Sunday, November 20, 2011

எரிபரந்தெடுத்தல் - 1

பாக்யம்

'அம்மா' என்று கத்தியபடியே உள்ளே வந்தான் மாதவன்.

அடுப்படியில் துருத்து ஊதிக் கொண்டிருந்த பாக்யம் இருமியபடியே கேட்டாள். ' என்னடா?"

'அம்மா. பாவு இல்லியாம்'

'ஏனாம். ஏக்கனவே ஒரு வாரமா தறி சும்மா கெடக்கு. எப்ப வருமாம்?"

'தெரியலம்மா. மொதலாளி எதுவுஞ்சொல்லல.ஒரு எட்டு சேல மொழ பாவு வந்துதாம்.எண்ணெக்காரச் செட்டியாருக்கு குடுத்துட்டாராம்'

'யாரு நம்ம பங்களா மேடு எண்ணெக்காரச் செட்டியாருக்கா?"

'ஆமா.அவுரு ரெண்டு வாரமா சும்மாதான் இருக்காராம்'

'சரி. கஞ்சி சோறு வடிச்சு வச்சிருக்கேன்.குடிச்சுட்டு போ. பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு.மறக்காம வட்டில எடுத்துகிட்டு போடா'

மாதவன் தயங்கினான்.

'அம்மா.மத்தியான சத்துணவு சாப்பிட்டா வகுத்த வலிக்குதும்மா.சாப்பிடவே முடியலம்மா'

பாக்யம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'அதுக்கு என்ன இப்ப. சுடுசோறு வடிக்கச் சொல்றியா.ஒரு வாரஞ்சாப்டா எல்லாஞ்சரியாப் போகும்"

வார்த்தைகள் குபுக்கென்று பொங்கும் ரத்தம் போல இளஞ்சூடாக வெளிவந்தன.

மாதவன் மெதுவாக அடுப்படிக்குச் சென்றான்.

சிறிது நேரம் கழித்து மூலைகள் ஓட்டையாகிப் போன ஒயர் கூடையில் கிழிந்த நோட்டு புத்தகங்களையும் வட்டிலையும் போட்டுக் கொண்டு கிளம்பினான். போதிய இடமில்லாததால் வட்டில் பிதுங்கியது.

பாக்யம் விளக்குமாறை எடுத்து தறி,ராட்டை ஆகியவற்றை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.ஒரு நாள் விட்டால் கூட நூலாம்படை அப்பிக் கொள்கிறது.மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு வேறு.எத்தனை தடவை சீமெண்ணெய் அடித்தாலும் போகிறதில்லை.

முன் தினம் பெய்த மழையில் வீடு ஓதம் எடுத்து விட்டது. கால் வைத்தால் பிசுபிசுவென்று கோழையை மிதித்த மாதிரி சவசவக்கிறது.

சுத்தம் செய்து விட்டு கொஞ்சம் போல் பல்பொடியை போட்டுக் கொண்டு பொடக்காளியில் நின்று பல் விளக்க ஆரம்பித்தாள்.

எதிர் வீட்டு காந்தாமணி வீட்டுக்குள் வந்து குரல் கொடுத்தாள்.

'பாக்யா!"

'வாயில் இருந்த எச்சிலைத் துப்பினாள்.

'என்னா காந்தா?"

'டீ! ஒம்புருஷன் ஆடு வெட்ற கொட்டாயிக்கு பக்கத்துல இருக்கிற டிச்சியில வுழுந்து கெடக்குறாண்டி" பக்கத்தில் வந்து மெல்லிய குரலில் சொன்னாள்.

ஒரு வினாடி யோசித்தாள்.மறுகணம் கையில் இருந்த பல்பொடியைக் கொட்டி விட்டு சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள்.

'கண்டாரோழிப் பையா! குடிச்சி ஊட்டக் கெடுக்குறதுமில்லாம மானத்த வேற வாங்குறியா அவுசேரிக்கு பொறந்தவனே.வர்றேன் இருடா தாயோளி" என்று கத்தியபடியே தெருவில் ஓட்டமும் நடையுமாக நடந்தாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பூரணியும், காந்தாமணியும் பாக்யத்தை இழுத்துப் பிடித்தார்கள்.

'கத்தாதடீ.போயி அவனத் தூக்கிட்டு வா...கத்தி ஊரக் கூட்டாதடி'

'நீ விடுக்கா. பொழுது விடிஞ்சா இந்த புண்டவாயனுக்கு வேற வேலப்புண்ட இல்ல.ஊருல நாலு பேரு பாத்தா பாத்துட்டு போட்டுமே. எங்க பொழப்பு கொடி கட்டி பறக்குது பாரு இப்ப அரக் கம்பத்துல பறக்கறதுக்கு.பையனுக்கு ஒரு வாயி சோறு நல்ல சோறு போட முடியல. வகுத்த வலிக்குதுங்குறான். இவனுக்கு
எதுக்கு பொண்டாட்டி, புள்ளைங்க. சுன்னி மொழ நீளம் இருக்குறவனெல்லாம் ஆம்பளையா? த்தூ..அவுசேரிக்குப் பொறந்த பசங்க..இவனச் சொல்லி என்ன ..இவனுக்கு கட்டி வச்சாம்பாரு எங்கப்பன் ஊரக்கெடுத்த தாயோளி அவஞ்சுன்னி மேல எட்டி எட்டி மிதிச்சா சரியாப் போகும்..தாயோளிப் பசங்க..'

'பாக்யா! கத்தாம போயி அவனத் தூக்கிட்டு வா சாமி. அப்புறமா பேசிக்கலாம். போம்மா".

மொபெட்டில் வந்த ஈஸ்மூஸ் வாத்தியார் ஓரமாக நிறுத்தி விட்டு வந்து பாக்யத்தின் தோளைத் தொட்டு உலுக்கித் தள்ளி விட்டார்.

'என்னத்த பேசறது வாத்தியாரே..எத்தன பஞ்சாயத்து பண்ரது..ஒரு நா சும்மா கெடக்குறான்...அடுத்த நா கெளம்பிர்ரான்..என்னப் பாரு ..எஞ்சுன்னியப் பாருன்னு..இன்னிக்கு டிச்சியில விழுந்து கெடக்குறானாம்'

பாக்யம் உடைந்து அழுதபடியே ஆடு வெட்டும் கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

No comments:

Post a Comment