Tuesday, February 7, 2012

ஆயிரத்தில் ஒருவன்

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

அந்த மிகப் பெரிய அலுவலக வளாகத்திற்கு வெளியே இருக்கும் கடைகளுக்கு சாப்பிடுவதற்காயும்,டீ குடித்துவிட்டு புகைப்பதற்காயும் வெளியே வரும் பணியாளர்களை நோக்கி, ' சார்!ப்ளீஸ் சார்' என்றவாறு ' பதினைந்து லட்சம் தனி நபர் கடன்.சுலபத் தவணை.உடனடியாக' என்று அச்சடிக்கப்பட்ட தாளை நீட்டியபடி இருந்தார் அவர்.

பசி எடுத்தது. எதிரே இருந்த டீக் கடைக்குப் போய் ஒரு போண்டா சாப்பிட்டு விட்டு டீ குடித்துவிட்டு வந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டு தொடர்ந்தார். ' சார்! ப்ளீஸ் சார்"

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

செக்யூரிட்டி வந்து சத்தம் போட்டான்.' தும் உதர் ஜாவோ! யஹா கடே ரஹேனே கி ஜரூரத் நஹி ஹே! தும் ஜாவோ' வளாகத்தை ஒட்டி வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் நின்று கொண்டிருந்தவர், எதிரே இருந்த கடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டார்.

'யோவ்! கொஞ்சம் தள்ளி நில்லுய்யா" கடைக்காரனின் சத்தத்திற்கு இணங்கி சற்றுத் தள்ளி மண்டையைப் பிளக்கும் வெயிலில் நின்று கொண்டார்.

மதிய நேரம் ஆக ஆக பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். ' சார்!ப்ளீஸ் சார்"

சட்டை செய்யாமல் சென்றன சில கைகள்.வேண்டாம் என்பது போல் மறுத்தன சில கைகள்.வாங்கிக் கொண்டன சில கைகள்.

கூட்டம் குறைந்ததும் பசி எடுப்பதை உணரத் தொடங்கினார். பக்கத்துக் கடைக்குப் போய் ஒரு ஆறிப் போன போண்டாவை சாப்பிட்டு , டீ குடித்து விட்டு வந்து வெயிலில் நின்று கொண்டார்.உட்கார அங்கே எதுவுமில்லை.

சுவற்றில் சாய்ந்து கொண்டார்.தாகம் எடுத்த போது கைப்பையில் இருந்த தண்ணீர்ப் போத்தலில் இருந்து கொஞ்சம் தண்ணீரை மிடறாக விழுங்கினார்.

ஒருவன் அவர் கொடுத்த தாளை வாங்கி இரண்டு எட்டு வைப்பதற்குள் கீழே போட்டு விட்டு போனான்.

காற்றில் பறந்த அந்தத் தாளைப் பிடித்து கையில் இருந்த கட்டோடு சேர்த்துக் கொண்டார்.

'தெரியாமத் தூக்கிப் போட்டுட்டுப் போனா பரவால்ல சார்.இஷ்டம் இருந்தா லோன் வாங்கப் போறாங்க.வாங்கி கண்ணுக்கு முன்னாடி போட்டுட்டுப் போனா என்ன சார் அர்த்தம்" என்று பக்கத்தில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் குறைபட்டுக் கொண்டார்.

மாலை வேளை வந்ததும் மிச்சமிருந்த தாள்களை கைப்பையில் போட்டுக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி தளர்வாக நடக்க ஆரம்பித்தார்.

அடுத்த நாள் காலை சுமார் ஏழு மணியளவில் அந்த அலுவலக வளாகத்திற்கெதிராகவும், கடைகளுக்கெதிராகவும் வழியெங்கும் சிதறிக் கிடந்த ' தனி நபர் கடன் தாள்களை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், மற்ற
குப்பைகளோடு பெருக்கி கூடையில் போட்டார்கள்.

சுமார் எட்டு மணியளவில் அவர் வளாகத்திற்கு எதிரே இருந்த கடையில் ஒரு டீயும் போண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்து இளவெயிலில் நின்று கொண்டார். தன் ' தனி நபர் கடன்' தாள்களுடன்.