர்த்தி பெரிதல்லவா?

கோவிலிலிருந்து கொஞ்ச தூரம் வரை தட்டி கட்டி ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.
அதற்கப்புறம் வரிசை தெருவில் புரளும் குடிகாரனைப் போல் ஒழுங்கின்றி வளைந்து கிடந்தது.

போய் நின்று கொண்டேன்.

'நாமதேஸ்ய' கிட்ணன் தான் பூசாரி. அவருக்கு இந்த அடைமொழி வந்தது ஒன்றும் பெரிய சுவாரசியமான விஷயமில்லை.

அர்ச்சனை செய்யச் சொல்லி யாராவது தேங்காய்ப் பழத்தட்டை நீட்டினால் பேரைக் கேட்டுக் கொண்டு பேருக்குப் பின்னால் 'நாமதேஸ்ய' என்று விடுவார். அதோடு சரி.அர்ச்சனை முடிந்தது.

ஆரஞ்சு நிறத்தில் பிரசாதம். கொஞ்சம் துளசித் தண்ணீர். கூம்பு வடிவ வெண்கல மணியினால் தலையில் ஒரு அழுத்து.அவ்வளவுதான்.

எனக்கு முன்னால் நின்றிருந்தவர் யாரென்று முகம் பார்க்காமலே தெரிந்தது. 'கள்ளபார்ட்' ரங்கசாமிக் கவுண்டர்.அவர் தலைக்கு விளக்கெண்ணையும், வேப்பெண்ணையும் கலந்த கலவையைப் பூசுவார்.
பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ இல்லையோ..இவர் மண்டைக்கு உண்டு பிரத்யேக மணம்.

எனக்கு பின்னால் ராஜாத்தி. சரிகைப் புடவை கட்டி வந்திருந்தாள். படித்துறை ஆலமரத்தையும்,இவளையும் பத்து பேர் சேர்ந்தாலும் கட்டிப் பிடிக்க முடியாது என்கிற சொலவடை எங்கள் கிராமத்தில் புழக்கத்தில் உண்டு.

வெள்ளாட்டை முழுங்கிய மலைப் பாம்பு மாதிரி 'புஸ்..புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

வரிசை நகர்வது போல் தெரியவில்லை.சிகரெட்டுப் புகையும், முன் தினம் குடித்த குடியும் பாதியில் போன தூக்கமும் வயிற்றில் ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

மணி பத்தாகி விட்டது. வெயில் ஏவுகணை மாதிரி மண்டையில் இறங்கிக் கொண்டிருந்தது.

வயிறு முழுவதும் புகை நிரம்பியது மாதிரி ஒரு உணர்வு. தண்ணீர் கேட்டேன். கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார்.குடித்தேன்.ஏன் குடித்தேன் என்றாகி விட்டது.கிணற்று நீர்.

தாகம் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பாதி வரிசைக்கு வந்து விட்டேன். இதற்கிடையில் ஒரு சிறு ஹாஸ்ய நிகழ்வு ஒன்று நடந்தது.

'மாயாபஜார்' முத்துசாமி செட்டியார் பக்தி மிகுதியில் கையை உயர்த்திக் கும்பிட்டுக் கொண்டே கோவிலை விட்டு வெளியே வந்தார். அவர் வரும்போது அவருடைய வேட்டியின் நுனியை யாரோ அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். அவர் கோவிலை விட்டு வெளியே வந்த பின் இடுப்பில் வேட்டி இல்லை.

இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.

போதாததற்கு பக்கத்து கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டி முடித்தாகி விட்டதால் அடிக் கரும்புக்கு தீ வைத்து விட்டார்கள். எப்போதும் என் பக்கம் வீசாத காற்று அன்று மிகச் சரியாக என் பக்கம் வீச, புகையில் மூச்சு முட்டியது.

மணி பன்னிரெண்டு ஆகி விட்டது.

பூசாரி திரைச்சீலையை இழுத்து மூடினான். உச்சி கால பூஜையாம்.
அரை மணி நேரம் ஆகும் என்றார்கள். என்னால் முடியவில்லை.

மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.'

'கோவிந்தசாமி!!! உன்னை மற்றொரு நாள் சாவகாசமாக பார்க்கிறேன். இன்று என்னால் முடியவில்லை'

தேங்காய்ப் பழத்தட்டை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு அப்படியே ராஜாத்தியின் மேல் சாய்ந்தேன்.

'தம்பி மயக்க்ம் போட்டுட்டுது' என்று பெரிதாக அலறினாள்.

என்னை அப்படியே அலேக்காகத் தூக்கி தட்டியை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.
********************************************
பொன்னுசாமி கவுண்டரின் தோட்டத்தில் இருந்த கிணற்றடியில் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

தேங்காயை பக்கத்திலிருந்த பெரிய கல்லில் உடைத்து நீரைக் குடித்தேன்.
அமிர்தமாக இருந்தது.

வேலியோரம் இருந்த துளசிச் செடியிலிருந்து கொத்தாக இலைகளைப் பறித்துப் போட்டேன்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் நாடார் கடையில் ஜிலேபி பவுடரை வாங்கி தேங்காயில் கொட்டி விட்டு நானும் கொஞ்சம் இட்டுக் கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்த போது மணி ஒன்று.

அம்மா பயபக்தியோடு வாங்கி பூஜையறையில் வைத்தாள்.

அன்று மதியச் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு சொம்பு நிறையத் தண்ணீர் குடித்தேன். வயிற்றிலிருந்த புகை மூட்டம் விலகி தெளிவான பருவ நிலை நிலவியது.

'வந்துட்டானா?" என்றபடியே வீட்டுக்கு வந்த அப்பா பூஜையறைக்குப் போய் பயபக்தியோடு ஜிலேபி பவுடரை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார்.

இப்படியாக முற்பகலில் அம்மா சொன்னாள் என்று கோவிந்தசாமிக்காக போட்ட நாமத்தை பிற்பகலில் அம்மாவுக்கும், கோவிந்தசாமிக்கும் சேர்த்துப் போட்ட திருப்தியில், படுக்கையில் சாய்ந்து கண்ணை மூடினேன்.

வைகுந்தத்தின் இரும்புக் கதவுகளை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற பலத்த சத்தத்துடன் யாரோ எனக்காக திறக்கும் சத்தம் என் மனச்செவியில் தெளிவாகக் கேட்டது.

No comments:

Post a Comment