Saturday, March 31, 2012

கூப்பர்

கனத்து,சிவந்து,பாரமாகிப் போன மார்புகளைக் கொண்ட அப்பெண்மணி, அந்த மதுபானக் கடையின் வடக்கு மூலையில் இடது கையைத் தன் மழமழப்பான கன்னத்தில் ஊன்றிக் கொண்டு, சிற்பிக்கோ, தேர்ந்த ஒவியனுக்கோ, ஊடு பொருளாகக் காட்சி காட்டுவது போல அமர்ந்திருந்தாள்.

இரண்டு வயதுக் குழந்தைக்குப் பிதுக்கி ஊட்டிய தயிர்சாதம் வாயிலிருந்து வழிவதைப் போல கண்ணில் சோகம் வழிந்து கொண்டிருந்தது.

அத்துவானக் காட்டில் காயும் நிலவைப் போல அவள் சோகத்தை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.அதைப் பற்றி அவள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.

லாங் ஐலண்ட் காக்டெயிலை மிடறாக விழுங்கிக் கொண்டிருந்தாள்.கையில் மால்பரோ சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

கனத்த மார்பு நிறைய சோகம் ததும்பியது போல அடிக்கடி பெருமூச்சு விட்டாள். ஊற்று நீர் போல சோகம் திரும்ப ஊறியது. இடது கையில் எந்த விரலிலும் மோதிரம் இல்லை.தனியாக வசிக்கிறாளோ என்னவோ.ஆண் நண்பர்கள் இருக்கலாம்.

இளைஞன் ஒருவன் அவளுடைய மேசையை நெருங்கினான்.

'நான் இங்கே அமரலாமா?" என்று பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டினான்.
'ஓ! தாராளமாக!"

கணவனிடம் சண்டை போட்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த மனைவி, வீட்டுக்குத் திடீரென வந்த தன் தாயைக் கண்டதும் கண்ணீரை மறைத்துக் கொள்வதைப் போல தன் சோகத்தை மறைக்க முயன்றாள்.

அறிமுகம் செய்து கொண்டார்கள்.

"நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் ஒன்று கேட்கலாமா?"

'தாராளமாய்க் கேளுங்கள்"

'நீங்கள் பெரும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது'

அடிபம்பை அழுத்தியது போல கொஞ்சம் சோகம் வெளிவந்தது.

'ஆம்'
'அது என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?"
'கூப்பர் இறந்து விட்டான்'
சிறிய அமைதிக்குப் பிறகு சொன்னான்.
'உங்கள் இழப்புக்கு என் அனுதாபங்கள்'
'நன்றி'
நாய்க்குத் தீனி போடுவது போல அந்த வாத்தைகள் வந்து விழுந்தன.
'எப்படி நடந்தது?"
'ஒரு வாரமாக தீராத வயிற்றுப்போக்கு.மருத்துவரிடம் காட்டியும் பலனில்லை.நேற்று..' மார்புகள் விம்மின.தேற்றினான்.
'கூப்பர் போல சிறந்த நண்பனைப் பார்க்காவே முடியாது.என் மேல் அளவிட முடியாத அன்பு.இந்த உலகில் எனக்கு இருந்தது அவன் மட்டும் தான். இப்போது அவனும் இல்லை.'
குலுங்கி அழ ஆரம்பித்தார்.தேற்றினான்.

'கூப்பரை உங்களுக்கு எத்தனை நாட்களாகத் தெரியும்?"
'கடந்த இரண்டு வருடங்களாக'
அடக்கம் செய்தாகிவிட்டதா என்று கேட்க நினைத்தவன் கேட்கவில்லை.

இரண்டு செய்லர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'இழப்புகள் இயல்பானது.வருத்தப்பட வேண்டாம்.கடவுள் விதித்தது அவ்வளவுதான்.'

'அதை நினைத்துதான் மனதைத் தேற்றிக் கொள்கிறேன்'
'நன்று!என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீர்களா?"
மெலிதாகச் சிரித்தார்.

'அதற்கென்ன தாராளமாக ஏற்றுக் கொள்கிறேன்.உங்கள் அன்புக்கு என் நன்றிகள்'
'மகிழ்ச்சி.நீங்கள் எங்கே பணி புரிகிறீர்கள்'
'நான் ஒரு செவிலி. நீங்கள்?"
'ஒரு பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணி புரிகிறேன்'
'ஓ!ஒரு நிமிடம் இருங்கள்.நான் என் கைகளைக் கழுவிக் கொண்டு வருகிறேன்.சிகரெட் சாம்பலில் என் கைகளை வைத்து விட்டேன்'
'சரி'
ஒரு நிமிடம் கழித்து தன் கனத்த மார்புகள் குலுங்க ஓடி வந்து நாற்காலியை அவனுக்குப் பக்கத்தில் மெலிதாக இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

'உங்களுக்கு மணமாகிவிட்டதா?"

'இல்லை. நான் ஒண்டிக்கட்டைதான்.எந்தப் பெண்ணுக்கும் என்னைப் பிடிப்பதில்லை.ஏனோ தெரியவில்லை.உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?"

'பிடித்திருக்கிறது.நல்ல மனிதர் நீங்கள். உங்களை யாருக்கும் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்'

'நல்லவனாக இருப்பதால்தானோ என்னவோ'

தன் வலது கையை அவளது இடது கை விரல்களுடன் சேர்த்துக் கொண்டான். விடுவிக்க அவள் முயலவில்லை.

'வேறு ஏதாவது பானத்திற்கு ஆணை கொடுக்கட்டுமா?"
'உங்கள் இஷ்டம்'

பணிப்பெண்ணை அழைத்து இரண்டு யெகமைஸ்டர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?"

'ஹோஜன்வில்'
'கெண்டகியா? லிங்கன் பிறந்த ஊர்தானே?"
'ஆம்.நான் கூட அவர் பிறந்த நாளில் தான் பிறந்தேன்'
'பிப்ரவரி பனிரெண்டா?'
'ஆம்.நீங்கள்'
'நான் இந்த ஊர்தான்.லிங்கனுக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்"
'தெரியும்.'

அவர்களுடைய உதடுகள் அனிச்சையாக முத்தமிட்டுக் கொண்டன.

இரண்டு கோல்ட்ஸ்லாகர் ஷாட்களுக்கு ஆணை கொடுத்தான்.

'உங்கள் வேலை எப்படிப் போகிறது?'
'பல் துலக்குவது போல ஒரே மாதிரியான வேலை. என்ன செய்வது?"
'என் கதையும் அதேதான்.'
நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அவளுடைய இடது கன்னத்தில் முத்தமிட்டான்.பல நாள் பசித்தவன் தன் தட்டில் இடப்பட்ட அப்பத்தை ஏற்றுக் கொள்வது போல ஏற்றுக் கொண்டாள்.

'இன்றிரவு என்ன செய்கிறீர்கள்?"
'ஒன்றுமில்லை'
'என் வீட்டுக்கு வருகிறீர்களா?"
'ஓ! தாராளமாக"

இறுக்கி அணைத்தபடி மதுபானக் கூடத்தை விட்டு வெளியேறினார்கள்.

அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

படுக்கையில் அவளுடைய கனத்த மார்புகளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு கேட்டான்.

'கூப்பரை பார்க்க ஆசையாக இருக்கிறது.புகைப்படம் ஏதாவது இருக்கிறதா?"

'ஓ!"

தன்னுடைய கைப்பேசியை எடுத்துக் காட்டினாள்.

அவளும் கூப்பரும் இரவில் கட்டிலில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

கூப்பருக்கு நல்ல பொசுபொசுவென்ற செம்பட்டைத் தலைமுடி. மெலிதான மீசை.கோதுமை நிறம். ஒளிரும் கண்கள். நான்கு கால்கள்.