Tuesday, July 26, 2011

ழார் பத்தாயின் குதிரை - எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் தளத்தில் வெளியான என் சிறுகதை

ழார் பத்தாயின் குதிரை

மெலிந்த இடையும் அகன்ற இடுப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் புணருவதற்கு முன்னரோ,புணரும்போதோ இல்லை புணர்ந்த பின்னோ பாப்லோ நெரூதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

தந்தி அலுவலகத்துக்கு சென்றார்.
'எங்கிருந்தாலும் உடனடியாக என் வீட்டுக்கு வரவும்'
தந்தி கொடுத்தார். உலக இலக்கியவாதிகள் அனைவருக்கும்.

அன்ன கரீனினாவுடன் படுக்கையில் இருந்த தொல்ஸ்தோய் அரை நிஜாருடன் வந்து சேர்ந்தார்.நாடகக்காரியுடன் படுக்கையில் இருந்த செகாவ், தனது கரமசோவ் சகோதரர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த தஸ்தாவெஸ்கி(உச்சரிப்பு சரி என்றே நினைக்கிறேன்), தனது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீட்டைப் பற்றி உள்ளூர் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்று கொண்டிருந்த கொத்தஸார்,போர்ஹே,காப்கா,புதுமைப்பித்தன் என்று எல்லோரும் வந்தார்கள்.

வந்தவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.

'எதற்கு அழைத்தீர்?"

'நாம் எல்லோரும் உலக இலக்கியவாதிகள் என்று அறியப்படுகிறோம் அல்லவா?"
'ஆம்.அதிலென்ன சந்தேகம்"
'அதில் சந்தேகம் ஒன்றுமில்லை.நாம் எல்லோரும் உலகத்தின் பல மூலைகளில் சிதறிக் கிடக்கிறோம். நாளை நாம் இல்லாமல் போகலாம். நாம் வருங்கால சந்ததியினரால் மறக்கப் படக்கூடும்"
'அதெப்படி.நாம் வண்டி வண்டியாக, மரங்களுக்குக் கேடாக எழுதி வைத்த புத்தகங்கள் இருக்கிறதே.அதெப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவார்கள். பார்த்து விடலாம்' என்று ஆளுக்கொரு திசையில் பிரிந்து , பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்தார்கள்.

நெரூதா அவர்களை சமாதானப் படுத்தினார்.
'நான் சொல்ல வந்தது அதுவல்ல. நமக்காக ஒரு தேர் செய்யலாம். இதுவரை யாருமே அந்த மாதிரி பார்த்திருக்கக் கூடாது.காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய தேர்'
'தங்கத்தாலும் பொன்னாலும் இழைக்கச் சொல்கிறாயா?"
'இல்லை. நமது புத்தகங்களால்'

மார்க்கேசுக்கு மயக்கம் வருவது மாதிரி இருந்தது.
'புத்தகங்களாலா?"
'ஆம்'
'ஸரி'
ஆரம்பித்து விட்டார்கள்.
உலமெங்கும் உள்ள சனாதாநிகள் கவலை கொண்டார்கள்.

தனித் தனியாக இருந்தாலே இவர்களை சமாளிப்பது கடினம்.இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.என்ன செய்யலாம்? என்று பல ரகசியக் கூட்டங்கள் நடத்தினார்கள்.

தீவிரவாதக் கூட்டம் ஒன்று அவர்கள் ஒன்று கூடி இருக்கும் போது குண்டு வீசலாம் என்று முடிவு செய்தது.பின்னர் அது கைவிடப்பட்டதாக தகவல் வந்தது.

ஒரே மாதத்தில் அந்தத் தேர் செய்யப்பட்டது. எல்லோரும் குதிரைகளைக் கொண்டு வந்து கட்டினார்கள்.புதுமைப்பித்தனின் குதிரை சற்று உயரமாக இருந்தபடியால் அது முன்னாலே நிறுத்தப்பட்டது. மற்ற குதிரைகள் இரண்டு வரிசைகளாக தேரில் பிணைக்கப் பட்டன.ழார் பத்தாயின் குதிரை இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நிறுத்தப்பட்டது.

ஆனால் அவர்கள் அஞ்சியது போல் ஆபத்து சனாதாநிகள் மூலமாக வரவில்லை.
வேறொரு வடிவில் வந்தது.
*************************************************

அந்தப் பிராந்தியம் எங்கும் ஒரே ரணகளம். அடிதடி. புகை மண்டலம்.

பெரிய தலை கொண்ட நிறைய மனிதர்கள் அந்தச் சண்டையில் கலந்து கொண்டிருந்தார்கள்.அவர்களைப் பார்த்தால் எழுத்தாளர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் சமாதானம் செய்தும் அவர்கள் சண்டையை நிறுத்துவதாகத் தெரியவில்லை.கடைசியில் காம்யூ எல்லோரையும் ஒரு உதைபந்தாட்ட உதை விட்ட பிறகுதான் நிறுத்தினார்கள்.

'இப்போது என்ன. இந்தத் தேரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டு அவ்வளவுதானே"
'ஆம்"

"நான் ஒரு உபாயம் சொல்கிறேன். எல்லோரும் பயணம் செய்யலாம்"
'அதெப்படி எல்லோரும் பயணம் செய்ய முடியும். ஒருவருக்கு மேல் ஏறினாலே இந்தத் தேர் தாங்காது போலிருக்கிறதே'
'உங்களுடைய ஆக்ரோஷத்தைப் பார்த்தால் ஒருவர் ஏறினாலே தாங்காது போலிருக்கிறது.பொறுமையாக வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவராகப் பயணம் செய்யலாம்"

முதலில் ஒருவர் ஏறினார். கையில் சாட்டை ஒன்று தரப்பட்டது.
'சுளீர்' என்று ஒரு வீசு வீசினார். குதிரைகள் புயல் வேகத்தில் பறந்தன.
மணலும், காற்றும் மட்டுமே உள்ள ஒரு கட்டற்ற பெருவெளியில் பாய்ந்தோடிய அக்குதிரைகள் ஒரு புளிய மரத்தைக் கண்டதும் நின்று விட்டன. அதற்கு மேல் நகரவில்லை. அவ்வளவுதான். அவர் இறக்கி விடப்பட்டார்.

இரண்டாமவர். குஸ்தி வாத்தியாரோ எனும்படியான தோற்றம் கொண்டிருந்தார்.
கையில் சாட்டையை வாங்கிய மறு கணமே குதிரைகள் கிளம்பி விட்டன. இப்போது அக்குதிரைகள் சென்ற வழியெல்லாம் இலைகள் ரம்பியிருந்தன.சீரான வேகத்தில் சென்ற அக்குதிரைகள் சிறிது ஒய்வெடுத்து விட்டு மறுபடியும் ஏவுகணைகள் போன்று சீறின. ஒரு இடத்தில் முட்டையும், பழைய பேப்பரும் விற்பனை செய்யும் கடையைக் கண்டதும் அவை நின்று விட்டன. அவர் இறக்கி விடப்பட்டார்.

மூன்றாமவர். மோட்சம் அளிப்பதற்காகவே வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல் காணப்பட்டார்.முதல் இருவரும் தேரை ஓட்டும் போது வாயைத் திறக்கவில்லை. ஆனால் இவர் ஓயாது சொற்பொழிவாற்றிய வண்ணம்
வந்தார். அவர் செய்த உபதேசத்திற்கு குதிரைகள் தான் தூங்கியிருக்க வேண்டும்.ஆனால் அவர் தூங்கியபடியே உபன்யாசம் செய்து வந்தார்.வாய் எதையோ பிதற்றியபடியே இருந்தது. ஒரு இடத்தில் குதிரைகள் வளைவைக் கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தவர் புரண்டு படுத்தார். குதிரைகள் நின்று விட்டன.

நான்காமவர்.இவர் முகம் மிகவும் சாந்தமாகக் காணப்பட்டது. அத்தனை குதிரைகளையும் அன்போடு தடவிக் கொடுத்தார்.குதிரைகள் நெகிழ்ந்தன. தேரில் ஏறியவர் குதிரைகளை சாட்டையால் விளாசவில்லை.வலது காலை எடுத்து இடது கால் மேல் போட்டுக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிரபலமாகப் போகும் பப்புவா நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின்
நூலைப் படித்தபடி வந்தார். குதிரைகள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தன. ஒரு இடம் வந்தது. அந்த இடத்தில் வெயில் தவிர வேறு எதுவும் இல்லை. பாறைகளில் வெயில்.கள்ளிச் செடிகளில் வெயில். வெயில் அந்தப் பிரதேசக்
கிண்ணத்தில் வழிந்து வழிந்து நிரம்பிக் கொண்டிருந்தது. குதிரைகள் நிற்கவில்லை. இவராகவே குதித்து விட்டார்.

ஐந்தாமவர். இவரைக் கண்டதும் அத்தனை குதிரைகளின் முகத்திலும் இனம் புரியாத பீதி( இந்த "இனம் புரியாத பீதி"எனும் வார்த்தைப் பிரயோகம் ஆரம்ப நிலை எழுத்தாளர்களால் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியது என்று ஒரு
பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.ஆகவே "இனம் புரியாத பீதி").
சாட்டையைக் கம்பீரமாக வாங்கிக் கொண்டார். சுற்றி ஒரு முறை பார்த்தார். ஆசனத்தில் அமர்ந்து 'ஹொய்"என்ற பலத்த சத்தத்துடன் சாட்டையை வீசினார். அவ்வளவுதான்.குதிரைகள் தேரிலிருந்து பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாகப் பறந்தன. காற்றினும் கடிய வேகத்தில் அவை
மறைந்தன. ஒரே ஒரு குதிரையைத் தவிர. அது ழார் பத்தாயின் குதிரை. தேருடன் பலமாகப் பிணைத்து விட்டார்களோ என்னவோ. பரிதாபமாக அசைய முடியாமல் அப்படியே நின்றது.ஐந்தாமவர் விடுவதாக இல்லை. 'ஹொய்' என்று மறுபடியும் சாட்டையை வீசினார்.முன் இரண்டு கால்களையும் சட்டென்று மடித்து தரையில் சாய்ந்து விட்டது.நீண்ட நேரம் அவர் 'ஹொய்' என்று சாட்டையை வீசிக் கொண்டே இருந்தார்.ழார் பத்தாயின் குதிரை மட்டும் எழுந்த பாட்டைக் காணோம்.