Wednesday, February 9, 2011

கபாட சுந்தரம் என்பவர் எவரெனில்..

கனத்த, கருத்த சரீரமும், கண்டசாலா போன்ற சாரீரமும் உடையவர்.தும்பைப் பூவைப் போல் வெளுத்த தலைமுடியும்,தொங்கு மீசையும் கொண்டவர்.எப்போதும் தூங்கி எழுந்தது போன்ற முகமுடையவர்.நன்கு மழித்த கன்னச் சதையில், வெட்டுக் காயம் கொண்டவர்.நின்றபடி பார்வையை மட்டும் தாழ்த்தி கால் கட்டை விரலைப் பார்க்க முடியாதவர்.இடது காதில் சிவப்புக் கடுக்கண் போட்டிருப்பவர்.சாதா வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிபவர். ஒரு சாண் அகலமும், அரை சாண் உயரமும் கொண்ட நெற்றியில் எப்போதாவது திருநீறு துலங்க, தெய்வ கடாட்சமாக விளங்குபவர்.



காலை நேரத்தில், முண்டாசு கட்டிக் கொண்டு பால் கறந்து பக்கத்து ஊர் டீக்கடைகளுக்கு ஊற்றுபவர்.ஊற்றிய பாலுக்கு பதில் தேங்காய் பன்னைத் தின்றுவிட்டு, திகட்டத் திகட்ட காப்பி குடிப்பவர்.வெற்றிலை, சிறிது சுண்ணாம்போடு , மட்டமான புகையிலையும் சிறிது கஞ்சாவும் சேர்த்துக் குதப்புபவர்.துளசி இலைச் சாற்றை தினம் குடிப்பவர்.பதினைந்து நாளே ஆன இளம் நாட்டுக் கோழியின் இறைச்சியை மிகவும் விரும்பி உண்பவர். ஆடுகளை அன்பாக வளர்ப்பவர்.வளர்ந்த பின் வெட்டிச் சாய்த்து விருந்து வைப்பவர்.



இழவு வீட்டில் முதல் ஆளாக நிற்பவர்.கல்யாண வீட்டில் கடைசி பந்தியில் அமர்பவர்.எவனோ ஏமாற்றிவிட்டு போன பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் செய்வித்தவர்.நல்லவர்.பண்பாளர்.கட்சிக்காக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஜெயிலுக்கு போனவர். சிறைச்சாலை உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப்போக்குக்கு ஆளானவர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதன் முதலாக ஜெயிலை விட்டு வெளியே வந்தவர்.வந்த பின் ஜெயில் சாப்பாடு பிரமாதம் என்று கருத்து சொன்னவர்.



அனைத்துலக சிவாஜி ரசிகர் மன்றத்தின் எங்களூர்க் கிளையின் பொருளாளராக இருந்தவர். திரிசூலம் படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து விட்டு அரைச்சட்டி சாராய ஊறலை அப்படியே
குடித்தவர் .குடித்துவிட்டு ஆற்றோரமாய் இருந்த ஆலமரத்தின் கீழே அரை
நிர்வாணமாய்க் கிடந்தவர்.நினைவு தெளிந்தபின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் தலைமறைவாக இருந்தவர்.
மர்லின் மன்றோவைத் தவிர வேறெந்த நடிகையின் பாவாடை காற்றில் மேல் நோக்கி பறந்தாலும் அது கவர்ச்சியாக இராது என்று நெத்தியடி அடித்தவர்.



"அத்துவானக் காட்டில் அத்தானைத் தேடி பொத்தானைத் திருகியபடி வந்தது ஒரு முத்தான ஜிகிடி" என்று வசனம் சொல்பவர்.கேட்டால் அது கவிதை என்பவர். "தாதி தூது தீது, தத்தை தூதோதாது" என்று தத்தகாரத்தையும் குறுக்கும் நெடுக்குமாக பிளப்பவர்.புலவர். எவ்வளவு புண்பட்டாலும் புறமுதுகிடாதவர்.திருக்குறள் ஒரு முழுமையான நூல் அல்ல என்றவர். ஏன் என்று கேட்டதற்கு அதில் அறம்,பொருள், இன்பம் மட்டும்தான் உண்டு,வீடுபேறு இல்லை என்று வாதிட்டவர். வாழும் வள்ளுவர் என்று பத்தாவது வார்டு கவுன்சிலரால் புகழப்பட்டவர். அந்தப் புகழ்ச்சிக்கு உரியவர் தான் அல்ல என்றும், அது ஏற்கனவே மற்றொருவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்பதால் பரிமேலழகர்,மோசிகீரனார்,ஒட்டக்கூத்தர், சீத்தலைச் சாத்தனார் என்று வேறு எதோ பெயரை பரிசீலிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டவர்.



வாய்க்கால் பாசனம் பாயும் ஐந்து ஏக்கரா புஞ்சை, நான்கு மாடுகள் வைத்திருந்தவர். கந்து வட்டிக்கு வாங்கி வீடு கட்டியவர். பின் வீட்டை விற்று வட்டி கட்டியவர்.நான்கு பெண்களுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்வித்தவர்.பொறுப்பான குடும்பத்தலைவர்.



கருப்பசாமியின் மகன் "பாட்டு" சுந்தரம் என்பது மருவி கபாட சுந்தரம் என்றானவர்.



மழை பொய்த்ததால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், அத்தனை சொத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு, நள்ளிரவில், ஊர் உறங்கும் சமயத்தில் எங்கேயோ போனவர்.



காணாமல் போன போது அழுக்கடைந்த உடுப்பும், அவமானமும் கண்ணீரும் பூசிய முகமும், கையில் வெறும் ரேகையும், நோய்ப் படுக்கையில் இறந்துபோன மனைவியின் நினைவுகளைத் தன் நெஞ்சிலும் கொண்டிருந்தவர்.



இத்தகைய அடையாளம் கொண்டவரை, புழுதி கவிந்த எதோ ஒரு நகரத்தின் தேனீர்க் கடை சிப்பந்தியாகவோ, உணவகத்தில் மேசை துடைப்பவராகவோ , மூத்திரச் சந்துகளிலோ, சாலையோரக் குடியிருப்புகளிலோ காண நேர்ந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.



"எதொவொரு கிராமம்".