Tuesday, December 27, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - காகங்கள்

யாரோ வருவார்.
யாரோ போவார்.
வருவதும் தெரியாது.
போவதும் தெரியாது.
பறக்கும் காக்கை கரையாதென்று
பல்லு போன கிழவி ஒருத்தி
சொன்னதாக ஞாபகம்

Friday, December 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - தேவனின் வருகை

இதோ வருகிறேன்
ஐந்து நிமிடத்திலென்று
விட்டுப் போனார் பேருந்து நிலையத்தில்.
நாட்கள் கழிந்தன.
நபர்களும் வந்தார்கள்.
அவரும் வரவில்லை.
அவர் சொன்ன
ஐந்து நிமிடமும் வரவில்லை.

Wednesday, December 14, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஒரு பொழுது

மெதுவாகச் சுழலும் மின்விசிறி.
உதிர்ந்த மல்லிகைச் சரம்
துவண்டு கிடக்கும் உறை.
மார்போரம் கிழிந்த சேலை
ஒழுகி வழியும் சாராயம்
வெளியே நிற்கும் வாடிக்கையாளர்
ரத்தக் கறையுடன் நான்

Tuesday, December 13, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - 'ம்' கள்

இளைஞன் வந்தால் யதார்த்தம்.
மணமானவன் வந்தால் நவீனத்துவம்.
மனைவியை இழந்தவன் வந்தால் பின் நவீனத்துவம்.
மனைவியைத் தொடாதவன் வந்தால் அமைப்பியல்வாதம்.
நானென்ன சொன்னாலும் அது பிழைப்புவாதம்.
ஆக மொத்தம் நாராசம்.

Monday, December 12, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இருத்தல்

கிராமத்து மூலையிலிருக்குமோர் குடிசை.

மலையடிவாரத்திலிருக்குமோர் பனை மரம்

ஊரின் எல்லையிலிருக்குமோர் கோவில்

கொடியில் தொங்குந்தென் தூமைத்துணி

Friday, December 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - உத்தமர்கள்

தெருவில் சிவனே என்று
நின்றிருந்தாலும்
அழைக்கிறாயா என்கிறார்கள்.
நடக்கும்போது நிலவைப்
பார்த்துக் கொண்டே நடந்தால்
கூடவே வருவது போல் அல்லவா தோன்றும்.
ஒன்று நடக்காதே.
இல்லையெனில்
நடக்கும் போது
நிலவைப் பார்க்காதே.

Sunday, December 4, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - மொழிதல்

இங்கு வருவோருண்டு.
வந்து போவோருண்டு.
வருவோரிடமும், போவோரிடமும்
என்றும் கேட்டதில்லை
ஏனிங்கு வந்தீர் என்றோ
ஏனதற்குள் போகிறீர் என்றோ.
ஆனால் வருவோரும்
போவோரும் தவறாமல்
கேட்கிறார்
'ஏனிங்கு வந்தாய்?' என்று.
பதிலைச் சொன்னால்
இனி மேல் வாரார் என்பதற்கில்லை.
ஆனாலும் பதிலைச்
சொல்வதற்கில்லை.

Thursday, December 1, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -நடை பயில்தல்

நாயுடன் நடை பயில வந்தவர்
இன்று வந்தார்.
வரும் போது நாயை அவர்
அழைத்து வந்தார்.
போகும் போது நாய்
அவரை அழைத்துக் கொண்டு போனது.