Tuesday, January 4, 2011

சொல்லாமல் போனவரும்,இப்போது இருப்பவரும்

இரண்டு வருடங்களுக்கு முன்பு மழை பொய்த்ததாலும்,போன வருடம் பேய் மழை பெய்து தோட்டம்,துரவுகள் நாசமானதாலும்,திருவிழா காணாத ஆராத்தம்மனுக்கு இந்த வருடம் காப்பு கட்டி, ஊரெல்லாம் பந்தல் போட்டு,'ஜே!ஜே!' என்று எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியிருக்கிறது.

'ஆத்துக்கு அந்தப் பக்கம்
ஆடு மேக்கிற சின்னத்தம்பி
ஆடு போனா மசுராச்சு
ஆட்டத்துக்கு வந்து சேரு...!!!'

என்று மத்தளக்காரர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்து விட்டு, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து உருமாலை கட்டிக் கொண்டு பவக்காளி 'தும்!தும்!' எனக் குதிக்க ஆரம்பித்தான்.

ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இந்த பாட்டைக் கேட்டவுடன் கைக்குழந்தையின் ஞாபகம் வந்தது.கைக்குழந்தைக்கு வயது எண்பது இருக்கும். அது அவருடைய செல்லப் பெயர். உண்மையான பெயர் இப்போது தேவையில்லை.அதைத் தெரிந்து கொண்டு நானோ,நீங்களோ செய்யப் போவது ஒன்றுமில்லை.பெயர் என்பது அழைப்பதற்குத்தான். அழைப்பதற்கு ஆள் இருந்தால்தானே?

போன வாரம் தான் போய்ச் சேர்ந்தார். எங்கள் பஞ்சாயத்து யூனியனில் மழை பெய்கிறதென்றால் அது அவருக்காகத்தான்பெய்கிறது என்பார் என் அப்பா.அவ்வளவு நல்ல மனிதர். காலம் கலிகாலம்.நல்லவர்களுக்குத் தான் நல்ல சாவு வருகிறதில்லையே.
வாரம் ஒரு முறை கூடும், முடுக்கந்துறை சந்தைக்கு வரி வசூல் செய்யப் போனவர், திரும்பி வரும்போது ,தோரணப் பள்ளத்துக்கு அருகில் அடிபட்டு அலங்கோலமாகக் கிடந்தார்.

வசூலித்த பணத்துக்கு ஆசைப்பட்டு எவனோ ஒருவன் அவரை அடித்து போட்டு விட்டு . ஒங்கிக் கத்தக் கூடமுடியாதபடி கழுத்தை கவனமாக அறுத்து விட்டும் போயிருந்தான்.கிழக்கு திசை நோக்கி கண்களை வெறித்தபடிஉயிரை விட்டிருந்தார். அடித்தால் திருப்பி,வார்த்தையால் கூட எதிர்ப்பு காட்ட முடியாத அந்த வயதானவரை, இப்படி பண்ணி விட்டு போனவன், யாரென்று எனக்குத் தெரியவில்லை. கொளத்துக்காடு ஓதிச்சாமி வகையறாவைச் சேர்ந்த ஒருவன் தான் என்று பொவாக்கு தம்பி நிச்சயமாகச் சொன்னான்.

மத்தாளச் சத்தம் நின்றது.

'வுழுந்தா பெருங்காயம்
என் வால்பாற வெங்காயம்
காயத்துக்கு கட்டுப் போட்டு
காலம்பற வந்து சேரு..!!!' என்று யாரோ பெருங்குரலில் கத்தினார்கள். நெருப்பு தெறித்த மாதிரி மத்தாளம் சத்தம் எழுப்பிக் கொண்டு முழங்கியது.

இதே பாட்டுகளை, அவர் என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு பாடும் போது கேட்டிருக்கிறேன்.
பாடுவதற்கு பாட்டுகள் இன்னும் அவரிடம்  இருந்திருக்கலாம்.பாடுவதற்கு அவர் இல்லை.கேட்ட பாடல்கள் இனிமையானவைதான்.கேட்காத பாடல்கள் இன்னும் இனிமையானவையாகக் கூட இருக்கலாம். யார் கண்டது.?

அவர் பிணமாகக் கிடந்ததை முதலில் பார்த்தது நான். அவர் கைகள் அப்போது அசைந்த மாதிரி தெரிந்தது.உயிர் இருக்குமோ என்ற ஆசையில் பக்கத்தில் போனேன். வலது கையை ஒட்டி கோதுமை நாகம் ஒன்று அவரின் கழுத்துக்குப் பக்கத்தில் தலை வைத்துப் படுத்திருந்தது. அதை அடித்துத் தூக்கிப் போட்டு விட்டு, அவரைத் தூக்கி பக்கத்திலிருந்த மோரியில் கிடத்தினேன். போலீஸும்,ஆம்புலன்சும் வந்த போது மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தது.

'ஆஸ்பத்திரிக்கு நான் போறேன். நீ போய் கெளவி கிட்டயும்,ஊர்லயும் தகவல் சொல்லிப் போடு' என்று சொல்லிவிட்டு பொவாக்கு தம்பி போய் விட்டான். நான் சாவு செய்தி சொல்ல எங்கேயும் போனதில்லை.அதுவும் சம்பந்தப்பட்டவரிடமே போய் சொல்வது எப்படி? ஒரேடியாக போய் 'நீ கட்டினவன் செத்துப் போயிட்டான்" என்று கெளவியிடம் சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. அவளுக்கு காது கொஞ்சம் மந்தம். காதுக்கு பக்கத்தில் போய் கத்தி சொல்ல வேண்டும். அவள் சத்தியமாகத் தாங்க மாட்டாள்.அவளுக்கு அவரை விட்டால் வேறு உலகம் தெரியாது. இருந்தாலும் போனேன்.

'ஆத்துக்கு கரயிருக்கு
ஆட்டுக்கு கெடயிருக்கு
வயலுக்கு வரப்பிருக்கு
வாய்க்காலத் தாண்டி வந்து சேரு...!!" - பவக்காளி வெறிசலங்கை எடுத்துக் கொண்டு மைதானத்தை அளந்து கொண்டு ஆடினான்.


கைக்குழந்தையின் வீடு ஊருக்கு மேற்குப்புறத்தில் இருந்த மாகளிக் கவுண்டன் குதித்து செத்த, பாழுங்கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்தது. சொந்தமாக ஒரு ஏக்கரா நிலம். நிலம் மொத்தமும் கீரைப்பாத்திகள். மெதுவாக நடந்து வீட்டுக்குப் பக்கத்தில் போய் விட்டேன்.
நாலு எட்டு இருக்கும்போது கால் பின்னல் போட்டது. எப்படி சொல்கிறது?

ஜன்னலிலிருந்து மஞ்சள் நிற குண்டு பல்பின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன். அடுப்புக்கு முன்னால் கால் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.சுருங்கிப் போய் எலும்போடு ஒட்டிக் கொண்ட மார்புகள். நைந்து போன இரட்டை இழை சேலை.எப்போதும் லேசாக ஆடிக் கொண்டிருக்கும் தலை.கவிந்து தரையையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள்.பக்கத்தில் அப்பொது வடித்திருந்த அரிசிச் சோறு. கீரைக் கூட்டு. உள்ளே போய் குரல் கொடுத்தேன்.

"மழ வர்ராப் போலிருக்கு.நேரம் என்னன்னுட்டு தெரியல. இந்த வரி வாங்கித்தான்
வகுரு காயணுமா.சவத்தெளவு. சட்டுனு சாப்டமா..சடாரு படுத்தமானு இல்லாம? எத்தன நேரமா இப்பிடி உக்காந்து கெடக்க? யாருக்கு இப்பிடி சம்பாதிக்கனுமின்னு இன்னிக்கி கேட்டுப் போடுவேன் கேட்டு. கண்ணு வேற மசங்கலாத் தெரியுது. இல்லன்னா ஒரு எட்டு சந்தைக்கு வெருசா போய்ட்டு வந்துருவேன். நீ கெளவனப் பாத்தியா சந்தையில? வெளியில போனா நேரத்துக்கு வரணுமா இல்லையா?" என்று என்னிடம் பேசிக் கொண்டே போனாள்

சொல்லிவிட்டேன்.

'ஜாமம் இப்போ நடு ஜாமம்
ஜலத்துக்கு மேல வெறும் வானம்
ஜமுக்காளக் கோடங்கி
வாரதுக்குள்ள வந்து சேரு...!!!!- பவக்காளி தீச்சட்டியை தலையில் வைத்துக் கொண்டு, மத்தளக்காரன் அடித்த
நாலு அடி துக்கடாவுக்கு எடுப்பாக, நடை வைத்து ஆடினான்.

கைக்குழந்தையை ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்து அடக்கம் செய்யும் வரை நான் கிழவியின் பக்கமே போகவில்லை. ஊர் ஜனங்கள் அத்தனை பேரும் வந்து ஒரு மூச்சு அழுதுவிட்டு போனார்கள். அவள் அழவில்லை. எதையோ வெறித்தமாதிரி பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். கவிந்த கண்களும்,நடு நடுங்கும் தலையுமாக அப்படியேதான் இருந்தாள்.

இன்றைக்கு ஊரே கூடி திருவிழாவில் சந்தோஷமாக இருக்கிறது. அவள் வரவில்லை. போய் ஒரு நடை பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது.மெதுவாக எட்டு வைத்து நடந்தேன். போய் என்ன கேட்பது? ' நல்லாருக்கியா? என்று கேட்பது உத்தமமில்லை.

மொத்தமாக போய் ' அப்பிடியே வந்தேன்..சரி ஒன்ன ஒரு எட்டு பாத்துட்டு போலாமின்னு' என்று சொல்லி வைப்போம் என்று முடிவெடுத்துக் கொண்டு நடந்தேன். இப்போது உருமியின் சத்தமும் சேர்ந்து கேட்டது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே கிழவி வீட்டுக்கு வெளியே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது தெரிகிறது. மணி எட்டாகிறது. இந்த நேரத்தில் வெளியே உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாள். மேய்ந்து கொண்டிருந்த கோழிகளைப் பிடித்து கூடையில் கிடத்துவதற்குள் போதும் போது என்றாகி விட்டது. அவளிடம் துளி அசைவு இல்லை. எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் உட்கார்ந்து ' அங்க என்னத்த பாக்குறவ?" என்று கேட்டேன். பதில் இல்லை. பார்வையை திருப்பவில்லை.

தோளைத் தொட்டுத் திருப்பினேன். மெலிதாக நடுங்கும் தலையை அரை வட்டமாகத் திருப்பினாள்.

'நான் ஆருன்னு தெரியுதா பாட்டி?" - , உதடு விரியாமல் சிரித்தாள்.

' அங்க என்னத்த பாக்குறவன்னு கேட்டேன்? "

என்னை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்து விட்டு சொன்னாள்.

"மழ வர்ராப் போலிருக்கு.நேரம் என்னன்னுட்டு தெரியல. இந்த வரி வாங்கித்தான்
வகுரு காயணுமா.சவத்தெளவு. சட்டுனு சாப்டமா..சடாரு படுத்தமானு இல்லாம? எத்தன நேரமா இப்பிடி உக்காந்து கெடக்க? யாருக்கு இப்பிடி சம்பாதிக்கனுமின்னு இன்னிக்கி கேட்டுப் போடுவேன் கேட்டு. கண்ணு வேற மசங்கலாத் தெரியுது. இல்லன்னா ஒரு எட்டு சந்தைக்கு வெருசா போய்ட்டு வந்துருவேன். நீ கெளவனப் பாத்தியா சந்தையில? வெளியில போனா நேரத்துக்கு வரணுமா இல்லையா?"