Friday, September 23, 2011

பிலாத்து சொன்னார்....

"இந்த எளிய மனிதரை ஏன் கொல்லச் சொல்லி என்னை வற்புறுத்துகிறீர்கள். இவர் மேல் நான் எந்தக் குற்றமும் காண்பதற்கில்லை.இவருக்கு மரணதண்டனை வழங்க முடியாது.யாரங்கே! இவரை அவிழ்த்து விடுங்கள். நீங்கள் அனைவரும் போகலாம்."

சொல்லிவிட்டு உள்ளே போக யத்தனித்த பிலாத்துவின் கால்களைக் கட்டிக் கொண்டான் பரபாஸ்.

' மேதகு பிலாத்து அவர்களே ! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்.நீங்கள் செய்திருக்கும் காரியத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகிறது தெரியுமா. அவருக்கு பதிலாக நான் கொல்லப் படப்போவதால் இப்படி சொல்கிறான் என்று நினைத்து விடாதீர்கள்.இந்தத் தீர்ப்பினால்
எத்தனையோ காத்திருப்புகள் வீணாகிவிட்டன.அவரை சிலுவையில் அறைய உத்தரவிடுங்கள் மாட்சிமை பொருந்திய பிலாத்துவே!"

'உளறாதே பரபாஸ். என்ன காத்திருப்புகள் வீணாகிவிட்டன?"

'என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் மேன்மை தாங்கிய பிலாத்துவே. அவர் சுமக்க சிலுவை, அவர் சூட முள் க்ரீடம், அவர் உடலை கிழிக்க சாட்டைகள், சிந்துவதற்கு ரத்தம்,கை, கால் நரம்புகளை,தசையை,எலும்பை ஊடுருவி சிலுவையோடு பொருத்த ஆணிகள் எல்லாம் காத்திருக்கின்றன.

அவரை அடித்துத் துவைத்து இழுத்துச் செல்வதற்கு சேவகர்கள், அவர் நடக்கப் பாதை,அவரை அறைந்த சிலுவையைத் தாங்க கோல்கதா மலை,அறைந்த பின் வலது விலாவில் குத்துவதற்கு ஈட்டி எல்லாம் காத்திருக்கின்றன.

இடிந்து தூள் தூளாவதற்கு ஹெரோது மன்னனின் கோவிலும்,அவர் உயிர்த்தெழுவதற்கு 72 மணித் தியாலங்களும் காத்திருக்கின்றன.

உயிர்த்தெழுந்த பின் அது அவர் தானா என சோதிக்க சந்தேகப் பேர்வழி தோமஸ், குற்றவுணர்ச்சி காரணமாகத் தூக்கு மாட்டிக் கொள்ள யூதாஸ் ஆகியோர் காத்திருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்டு நாடு நாடாக , உயிரையும் உடமையும் காத்துக் கொள்வதற்காக ஓட யூத இனமே காத்திருக்கிறது.கொல்லப்படுவதற்காகவே பிறக்க ஏராளமான யூதக் குழந்தைகள் காலத்தின் கட்டற்ற பெருவெளியில் காத்திருக்கின்றன.

மதம் ஒன்று தோன்றி பின்னாளில் பலவாகப் பிரியக் காத்திருக்கிறது.
பின்பற்றுவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.
நம்பிக்கைகள்,,பிரார்த்தனைகள் எல்லாம் காத்திருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்காகவும், எதற்காகவும், எப்போதும் காத்திருக்காத காலம் இதை எல்லாம் நிறைவேற்றக் காத்திருக்கிறது. கருணை காட்டுங்கள் மேதகு பிலாத்து அவர்களே!

பிலாத்து திரும்பி ஆர்ப்பரிக்கும் கூட்டத்தையும், கால்களைக் கட்டிக் கொண்டிருக்கும் பரபாஸையும் பார்த்தார்.

இந்தப் பாவத்தில் எனக்கு பங்கு இல்லை என்பதற்கு சாட்சியாக இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டிவிட்டு புனித நீரில் கையைக் கழுவிக் கொண்டு சொன்னார்.

'அப்படியே ஆகட்டும்' என்று.

அது அப்படியே ஆனது.

1 comment:

  1. மிகச் சிறப்பாக வரலாற்றை நெற்றியில் அடித்தார் போல சொல்லி சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete