Wednesday, June 29, 2011

...என்று சொல்லப்பட்டது

48 முறை வாய்தா வாங்கப்பட்ட
அந்த வழக்கின் தீர்ப்பு ஒரு
அமாவாசை நாளன்று கீழ்கோர்ட்டில்
வாசிக்கப்பட்டது.
எதிர்த்து மேல்கோர்ட்டில்
முறையீடு செய்யப்பட்டது.
அங்கேயும் அதே தீர்ப்பு
உறுதி செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டிலும்
அதே தண்டனை வழங்கப்பட்டது.
ஒரு புகழ் பெற்ற சிறைச்சாலையில்
அவனுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது.
கருணை மனு ஒன்று
மேதகு ஜனாதிபதிக்கு
அனுப்பப் பட்டது.
கொஞ்ச நாள் நிலுவையில் இருந்து
அதுவும் நிராகரிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றும் நாள்
அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
அந்நாளன்று அவனுக்கு
காலையில் குடிக்க பால்
கலக்காத தேநீர் வழங்கப்பட்டது.
தண்டனை நிறைவேறியதும்
பிரேத பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.
பின் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

இதே தண்டனை,
வழக்கு பதியப்படாமல்
வாய்தா வாங்கப்படாமல்
தீர்ப்பு வாசிக்கப்படாமல்
கருணை மனு
விண்ணப்பிக்கப்படாமல்
சிறைச்சாலையில் இடம்
வழங்கப்படாமல்
தண்டனை நிறைவேற்றும் நாள்
அறிவிக்கப்படாமல்
ஆற அமர யோசிக்கப்படாமல்
என்னால் ஒரு உயிருக்கு
வழங்கப்பட்டது.

அது கொலை என்று சொல்லப்பட்டது

Saturday, June 25, 2011

கருநாகங்கள் புணரும் கல்லறை

அந்தக் கோவிலைப் பற்றி பாம்படக் கிழவி சொன்ன கதையின் சாரம்சம் இதுதான்:

" மேற்கிலிருந்து  கூட்டம் கூட்டமாக மக்கள்,கால்நடைகள்.அந்த கானகத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மேற்கிலிருந்து வந்ததன் காரணம் அங்கிருந்த ஒரு துஷ்ட மாந்த்ரீகனின் இம்சைகள். இரவுக்கு ஒரு பெண் ,சாராயம், ஒரு கிடா.
தாங்க மாட்டாமல் அவர்கள் கிளம்பி மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி, கானகத்தை ஒட்டி இருந்த ஒரு கிராமத்தை நோக்கிப்
போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வழித்துணையாக ஒரு கல் தெய்வம். பின்னாலே வந்து கொண்டிருந்தது.கிழவர்களும்,
கிழத்திகளும் வலிமையான உட்டி(மூங்கில்) மரங்களில் கட்டிய தொட்டில்களில் தொங்கிக் கொண்டு வந்தனர். அந்தக் கல் தெய்வம்
அவர்கள் பாதி வழியைக் கடந்து வந்து ஒரு இடத்தில், குடிக்க நீரில்லாத ஒரு இடத்தில் இளைப்பாற அமர்ந்த போது அவர்களுக்கு
அறிமுகமானது. அவர்கள் தங்களுக்குத் துணையாக வருமாறு அதை வேண்டிக் கேட்டுக் கொண்டனர். மந்திரவாதியினால் எதேனும் இடர்
நேருமோ என்று அவர்கள் அஞ்சினர்.தான் இந்த இடத்தை விட்டுவரலாகாது என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அம்மக்களின் அன்புக்கிணங்க
அவர்களின் வேண்டுகோளை அது ஒப்புக் கொண்டது.ஆனால் ஒரு ஒப்பந்தத்தின் பேரில்.
அதாகப்பட்டது, "நீங்கள் அனைவரும் முன் செல்வீர்களாக.
நான் பின் தொடர்ந்து உங்களைக் காத்துவருவேன்.யாரும் திரும்பிப் பார்க்கலாகாது. "
"' ஆகட்டும். நீ எங்களைத் தொடர்ந்து வருகிறாய்
என்று எங்களுக்கு எப்படித் தெரியும்"
' என் கால் சலங்கைகள் ஒலி எழுப்பியபடியே வரும்.அதுதான் சமிக்ஞை."
 இப்படியாக அவர்கள் ஏழு இரவுகள்,ஏழு பகல்கள் கடந்து
பயணத்தைத் தொடர்ந்த வண்ணமிருந்தார்கள். கானகத்தின் ஒரு எழில் மிகுந்த பகுதியைக் கடக்கும் போது, அந்தக் கல் தெய்வமானது அந்தக்
கானகத்தின் எழிலில் மெய் மறந்து, வற்றாது பொங்கிக் கொண்டிருந்த ஒரு நீருற்றில் காலை வைத்தது. சலங்கைச் சத்தம் நின்றது.
நான்கு அடி முன்னால் வைத்த மக்கள் சலங்கை ஒலி நின்றது கண்டு திரும்பிப் பார்த்தனர். கல் தெய்வம் கோபம் கொண்டு
' நான் இனி மேல் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன். இனி என் வீடு இங்கேதான். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டி வழிபடுங்கள்'
என்று சொல்லி காற்றில் கறைந்தது"

ஆனால் இதைக் கேட்ட பின்பும் மூப்பன் சமாதானமாகவில்லை.

'கிழவி உளறுகிறாள். நான் அதை நம்பத் தயாரில்லை'
' சரி.நீ நம்பினாலும்,நம்பாவிட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை'
' அது கோவில் அல்ல. கல்லறை'
'மூப்பா! இதை நீ பல தடவை என்னிடம் சொல்லி புலம்பிவிட்டாய். ஒன்று கேட்கிறேன்.அது எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?"
' நீ என்னை நம்பவில்லை.அப்படித்தானே?"
"மூப்பா! அது கோவிலோ..கல்லறையோ..இன்று வரை அது நம்பிக்கைதான்.அதை பார்த்தவர்கள் கிடையாது.
நாம் கேட்டதெல்லாம் இந்தக் கிழவிகள் சொல்லும் கதைகள் தான். அதுவும் உண்மையா என்று தெரியாது.நீ ஏன்
அதைப் பற்றி வீணில் கவலைப் படுகிறாய்?"
"காரணம் உண்டு.அந்தக் கல்லறைக்குக் கீழே எதோ ஒரு மர்மம் புதைந்திருக்கிறது"
"இந்தப் பிதற்றலை நான் கோடி முறை கேட்டு விட்டேன். என் வீட்டில் உன்னுடன் சேர்ந்து சுற்ற வேண்டாம், பழக வேண்டாம் என்று
எச்சரித்திருக்கிறார்கள். அது என்ன எழவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. பிறக்காத குழந்தைக்கு
பெயர் வைக்காதே.இதை இத்தோடு விட்டு விடு"

மூப்பன் என்னிடம் கோபம் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் இதைப் பற்றி பலரிடம் புலம்பிக் கொண்டிருப்பதாக
கொம்பன் என்னிடம் சொன்னான். ஒரே வாக்கியம்' அது கோவில் அல்ல.கல்லறை'. இதையேதான் திரும்பத் திரும்ப புலம்புவதாக
சொன்னான்.

ஒரு பௌர்ணமி நாளின் நள்ளிரவில், ஊரோரம் இருந்த மசானத்தில் இருந்து பயங்கரமான அலறலும், கூச்சலும் எழுந்தது. நாங்கள் அனைவரும் அங்கு
சென்று பார்த்தபோது மூப்பன் அங்கிருந்தான். நிர்வாணமாக நின்றிருந்தான்.அத்தனை கல்லறைகளையும் தோண்டிப் போட்டிருந்தான்.
முன் தினம் இறந்திருந்த ஒரு கிழவியின் உடல் உட்பட. அது பாதி அழுகி,அழுகாமல், பன்றிகள் குதறிய கை, கால்களற்ற சதைப் பிண்டத்தைப் போல்
காட்சியளித்தது.

ஊரார் அவனை நெருங்க பயந்தார்கள். கொம்பன் அவனைப் பின்னால் இருந்து தாக்கி மயக்கமுறச் செய்தான். அவனை ஒரு இருட்டறையில்
அடைத்து வைப்பதென முடிவானது. நாங்கள் அவனை அங்கே கொண்டு செல்லும் முன் விழித்துக் கொண்டான்.
 ' அது கோவில் அல்ல ..கல்லறை..என்னை விடுங்கள்..நான் போக வேண்டும்.
நான் அதைக் கண்டுபிடிப்பேன்...உங்களிடம் சொல்வேன்..நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்...என்னை விடுங்கள்...இன்னும் நிறைய கல்லறைகள் இருக்கின்றது..
அவைகள் என்னை அழைக்கின்றது...அதில் ஒன்றில் தான் நான் தேடும் கல்லறை உள்ளது..அந்த மர்மத்தைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன்.என்னை விடுங்கள்'
என்று கத்தியபடியே வந்தான்.அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அந்த இருட்டறைக்கு ஜன்னல்கள் கிடையாது. ஒரு கதவு. கீழே சாப்பாட்டு தட்டை கொடுப்பதற்கு ஒரு சிறிய வழி. அவ்வளவே.
அங்கே அவனை அடைத்தபின்னர் எங்கள் யாருக்கும் நிம்மதி இல்லை. ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ.
அப்படி இருக்கும் பட்சத்தில் அதைத் தெரிந்து கொண்டு செய்யப் போவது என்ன?. என்ன அங்கே இருக்கும். வரலாற்றின் மறைக்கப்பட்ட
உண்மையோ? யாருக்கும் தெரியாத கதையோ?புதையலோ? மனம் வெகுவாகக் குழம்பியது.

நாட்கள் கடந்தன.இப்போதெல்லாம் மூப்பன் அவனுடைய வழக்கமான புலம்பலை விட்டு விட்டு புதிதாக ஒன்றை உளற ஆரம்பித்தான்.
'என்னைக் கருநாகங்கள் தீண்ட வருகின்றன.என்னைக் காப்பாற்றுங்கள்.என்னை வெளிக்கிடுங்கள்.' முதல் முதலாக இந்த அலறலை
அவன் அலறியதும் நாங்கள் பதறிப் போய் ஓடினோம்.ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. மூப்பன் அறையின் ஒரு மூலையில் நிர்வாணமாக
குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தேன். அவனுடைய கண்கள் ஒரு திசையை வெறித்துப் பார்த்தபடி இருந்தன.மிகவும் பயந்திருந்தான்.
ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக வீடு திரும்பினோம்.

இந்தப் புதுப் புலம்பல் எங்களுக்கு வழக்கமாகி விட்டது.ஒரு நாள் பௌர்ணமி இரவில் அவனுடைய கூச்சல் வழக்கத்திற்கு மாறாக
மிகவும் பயங்கரமானதாயிருந்தது. ஆதி பயத்தின் அத்தனை சக்திகளையும் அவன் தன் குரலில் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தான்.

அன்று நாங்கள் அங்கே போகாதிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அடுத்த நாள் காலை தான் தெரிந்தது. மூப்பன் இறந்திருந்தான்.
அவனுடைய ஆடையில்லாத மெலிந்த உடல் முழுவதும் கருநாகங்கள் தீண்டிய தடயங்கள் காணக் கிடைத்தது. மிகுந்த சோகத்தில்
அவனை அடக்கம் செய்தோம். அவனுக்காக அவன் விட்ட பணியை நாங்கள் தொடர்வது என்று முடிவு செய்தோம்.

இது நடந்த சில நாட்களில், கொம்பன் ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கூறினான். அவன் ஒரு கனவு கண்டதாக.
அதன் சாரம்சம் என்னவென்றால்: ' ஒரு கானகம்.அடர்த்தியான, அழகான கானகம். அதன் நடுவில் வெள்ளை மணல் பகுதி.
அதன் நடுவே ஒரு கல்லறை. பௌர்ணமி நாள். அங்கே நிறைய கருநாகங்கள் மெதுவாக பல திசையில் இருந்து ஊர்ந்து
வருகின்றன. அந்தக் கல்லறை மீது மெதுவாக ஏறிப் புரள்கின்றன."

"சரி! அப்படியே வைத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கு எப்படிப் போவது?"
"மூப்பனின் அறையில் அவன் நிறைய குறியீடுகள் வரைந்து வைத்திருக்கிறான். அதை பார்த்தால் தெரியும்"

நாங்கள் இருவரும் அந்தக் குறியீடுகளை மிகக் கவனமாக ஆராய்ந்து அந்தக் கல்லறைக்குப் போவதற்கான வழியைக் கண்டு பிடித்தோம்.

எதிர்வரும் பௌர்ணமி நாளில் அங்கே போவதாக முடிவெடுத்துக் கொண்டோம். இடைப்பட்ட ஒரு நாளில் கொம்பன் இன்னொரு
ஆச்சரியமான கனவைக் கண்டதாகக் கூறினான். ' அந்தக் கருநாகங்கள் ஒரு பெண் பாம்போடு புரள்வதாகவும்.அந்தப் பெண் பாம்பு
மிக்க வலியில் துடிப்பதாகவும், அதை ஒரு ஒற்றைக் கருநாகம் பக்கத்திலிருந்த ஒரு அத்தி மரத்தின் பொந்தில் இருந்து பார்ப்பதாகவும்,
அந்த ஒற்றை நாகத்தால் நகர முடியவில்லை எனவும், அதன் கண்களில் தெரியும் கோபத்திலிருந்தும், விரிந்த படத்தின் அனலிலிருந்தும்
அந்தப் பெண் பாம்பு, அதற்குச் சொந்தமானது போல் தெரிகிறது என்றும் கூறினான்,"

அந்த இடத்திற்கு போகவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. மர்மம் மெலிதாகப் புலப்படத்தொடங்கியது.

அந்தப் பௌர்ணமி நாளின் மதியப் பொழுதில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் கானகத்தின் வழியே நடப்பது அவ்வளவு
எளிதாக இல்லை. ஒரு வழியாக மாலை முடிந்து இரவு தொடங்கிய ஒரு நிமிடத்தில் நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம்.அந்தக் கல்லறை
இருந்தது. நடுநிசியில் தான் கருநாகங்கள் வருமென கொம்பன் உறுதி படக் கூறினான். நாங்கள் ஒரு கூடாரம் அமைத்தோம்.

உணவு தயாரித்துக் கொண்டே குடித்தோம். எனக்கு உணவு உண்டபின், உறக்கம் கண்களை மிகப் பலமாக அழுத்தியது.

' கொம்பா! நான் கொஞ்ச நேரம் உறங்குகிறேன். சரியாக நடுநிசி வந்ததும் என்னை எழுப்பி விடு' என்று சொல்லி விட்டுப்
படுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு தானாகவே விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை.

' கொம்பா! நீ எங்கே இருக்கிறாய்.?"
"இங்கே தான். உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன்."
'நேரம் என்ன?'
'விடிந்து விட்டது'
'என்னது விடிந்து விட்டதா? ஏன் என்னை எழுப்பவில்லை'
'எனக்கு எழுப்பத் தோன்றவில்லை'
'உளறாதே. சரி நீ கருநாகங்களைப் பார்த்தாயா?"

அவனிடம் பதில் இல்லை. ' கொம்பா! கொம்பா' என்று கத்திக் கொண்டே கண்களைத் திறந்து கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

என் முன்னால் இருந்த கல்லறை மறைந்தது.கானகம் மறைந்தது. கருநாகங்கள் மறைந்தன. ஒற்றை அத்தி மரம் மறைந்தது.
கூடாரம் மறைந்தது. கொம்பனும் மறைந்தான்.

ஜன்னல்கள் இல்லாத, உணவு கொடுப்பதற்கு ஒரு  துவாரம் உள்ள ஒரு சிறிய கதவு மட்டும் கொண்ட என் இருட்டறையின்
சுவர்கள் முழுக்க அந்தக் கல்லறைக்குப் போவதற்கான குறியீடுகள் விரவிக் கிடக்கக் கண்டேன்.

Friday, May 27, 2011

ஒரு பொய்யின் கதை

குமரேசனின் அப்பா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டது.அவர் ஏன் இறந்தார்,எப்படி இறந்தார் என்ற கேள்விகள்
இப்போது அனாவசியம். அவர் இறந்ததால் என்ன ஆனது என்பதை , தற்போது குமரேசன் கூத்தாமண்டி பஸ் ஸ்டாப்பில்

நின்று கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தாலே தெரியும்.வயதில் இளையவன் தான். ஆனால் ஒரு குருட்டு

பிச்சைக்காரனின் கோலத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த சட்டை கிழிந்திருக்கவில்லை.

நைந்திருந்தது.நிறம் மங்கிய பீட்ரூட் நிறத்தில் அந்த சட்டை இருந்தது.இரண்டு பித்தான்களுக்கு பதிலாக ஊக்கு

மாட்டியிருந்தான்.



அவனுடைய கால்சட்டை, அணிந்திருந்த தூசி படிந்திருந்த ரப்பர் செருப்பிலிருந்து ஒரு ஜாண் உயரத்திலிருந்தது.

சற்று நேரம் முன்புதான் அம்மா கட்டிக் கொடுத்திருந்த புளி சாதத்தை சாப்பிட்டுவிட்டு கொஞ்சமாகத் தண்ணீர்

குடித்திருந்தான். பஸ் வர இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். அதற்கு மேலும் ஆகலாம். நல்ல அடர்த்தியான

வெயில் காலம். கூத்தாமண்டியில் குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காது.உப்புத் தண்ணீர் தான். சற்று தூரத்தில்

இலை உதிர்ந்த ஒரு மரத்தடியில் ஒருவர் இளனீர் விற்கிறார். எப்படியும் பத்து ரூபாய்க்கு குறையாமல்

இருக்கும். அவனிடம் இருப்பதே ஐந்து ரூபாய்தான்.அதுவும் டிக்கெட்டுக்கு. அருகிலிருந்த பெட்டிக் கடையில்

ஒரு தண்ணீர் பாக்கட் வாங்கிக் குடிக்கலாம். நாலு ரூபாய் டிக்கெட் எடுத்தால் ஊருக்கு வெளியே இறக்கி விட்டு

விடுவான். நடந்து கூட போய்விடலாம்.



இந்த யோசனையில் நாக்கிலிருந்து சுரக்கும் எச்சிலை மேல் அண்ணத்தில் தடவியபடி நின்றிருந்தான்.தாகத்தில்

இருக்கும்போது நல்ல குளிர்ந்த,ஆற்று நீரைக் குடிப்பதுபோல சுகம் வேறொன்றில்லை.இப்போது அவனுக்கு அதற்கு

கூட வழியில்லை.சில வருடங்களுக்கு முன்பு அவன் இருந்த நிலை வேறு.இரண்டு அக்காமார்கள், ஒரு தங்கை.

அம்மா,அப்பா,அப்பத்தாவுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கொண்ட சற்றே பெரிய குடும்பம்.



பெரிய அக்கா படிக்கவில்லை.சிறிய அக்கா ப்ளஸ்2 வரை படித்திருந்தாள்.இவன் பத்தாவதும்,தங்கை மூன்றாவதும்

படித்துக் கொண்டிருந்தார்கள்.ஊரில் மிக வசதியான குடும்பம். ஏழு ஏக்கர் கிணற்றுப் பாசன நிலத்தை குத்தகைக்கு

விட்டிருந்தார்கள். ஐந்து ஏக்கர் ஆற்றுப் பாசன நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். மஞ்சள்,பருத்தி,புகையிலை

என்று எப்பொது பணப்பயிராகவே அவருடைய அப்பா பயிரிடுவார். மூன்று வீடுகள். வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த

நகை எப்படியும் நூறு பவுனுக்கு குறையாது.



ஆனால் மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட பாறையைப் போல கடந்த இரண்டு வருடங்களில் கொஞ்சம்,

கொஞ்சமாக கீழே வந்து கொண்டிருந்தார்கள். காலுக்குக் கீழே வாழ்க்கை வழுக்கிக் கொண்டிருந்தது.சரியாக ஆறு

வருடங்களுக்கு முன்பிருந்து இதை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். அப்போது குமரேசன் ஆறாவது பாரம் படித்துக்

கொண்டிருந்தான். ஒரு வெள்ளிக் கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, அப்பா வெளியிருந்த கயிற்றுக்

கட்டிலில் அமர்ந்திருந்தார்.அவருடைய முகத்தைப் பார்த்தாலே அவர் நன்றாகக் குடித்திருக்கிறார் என்று தெரிகிறது



அவர் ஒன்றும் மொடாக் குடியர் அல்ல. அவ்வப்போது மிதமாகக் குடிப்பார். வீட்டின் உள்ளிருந்து விசும்பல் சத்தம்

கேட்டது. அம்மா அழுகிறாள்.சரி. பாட்டியும் அழுகிறாளே? சிறிய அக்காவும் அழுகிறாள். பெரியவளைக் காணவில்லை.

போய் விட்டாள். யாருடன் என்று தெரியவில்லை.



அடுத்த வாரமே அவர் ஒரு காரியம் செய்தார். சிறிய அக்காவுக்கு திருமணம் செய்வித்தார்.மிகுந்த ஆரவாரத்தோடு அது

நடந்தது. பெரியவளுக்கு வைத்திருந்த அத்தனையும் சிறியவளுக்குத் தூக்கிக் கொடுத்தார்.எதோவொரு கோபத்தில்

அப்படி செய்தார்.ஆனால் சிறியவளுக்கு வாய்த்த கணவன் ஒரு மூர்க்கன். அடிக்கடி அதை வாங்கி வா, இதை வாங்கி வா

என்று பிறந்த வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான்.



அப்பாவின் மன உறுதி நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டே வந்தது.சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெரியவள்

கையில் ஒரு குழந்தையுடன் வந்து நின்றாள். அப்பா அவளை வீட்டை விட்டு போகச் சொல்லவில்லை. அது பாவம் என்று

அவருக்குத் தெரியும். ஏனென்றால் அவள் தன் கணவனை இழந்து விதவையாக வந்திருந்தாள். ஒரு மூலையில்

இருந்து விட்டுப் போ என்று அனுமதித்தார்.



இது அவனுடைய சிறிய மாமாவுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை. வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு போனவர்கள் தான்.

ஒரு நல்லது,கெட்டது எதற்கும் வருவதில்லை.ஆனால் சிறிய அக்கா மட்டும் வருவாள். அது வேண்டும், இது வேண்டும்

என்று.எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு.



அது ஒரு அமாவாசை நாள்.காலை ஏழு மணிக்கு முடுக்கந்துறைக்காரி குமரேசனின் வீட்டுக்கு முன் வந்து நின்று கொண்டு

வாய்க்கு வந்தபடி கத்திக் கொண்டிருந்தாள். கண நேரத்தில் ஊர் கூடி விட்டது.அவள் பல பேருக்கு தொடுப்பாக இருந்தாள்.

அவனுடைய அப்பாவும் அதில் ஒருவர் என்பது தாமதமாகத்தான் அவனுக்குப் புரிந்தது.



அவள் சொன்ன ஒரு விசயம் யாருமே ஜீரணிக்கத் தகுந்ததல்ல. தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணம்

குமரேசனின் அப்பாதான் என்றும் அழுது ஓலமிட்டாள்.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் ஒரு

வார்த்தையும் சொல்லாமல் தலை குனிந்த வண்ணமிருந்தார்.பேரப் பிள்ளைகள் கண்ட பிறகு இதென்ன ஒரு அவிசேரித்தனம்

என்று ஊர்க்காரர்கள் காறித் துப்பிவிட்டார்கள்.ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து, ஜீவனாம்சமாக கொஞ்சம் பணம்,

ரெண்டு ஏக்கர் நிலம் என்று கொடுத்து அனுப்பி விட்டார்கள். பின்னே..இல்லையென்றால் கெடுத்து விட்டதாக புகார்

குடுப்பேன் என்று சேலையை மடித்துக் கொண்டு நிற்கிறாள்.



ஒருவரது பார்வையையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. அவனுடைய இளைய தங்கையைத் தொடக் கூட அவருக்கு

கை கூசியது. நேராகப் போனார்.அறைக் கதவை சாத்தினார். பதினோறாம் நாள் காரியம் முடிந்ததும், கடன் காரர்கள் வரிசையாக

பாண்டு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்பா இத்தனை பேரிடம் கடன் வாங்கியிருக்கிறாரா என்று அவனுக்கு

மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கூட்டிக் கழித்து பார்த்ததில் அவர்கள் இருந்த வீடு மட்டும் தான் மிஞ்சியது.



அந்த மட்டிலும் அவர்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் அதற்கும் ஆபத்து வந்தது, நிலவள வங்கியின் ஏல அறிவிப்பு கார்டு

மூலமாக. வீட்டை மட்டுமல்லாது அவர்கள் மொத்த பேரின் வாழ்க்கையையும் அடமானம் வைத்து விட்டு போயிருந்தார்.

மொத்தமாக காலி செய்துவிட்டு 'சிட்டேபாளையம்' சுப்பைய நாயக்கரின் ஒரு ஒதுக்குப் புறமான சிறிய வீட்டில்

வாடகைக்குத் தங்கிக் கொண்டார்கள். அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது.இத்தனை நாளாக அவன் பள்ளிக்குச்

செல்லவில்லை. இனி மேல் அது நடக்காது என்பது அவனுக்குத் தெரியும்.



அவனும், பெரியக்காவும் பக்கத்திலிருந்த மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள். பஞ்சு மில். பஞ்சுத் துசி மூக்கில் ஏறி அவனுடைய

அக்காவிற்கு, அவள் சிறியவளாக இருந்த ஆஸ்த்துமா திரும்பவும் வந்து விட்டது. கொஞ்ச காலத்திற்கு பிறகு அவளும் வேலைக்குப்

போவதை விட்டுவிட்டாள். வீட்டில் மூன்று விதவைகள்.இரண்டு குழந்தைகள். அத்தனை பேரும் பெண்கள்.



அவன் தனியனாகத் தான் போராடிக் கொண்டிருந்தான். அவர்கள் ரேஷன் அரிசி உணவுக்கு பழக்கப் பட்டுவிட்டார்கள்.

கொசுக்கடிக்கும்,வியர்வைக்கும் பழக்கப் பட்டு விட்டார்கள். சில நேரத்தில் விஷம் குடித்து விடலாமா என்று கூட அவன்

யோசித்ததுண்டு. ஆனால் அவன் தங்கையும்,அக்காவின் சிறிய குழந்தையும் அதன் வீரியத்தை தாங்குவார்களா.ஒரு வேளை

அவன் மட்டும் செத்து அத்தனை பேரும் பிழைத்துவிட்டால்.அவன் தங்கை, நைந்து போன சட்டையும், பாவாடையும்

போட்டுக் கொண்டு, மூக்கில் ஒழுகும் சளியோடு ஸ்கூலுக்குப் போகிறது. வந்து சிரத்தையாக வீட்டுப் பாடம் எழுதுகிறது.

அதன் வாழ்க்கையை தீர்மானிக்க அவன் யார். இப்படியாக பல யோசனைகள்.



ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா மயங்கி விழுந்தாள். டாக்டரிடம் காட்டியதில் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாக அறிய வந்தது.

மருத்துவச் செலவுக்கு பணம்? அவன் கால்கள் நிற்காமல் சிறிய அக்காவின் வீட்டுக்குப் போய் நின்றது. சிறிய மாமா ஒரு வண்டி

அவனுடைய அப்பாவைத் திட்டிவிட்டு பணத்தைக் கொடுத்தார். ஒரு மாசத்தில் திருப்பி கொடுக்க வேணுமாய் ஒப்பந்தம்.



சர்ஜரி முடிந்த உடனேயே, அவனுக்கு வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது என்ற யோசனை எழுந்தது. பெரிய அக்கா இரண்டு

கம்மல்களைக் கொடுத்தாள். மிச்சப் பணத்துக்கு என்ன செய்வது. ஒரு வழி தெரிந்தது.'மொரப்பா' கந்தசாமியிடம் போய் விஷயத்தைச்

சொன்னான். அவன் அதைக் கேட்டு 'ஓ' வென்று அழுது ஓலமிட்டான். அத்தனையும் அடமானம் வைத்து விட்டு போன அப்பா

இரண்டு மாடுகளை மட்டும் விட்டு வைத்துவிட்டு போயிருந்தார்.அதை 'மொரப்பா' கந்தசாமி பாதுகாத்து, பராமரித்து வந்தான்.

அவ்வப்போது மாட்டு வண்டி கட்டிக் கொண்டு, மண், ஜல்லி, சிமெண்ட் என்று லோடு அடிப்பான். அவர்கள் பண்ணையத்தில்

இருபது வருடமாக வேலை செய்ததற்கு, இது தான் கிடைத்தது. அதற்கும் வந்தது ஆபத்து. கண்ணைத் துடைத்துக் கொண்டு

கொடுத்து விட்டான்.



கூத்தாமண்டி பொம்மு நாயக்கர் அதை விலைக்கு வாங்கிக் கொண்டார். முதல் தவணையாக நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்.

இரண்டவதாக நாலாயிரம். இப்போது மூன்றாவது தடவையாக வந்து வெறும் கையுடன் திரும்பி நாம் முதலில் பார்த்த

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறான்.



பஸ் எப்போது வரும் என்று நான்கு தடவை பெட்டிக் கடைக்காரனை கேட்டாகி விட்டது. மாலை ஐந்து மணிக்கு அவன் மில்

வேலைக்குப் போக வேண்டும். வெயிலோடு புழுதியும், தூசியும் நிறைந்த காற்று மெலிதாக வீசிக் கொண்டிருந்தது.



தூரத்தில் ஒரு இரு சக்கர மோட்டார் வண்டி வருகிறது. சரி, இவரிடம் கேட்டு பார்ப்போம்.எது வரை போகிறாரென்று.

பெத்திக் குட்டை வரை போனால் கூட போதும். கள்ளிப்பட்டி பிரிவு வரை நடந்தால், நம்பியூர் மார்க்கமாக செல்லும் பஸ்ஸில்

ஏறிப் போய் விடலாம் என்ற நினைப்புடன் கையைக் குறுக்கே நீட்டினான்.



ஆனால், பின்னால் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். கையை இறக்கி, பெட்டிக் கடை பக்கமாக முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டான்.

அந்த வண்டி நிற்காமல் போனதே நல்லது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் வண்டி நின்றது.ஒரு பெண் அதிலிருந்து இறங்கி

நடந்து வருவதை அவனால் உணர முடிந்தது. அவள் வேறு யாருமல்ல. அவன் ஒரு காலத்தில் மிகுந்த ப்ரேமை கொண்டிருந்த பரிமளா.



அது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு கல்யாணாம் நடந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இவள் எதற்கு இங்கே வருகிறாள். அடையாளம்

கண்டு கொண்டாளா என்ற பரிதவிப்பில் முகத்தை திருப்பாமலே நின்றான்.



வெயிலோடு, புழுதியும் தூசியும் கலந்த காற்று இப்போது பலமாக வீசியது.கண்களில் விழுந்து அழுத்தியது. கண்களில் நீர் திரண்டது.



பின்னால் ஒரு குரல் கேட்டது." குமரேசா ! நல்லா இருக்கியா?"



அவன் மெதுவாக கண்களைக் கசக்கியபடியே திரும்பினான். ' என்ன கேட்ட பரிமளா?"



"நல்லா இருக்கியானு கேட்டேன்" என்று இழுத்தாள்.



இப்போது அவனுக்கு நிஜமாகவே கண்ணீர் வந்தது. புழுதியின் துணை தேவைப்படவில்லை.



பொம்மு நாயக்கரிடம் மிச்சப் பணத்தை வாங்கி பத்திரமாக கொண்டு போவதற்கா அவன் கொண்டு வந்திருந்த சிறிய மஞ்சள்

பையை பார்த்து விட்டு உதடு குவிந்த புன்னகையோடு சொன்னான்.



'ரொம்ப சௌக்கியம்'













Friday, April 8, 2011

தேவதச்சன்

இன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு பௌர்ணமி நாளில் மருதப்ப ஆச்சாரி மிக்க குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.அவருடைய சந்தோஷத்திற்கு காரணம் இருந்தது.அது என்னவென்றால் "கச்சக்" பொன்னுசாமி கவுண்டர் அவருடைய புது வீட்டின் தச்சு வேலைக்கு அவரைக் கூப்பிடிருந்தார்.தச்சு வேலை அவருடைய தொழில். அதில் குதூகலமடைய என்ன பெரிய காரணம் வேண்டிக் கிடக்கிறது என்ற ஆகப்பெரிய கேள்விக்கு ஆகச்சிறிய பதில் என்னவாக
இருக்குமென்றால் அவர் கடந்த ஆறு வருடங்களாக தொழிலுக்குப் போகவில்லை என்பதுதான்.



அவர் ஏன் ஆறு வருடங்களாக தொழிலுக்குப் போகவில்லை என்ற ஆகச்சிறிய கேள்விக்கு மிகச் சிறந்த பதில் என்னவாக இருக்குமென்றால் அவரை யாரும் தச்சு வேலைக்கு கூப்பிடவில்லை என்பதாகத்தான் இருக்கும். அவரை ஏன் யாரும் தச்சு வேலைக்கு கூப்பிடவில்லை என்ற ஆகச்சிறந்த கேள்விக்கு பதில்கள் ஏராளம்.



முதலாவது அவருக்கு வயதாகிவிட்டது.அதெல்லாம் ஒரு காரணமா என்று எதிர்க்கேள்வி எழுவது இயல்புதான்.ஆனால் இயல்பிலே மிக நிதானமான ஆள் மருதப்ப ஆச்சாரி.வயது கூடக் கூட அவர் நிதானம் எல்லை கடந்து விட்டது. அந்த அளவுக்கு நிதானமும், பொறுமையும் எங்கள் ஊரில் யாருக்கும் இல்லை. இரண்டாவது, மனைவி போன சோகத்தில் குடித்து விட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். பதினைந்து பேர் தவிர மற்ற எல்லாரும் குடிகாரர்களாக இருக்கும் ஒரு ஊரில் இது ஒரு பெரிய முறைப்பாடாக இருந்தது.மூன்றாவது, இப்போது வரும் இளம் தச்சர்கள் , சிறியதும் பெரியதுமான பல மின்சாரத் தளவாடங்களை வைத்துக் கொண்டு வேலை பார்க்கிறார்கள். ஒரு பீடியைப் பற்ற வைப்பதற்குள் எவ்வளவு

பெரிய பலகையானாலும் அறுத்துத் தள்ளி விடுகிறார்கள். ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தம் மட்டுமே வருகிறது.அறுந்து போன பலகை கீழே விழுகிறது.அவ்வளவுதான். ஓட்டை போடுவதற்கும் அப்படியே. சப்தம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாய் வருகிறது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று. இவர்களுக்கு முன் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.



அதிலும் அந்த பலகையில் ஓட்டை போடும் சமாச்சாரம் மற்றவர்களை விட, பல சமூக நாடகங்களில் "ஸ்த்ரீ பார்ட்" வேஷம் கட்டும் "தங்க முருகன்" என்றழைக்கப்படும் "கோல்டு" முருகனுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. அவன் அவரிடம் எடுபிடியாக வேலை செய்து வந்தான். இப்போது கொளத்து வேலைக்கு போவதாகக் கேள்வி.



இதையெல்லாம் விட மிதமிஞ்சிய ஒரு காரணம் உண்டு.சிட்டேபாளையம் சுப்பைய நாயக்கர் அவருடைய "தொடுப்பு" க்காக கட்டிய சிறிய வீட்டின் கூரையை வேய்ந்து கொண்டிருந்தபோது, மிகு போதையில் பீடியைப் பற்ற வைத்து விட்டு மறக்காமல் நெருப்பை கூரை மீதே போட்டு விட்டார். ஒரு முனையில் அது பற்றி எரிந்து கொண்டிருந்தபோது மறுமுனையில் இவர் மும்முரமாக கூரை வேய்ந்து கொண்டிருந்தார். இவர் முழு வேலையையும் முடித்து விட்டு கீழே இறங்கியபோது கூரை முற்றிலுமாக எரிந்து, பல காலமாக வெற்றிலையும், பாக்கும்,புகையிலையும் போட்டுத் துப்பிய பல்லில்லாத கிழவியின் வாய் மாதிரி தோற்றமளித்தது.



ஆறு வருட காலமாக இவர் வனவாசம் போன கதை இதுதான். இவையெல்லாம் அவருக்கு தெரிந்தே இருந்தது. ஆரம்பத்தில்
கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், நம்முடைய காலம் முடிந்து விட்டது என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது. ஆனாலும் வருத்தம் வருத்தம் தான்.வயிற்றுப்பாட்டுக்கு பிரச்சனையில்லை. சொந்தமாக அவருக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. வங்கியில் கொஞ்சம் சேமிப்பும் இருந்தது.ஆற்றில் விழுந்த இலை போல அவர் பாட்டுக்கு வாழ்க்கையோடு போய்க் கொண்டிருந்தார்.



இந்த நேரத்தில்தான் பொன்னுசாமிக் கவுண்டரின் அழைப்பு அவருக்கு வசந்த அழைப்பாக இருந்தது. இனித்தது.போதக்குறைக்கு இருநூறு ரூபாய் வேறு முன்பணமாகக் கொடுத்து விட்டு போயிருந்தார். பணத்தை எடுத்துக் கொண்டு நேராக மதுபானக் கூடத்துக்கு போனார். தனது சாகாக்களுடன் ஜமாவை ஆரம்பித்தார். முதல் கிளாஸ் சல்பட்டுக்கு " தீன கருணாகரனே நடராஜா" என்று பாகவதரில் ஆரம்பித்தவர், மூன்றாவது ரவுண்டுக்கு " அமைதியில்லாதென் மனமே" என்று கண்டசாலாவில் வந்து நின்றார்.ஐந்தாவது ரவுண்டை " தென்றல் உறங்கிய போதும்..திங்கள் உறங்கிய போதும்" என்று ஏ.எம்.ராஜாவில் முடித்தார். ஆறாவது ரவுண்டை
எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.



பூப்படைந்த பெண்ணின் இளம் கொங்கைகளைப் போன்ற பரிசுத்தமான நிலவொளியில் வரப்பின் மீது அடி மேல் அடி வைத்து மெதுவாக
நடந்தார்." மோகனப் புன்னகை வீசிடும் நிலவே..மேகத்திலே நீ மறையாதே" என்று சௌந்தரராஜனின் அற்புதமான பாடல் ஒன்றை மெதுவாக பாடியபடியே வீடு வந்து சேர்ந்தார்.மங்கிய குண்டு பல்பின் வெளிச்சத்தின் கீழே அவருடைய சோம்பேறி நாய் ஜும்பா படுத்திருந்தது.அது யார் வந்தாலும் குரைக்காது. அதற்காக கடிக்காது என்று அர்த்தம் கிடையாது.கடிக்கும். சில சமயங்களில்.



யார் வருகிறாரென்று பார்த்துக் கொண்டே இருக்கும்.ஆனால் அந்த வீட்டுக்கு வருகிறவர் ஆச்சாரி மட்டுமே. அவர் வீடு. வருகிறார்.
மற்றபடி யாரும் அந்த வீட்டுக்கு வருவதில்லை.அதனால் அதற்கு கடிப்பதற்கு சரியான சந்தர்ப்பம் கிட்டவில்லை.மத்தியானம் சமைத்து
வைத்திருந்த சோற்றில் கொஞ்சத்தை ஜூம்பாவிற்கு போட்டு விட்டு வீட்டின் பின்பக்கம் போனார்.அங்கே ஒரு பெரிய தகரப் பெட்டி ஈசான்ய
மூலையில் கிடந்தது.அந்தப் பெட்டியில் தான் அவருடைய தச்சு வேலைக்கான அத்தனை தளவாடங்களும் இருக்கிறது. மெதுவாக அந்த
கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு முன் பக்கம் வந்தார்.



ஜூம்பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.பெட்டியைத் திறந்தார். அத்தனை பொருட்களும் துருப்பிடித்துக் கிடந்தது. ஆடி மாதம் கழிந்து தன் மனைவியைத் தொடும் ஆடவனைப் போல ஆசையாகத் தொட்டுத் தொட்டு பார்த்தார்.கொஞ்சம் சீமை எண்ணையைத் தடவி , பக்கத்திலிருந்த சொர சொரப்பான தரையில் "தர்ர்ர்..தர்ர்ர்ர்" என்று தேய்த்து துருவை அகற்றினார்.சாணைக் கல் கொண்டு கூர்மை தீட்டினார்.எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து, தனது வேட்டியில் நனைத்து துடைத்து பளபளப்பாக்கினார்.எல்லாம் முடிந்த போது அவருடைய தளவாடங்கள் தொண்டைமானின் போர்க் கருவிகளைப் போல ஜொலித்தது.நடு நடுவே " உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என்று எஸ்.சி. கிருஷ்ணனையும் பாட மறக்கவில்லை. நள்ளிரவு தாண்டி, சாப்பிடக் கூட மறந்து உறங்கிப் போனார்.



அடுத்த நாள் அவர் பொன்னுசாமிக் கவுண்டரின் வீட்டுக்குப் போனார்.

" மருதப்பா! பெருசா ஒண்ணுமில்ல..ஏழு ஜன்னலு..நாலு கதவு..மேல சாரங் கட்டி ..ஓடு போட்டுக் குடுத்துரு.அவ்ளோதான்..பவக்காளியைக் கூட்டிட்டு போய் நாயக்கரோட மர மண்டியில இருந்து , என்னென்ன மரம்,பலக வேணுமோ எடுத்துட்டு வந்துரு..சரியா..பொறுமயா வேல பாரு..ஒண்ணும் அவசரமில்ல..செலவுக்கு எதுனா வேணுமின்னா கேளு..சரியா.."


" அது சரி பொன்னு..எந்த நாயக்கர நீ சொல்ர.."


"நம்ம ஊருல எத்தன பேருடா இருக்காங்க...நம்ம சுப்பைய நாயக்கருதான்"

ஆச்சாரிக்கு 'சுருக்' கென்றது. காட்டிக் கொள்ளவில்லை.



அவர் அத்தனை மரப்பலகைகளையும் கொண்டு வந்து சேர்த்தபோது மணி இரவு எட்டாகி விட்டது.அவரும், பவக்காளியும் மெதுவாக நடந்து மதுபானக் கடைக்கு போனார்கள். மெலிதான மழை.

ஒரு புட்டி வாங்கிக் கொண்டு கால்வாய் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஜமாவை ஆரம்பித்தார்கள். பவக்காளியும் அவரைப் போலவே திக்கற்றவன்.இருவரும் மிக்க மகிழ்ச்சியாகக் குடித்தார்கள். அவர்களுக்கு ஏறிய போதையில் , கொஞ்சம் அன்னியோன்யமும் கலந்திருந்தது.




***********************************************************

மூன்று நாட்கள் கழித்துத் தான் அவரால் வேலையை ஆரம்பிக்க முடிந்தது. மழையால் ஊரெல்லாம் சகதியாகக் கிடந்தது. முதலில் ஜன்னலுக்கு அளவெடுத்து மரத்தை அறுக்க ஆரம்பித்தார்கள்.மருதப்ப ஆச்சாரியின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது.அவர் பாட்டுக்கு மரப்பலகைகளை அறுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். எது எதற்கு என்று மிக்க குழப்பத்தினூடே பவக்காளி அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.அறூப்பு வேலையை மட்டும் 6 நாட்கள் செய்தார்.இதனூடே ஆச்சாரி தன் ஜாகையை மொத்தமாக அந்த கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு மாற்றிவிட்டார். அவர் வீடு கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலே என்பதால் வேலை முடியும் வரை இந்த ஏற்பாட்டை செய்தார்.பக்கத்தில் ஒரு குடிசை போட்டு அதில் தங்கிக் கொண்டார்.ஜூம்பாவும் வந்து விட்டது. சமையலும் அங்கேயே. ஆனால் ஜூம்பா புது இடத்திற்கு பழக கொஞ்ச நாள் பிடித்தது. பவக்காளி தன் வேட்டியை அதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு நாளில் சில மணிநேரங்களை செலவிட வெண்டியிருந்தது.



அவர் அவனுக்கு அந்த ஊர்க் கதைகளைச் சொல்லியபடியே வேலை செய்தார். நடு நடுவே ' ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது'
என்று கண்டசாலாவின் பாடலை நேயர் விருப்பப் பாடல் போல பாடிக்கொண்டேயிருந்தார். காலை 9 மணிக்கு ஆரம்பித்தால்
மதியம் 1 மணி வரை. கொஞ்சம் சாராயம்.சோறு.தூக்கம். பிறகு இருட்டும் வரை வேலை. பிறகு சாராயம்,சோறு, தூக்கம்.இப்படியாக தினசரிகள் கழிந்தன. கவுண்டர் வாரத்திற்கு ஒரு முறை வருவதோடு சரி.



அது மழைக் காலம் என்பதால் கட்டுமான வேலைகளும், இவர் வேலையோடு சேர்ந்து கெட்டது. பளீரெனெக் காணப்படும் வானம்
திடீரென்று ஓட்டைப் பானை போல கொட்டும். அந்த வேளைகளில் சாரயத்தைக் குடித்து விட்டு குடிசையில் படுத்துக் கொள்வார்.



இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முந்தைய ஒரு பௌர்ணமி நாளில் ஆச்சாரி அத்தனை வேலைகளையும் முடித்து ஓடு வேய்ந்து அந்த வீட்டை முழுமையாக்கினார்.

அன்றிரவு,அவரும், கவுண்டரும், பவக்காளியும் மது அருந்தினார்கள். மெலிதான காரம் போட்டு வறுத்த நாட்டுக்கோழியும், ஆவி பறக்கும் இட்லியும், பாம்பு மீன் குழம்பும் பவக்காளி சமைத்தான்.



ஆச்சாரி, ஒரு பீடியை பற்றவைப்பதற்காக தன் பட்டாபட்டியில் கை விட்டு துழாவினார். ஒன்றே ஒன்றுதான் இருந்தது.சிரித்தார்.

' என்னடா மருதா சிரிப்பு..!

'ஒன்னுமில்ல பொன்னு...நம்ம 'மொரப்பா' கந்தசாமி ஒன்னு அடிக்கடி சொல்லுவான்..அத நெனச்சேன்!"

' அவன் என்ன பெரிசா சொல்லிட்டான்னு நீ இப்போ உன் அண்டா வாயத் தொறக்கற!"

"இல்ல...ரெண்டு பீடி இருந்தா எந்தக் கவலயுமில்லாம ஒன்னக் குடிக்கலாமின்னு சொல்லுவான்'



கவுண்டர் தன்னிடமிருந்த ஒரு சுருட்டை எடுத்து நீட்டினார்.வாங்கிக் கொண்டு அவர் அந்த கடைசி பீடியைப் பற்றவைத்துக் கொண்டார்.

' மருதா..கூலினு நான் எதுவும் உங்கிட்ட பேசல..நீயும் கேக்கல..எவ்வளவுன்னு நீயே சொல்லு..காலயில வந்து வீட்ல வாங்கிக்க..சரியா?'

ஆச்சாரி விசும்ப ஆரம்பித்தார். மற்ற இருவரும் அவரை வேடிக்கையாக பார்த்தபடி இருந்தனர்.

மழை மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. குளிர்ந்த காற்றோடு, மின்னல்களும் வீசின.

' எனக்கு கூலி வேண்டாம் பொன்னு'

'உனக்கென்ன பைத்தியமா..ரெண்டு மாசமா வேல செஞ்சிருக்க..கூலி வேண்டாங்கற!

' இல்ல பொன்னு வேண்டா..ஒன்னு சொல்லட்டா..இந்த ஊர்ல இருக்கற முக்காவாசி வீடு நான் வேல செஞ்சது.ஆறு வருசமா என்ன நம்பி யாரும் வேல தரல.நீ குடுத்த. இதோ இந்த பெட்டி இருக்கே..இந்த உளி,ரம்பம் இதெல்லாந்தான் எனக்கு சோறு போட்டது..என் ரெண்டு புள்ளைங்களுக்கு கல்யாணாம் மூச்சுக் குடுத்துது..கடசி காலத்துல நான் யார் கிட்டயும் கையேந்த விடாம நெலமும்,கொஞ்சம் பணமும் சம்பாதிச்சுக் குடுத்துது...இது வரைக்கும் நான் எல்லர்கிட்டயும் கூலி வாங்கியிருக்கேன்..உங்கிட்ட வாங்க எனக்கு மனசு வல்ல..நீ பெரிய பணக்காரன்..நான் கேட்கிற பணம் உனக்கு ஒன்னுமில்ல..ஆனாலும் எனக்கு வேண்டா'

முகத்தைப் பொத்திக் கொண்டு சிறுபிள்ளை போல அழுதார்.



ஆச்சாரி எதோ குடி போதையில் உணர்ச்சிவயப்படுகிறார் என்று கவுண்டர் நினைத்துக் கொண்டார்.,

' சரி விட்ரா...நல்லா திருப்தியா சாப்புட்டு தூங்கு..காலயில பாக்கலாம்'

'இல்ல பொன்னு..நான் என் வீட்டுக்கு போறேன்'

' மழ வர்ராப் போலிருக்கு..இங்கயே தூங்கிக்க"

"இல்ல நான் போறேன்..ஏ! ஜூம்பா..வா இந்தப் பக்கம்..போலாம் நம்ம வீட்டுக்கு'

தளவாடங்கள் அத்தனையும் பொறுமையாக எடுத்து பெட்டியில் அடுக்கினார்.போதையில் கொஞ்சம் தடுமாறினார்.

அடுக்கியதும் கவுண்டரை பார்த்து கை நிறையக் கும்பிட்டார்.

பெட்டியைத் தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு , ஜூம்பா முன் செல்ல, பூப்படைந்த இளம் பெண்ணின் கொங்கைகளைப் போன்ற பரிசுத்தமான நிலவொளியில் ' மோஹனப் புன்னகை வீசிடும் நிலவே..மேகத்திலே நீ மறையாதே" என்ற சௌந்தரராஜனின்
அற்புதமான பாடலைப் பாடிய படியே வீடு வந்து சேர்ந்தார். பெட்டியை அதே ஈசான்ய மூலையில் வைத்து விட்டு உப்புக்கறை படிந்த
கன்னங்களோடு அப்படியே தூங்கிப் போனார். அன்றிரவு சூறைக் காற்றும், மழையும் பலமாக இருந்தது.



மறுநாள் காலை பவக்காளி கூலிப்பணத்தை எடுத்துக் கொண்டு ஆச்சாரி வீட்டுக்குப் போனான்.

அங்கே, அவருடைய நாய் ஜூம்பா, தரைமட்டமாகி கிடந்த ஆச்சாரியின் வீட்டைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது.

Friday, February 11, 2011

தலைவன் - இட்லிவடையில் வெளியான என் சிறுகதை

"சேர்ந்து கொள்கிறீர்களா?"


"ஓ! தாராளமாக.ஆனால் இந்த மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே? புதுமையாக இருக்கிறதே?"

"ஆம்! இது கொஞ்சம் புது மாதிரிதான்"

"இந்த மாதிரி வேறு எங்கேனும் உண்டா?"

"உண்டு"

"அவர்களுடன் நாம் இணைந்து செயல்படப்போகிறோமா?"

"இல்லை! நாம் தனித்து செயல்படப் போகிறோம்"

"தனித்தா?நன்று.யாருடனும் கூட்டணி இன்றி செயல்படுவது எனக்கு பிடித்தமான ஒன்று.

பின்னால் காலை வார மாட்டீர்களே?"

"இல்லை."

"சரி! நான் என்ன செய்ய வேண்டும்?"

"நீ நாலு பேரை சேர்த்து விடு.நானும் சேர்க்கிறேன்"

"ஆட்களை சேர்ப்பதா? இதில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?"

"உன்னையும் என்னையும் சேர்த்து..?"

"சேர்த்து..?"

"இரண்டே பேர்"

"இரண்டே பேரா? இது ஆரம்பித்து எத்தனை நாட்களாகிறது?"

"இப்போதுதான்!"

"இப்போதுதான் என்றால்?"

"இரண்டு மணி நேரமாகிறது"

"இரண்டு மணி நேரம்தானா? வயிற்றைக் கலக்குகிறதே!"

"உனக்கு இதன் தலைவர் பதவி தரலாம் என்றிருக்கிறேன்.வயிற்றைக் கலக்குகிறது,

வாந்தி வருகிறது என்று பிதற்றுகிறாயே?"

"தலைவர் பதவியா? இப்போது நெஞ்சை அடைக்கிறது"

"ஏன்?"

"தலைவர் பதவி என்கிறீர்களே. அதுதான். தலைவன் என்பது பதவியல்லவே"

"பதவி அல்லவா? அதுதான் பிரதம பதவி.அதுகூட தெரியாத மூடனா நீ?"

"தெரிந்த மூடன்.போதுமா?"

"சரி. தலைவன் பதவியில் நீ இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"

"அதைத்தானே நான் சொன்னேன்"



இப்படியாக சில ஆண்டுகளுக்கு முன் பனிக்கரடி சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.அதன் ஆகக்கூடிய செயல்பாடு வருடத்திற்கொரு முறை எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் க்ரீவ் கோர் ஏரியில் குதிக்க வேண்டும்.



அதனால் என்ன பிரயோசனம் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, "அது உனக்கு தேவையில்லாதது" என்ற விடை கிடைத்தது. மகிழ்ச்சியாக ஆட்களை சேர்க்க ஆரம்பித்தேன்.



ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னைக் கண்டாலே காத தூரம் ஓடினார்கள். இது பற்றி நான் முறைப்பாடு செய்தபோது " குதிப்பவர்களுக்கு அன்று அவர்கள் குடிக்கும் பீர் மொத்தமும் இலவசம்" என்று அறிவிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டேன்.என்னை தலைவர்
பதவிக்கு தேர்வு செய்த என் ஆலோசகர் ஒரு பெரிய மதுபானக் கூடத்தின் உரிமையாளர்.



அப்படியும் என்னால் ஒரு எட்டு பேரை மட்டுமே சேர்க்க முடிந்தது.அத்தனை பேரும் பீர் மட்டுமே குடிப்பவர்கள். அவர்களை மட்டுமே என்னால் சேர்க்க முடிந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.



ஒரு சனிக்கிழமை அமாவாசை மதியம் 12 மணிக்கு பனிக்கரடி படை மதுக்கூடத்திலிருந்து புறப்படும் என்று அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை நிகழ்ச்சிகளும் முடிவடையும் என்றும் நிரல் தயாரிக்கப்பட்டது.



அந்த நாளும் வந்தது.அதற்கு முந்தைய இரவு நான் வானத்தை பார்த்தபடி சுருட்டு புகைத்தபடி உட்கார்ந்திருந்த போது இனம் புரியாத பீதி மனதை ஆட்கொண்டது.அது என்னவென்று எனக்கு புரிய ஐந்து நிமிடம் ஆனது. புரிந்தபின் அது ஜீரணம் ஆக அடுத்த ஐந்து நிமிடம் ஆனது.



அது கடுமையான குளிர்காலம்.அந்த ஏரி உறைந்தல்லவா கிடக்கிறது. அதில் எப்படி குதிப்பது. வேண்டுமானால் சித்தர்கள் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடக்கலாம்."ஆஹா! என்னைக் கண்டதும் அத்தனை பேரும் சிதறி ஓடினார்களே.இதுதான் காரணமா?இது எனக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?" என்று எனக்குள் நானே புலம்பிக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன்.



அடுத்த நாள் மாற்று உடுப்புகள் எடுத்துக் கொண்டு நான் மதுக்கூடத்துக்கு போன போது அதற்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் இரு நூறு பேர் அமர்ந்திருந்தார்கள். எப்போதும் காற்று வாங்கும் சனிக்கிழமை மதியம் எப்படி இத்தனை பேர்? அத்தனை பேரும் குதிப்பதற்கு வந்திருக்கிறார்களா? நன்று.



ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.அத்தனை பேரும் நாங்கள் குதிப்பதை வேடிக்கை பார்க்க வந்தவர்களாம்.அன்று மதிய வியாபாரம் அபாரமாக இருந்தது. என் ஆலோசகர் என்னையும், மற்ற உறுப்பினர்களையும் கூப்பிட்டு ஒரு பத்திரத்தில்  கையெழுத்து போடச் சொன்னார். அது என்ன என்று கேட்ட போது " குதிக்கும் போது
காயமோ அல்லது உயிருக்கு ஆபத்தோ நேர்ந்தால் அதற்கு மதுபானக் கூட நிர்வாகம் பொறுப்பல்ல" என்று எழுதியிருப்பதாக பதில் வந்தது.



இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? என்ற நினைப்புடன் நாங்கள் ஏரிக்கு பயணமானோம். ஏரியில் இரண்டு மாட்டு வண்டி சக்கர அளவிற்கு பனிக்கட்டிகள் உடைத்து குளம் போல் அமைக்கப்பட்டிருந்தது.



சரி! யாரவது முதலில் குதிக்கட்டும். அவர்கள் நிலைமையைப் பார்த்துவிட்டு அடுத்து எடுக்க வெண்டிய நடவடிக்கை குறித்து யோசிக்கலாம் என்று நான் குளத்தை வெறித்தபடி நின்றிருந்தபோது, என் ஆலோசகர் உரக்க அறிவித்தார்.



"தற்போது நம் தலைவர் முதலில் குதித்து இந்த சிறப்பு நிகழ்வை தொடங்கி வைப்பார்"



திரும்பி கூட்டத்தைப் பார்த்தேன். ஒரே ஆராவாரம்.கிழக்கு நோக்கி சேவித்துவிட்டு குதித்தேன் .எனக்கு பின்னால் மாட்டிக்கொண்ட மந்தைகள்.அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று எனக்கு வர்ணிக்கத் தெரியவில்லை.அது குதித்தால் தான் தெரியும்.



குதித்த அத்தனை பேர் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.கரண்ட் கம்பியைத் தொட்ட கரடி மாதிரி விதவிதமான சப்தங்கள்தான் வந்தது. இப்படியாக அந்த நிகழ்வு சில பல ரத்த காயங்களோடு இனிதே நிறைவடைந்தது.



இது நடந்த சில நாட்களுக்கு பின்னர் என் ஆலோசகர் என்னை அழைத்தார்.



" தலைவரே! ஒரு பெரும் பொறுப்பு உங்கள் முன் நிற்கிறது"

" முன்னால் நிற்கிறதா?எவ்வளவு தூரத்தில் நிற்கிறது?"

"எச்சில் துப்பினால் எவ்வளவு தூரம் போய் விழுமோ அவ்வளவு தூரத்தில்

நிற்கிறது. வேடிக்கை வேண்டாம்".

"சரி! சொல்லுங்கள்"

"நம் போட்டி மதுபானக் கூடம் இருக்கிறதல்லவா? அவர்களும் பனிக்கரடி

சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்"

" ஆரம்பித்துவிட்டு போகட்டுமே! அதனால் என்ன?"

"அதனால் என்னவா? ஒரு தலைவன் பேசும் பேச்சா இது? அதில் நம்மை விட

அதிகம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்களாம்"

" இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

"நம் சங்கத்தை பிரபலப்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டாமா?"

" எப்படி செய்வது?"

"நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன்."

" என்ன உபாயம்?"

" இங்கிருந்து பத்து மைல் தொலைவில் ஒரு சிறிய விமான தளம் இருக்கிறதல்லவா?"

"ஆமாம் இருக்கிறது. ரொம்ப வருடங்களாக அங்கேயேதான் இருக்கிறது."

" அங்கே போய் ஒரு சிறிய கிளைடர் விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோம்"

"எடுத்துக் கொண்டு..?"

" அப்படியே 12,000 அடி உயரத்துக்கு போய்.."

"போய்..?"

" மிஸொரி நதி இருக்கிறதல்லவா..?"

" இருக்கிறது. அதற்கு என்ன இப்போது..?"

" அதன் மேல் பாராசூட் கட்டிக் கொண்டு நீ மட்டும் குதிக்கிறாய்"

" நான் மட்டுமா?"

" ஆம்"

" நான் மட்டும் ஏன்?"

" ஏனென்றால் நீ...?"

" நான்?"

"தலைவன்"

Wednesday, February 9, 2011

கபாட சுந்தரம் என்பவர் எவரெனில்..

கனத்த, கருத்த சரீரமும், கண்டசாலா போன்ற சாரீரமும் உடையவர்.தும்பைப் பூவைப் போல் வெளுத்த தலைமுடியும்,தொங்கு மீசையும் கொண்டவர்.எப்போதும் தூங்கி எழுந்தது போன்ற முகமுடையவர்.நன்கு மழித்த கன்னச் சதையில், வெட்டுக் காயம் கொண்டவர்.நின்றபடி பார்வையை மட்டும் தாழ்த்தி கால் கட்டை விரலைப் பார்க்க முடியாதவர்.இடது காதில் சிவப்புக் கடுக்கண் போட்டிருப்பவர்.சாதா வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிபவர். ஒரு சாண் அகலமும், அரை சாண் உயரமும் கொண்ட நெற்றியில் எப்போதாவது திருநீறு துலங்க, தெய்வ கடாட்சமாக விளங்குபவர்.



காலை நேரத்தில், முண்டாசு கட்டிக் கொண்டு பால் கறந்து பக்கத்து ஊர் டீக்கடைகளுக்கு ஊற்றுபவர்.ஊற்றிய பாலுக்கு பதில் தேங்காய் பன்னைத் தின்றுவிட்டு, திகட்டத் திகட்ட காப்பி குடிப்பவர்.வெற்றிலை, சிறிது சுண்ணாம்போடு , மட்டமான புகையிலையும் சிறிது கஞ்சாவும் சேர்த்துக் குதப்புபவர்.துளசி இலைச் சாற்றை தினம் குடிப்பவர்.பதினைந்து நாளே ஆன இளம் நாட்டுக் கோழியின் இறைச்சியை மிகவும் விரும்பி உண்பவர். ஆடுகளை அன்பாக வளர்ப்பவர்.வளர்ந்த பின் வெட்டிச் சாய்த்து விருந்து வைப்பவர்.



இழவு வீட்டில் முதல் ஆளாக நிற்பவர்.கல்யாண வீட்டில் கடைசி பந்தியில் அமர்பவர்.எவனோ ஏமாற்றிவிட்டு போன பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் செய்வித்தவர்.நல்லவர்.பண்பாளர்.கட்சிக்காக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஜெயிலுக்கு போனவர். சிறைச்சாலை உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப்போக்குக்கு ஆளானவர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதன் முதலாக ஜெயிலை விட்டு வெளியே வந்தவர்.வந்த பின் ஜெயில் சாப்பாடு பிரமாதம் என்று கருத்து சொன்னவர்.



அனைத்துலக சிவாஜி ரசிகர் மன்றத்தின் எங்களூர்க் கிளையின் பொருளாளராக இருந்தவர். திரிசூலம் படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து விட்டு அரைச்சட்டி சாராய ஊறலை அப்படியே
குடித்தவர் .குடித்துவிட்டு ஆற்றோரமாய் இருந்த ஆலமரத்தின் கீழே அரை
நிர்வாணமாய்க் கிடந்தவர்.நினைவு தெளிந்தபின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் தலைமறைவாக இருந்தவர்.
மர்லின் மன்றோவைத் தவிர வேறெந்த நடிகையின் பாவாடை காற்றில் மேல் நோக்கி பறந்தாலும் அது கவர்ச்சியாக இராது என்று நெத்தியடி அடித்தவர்.



"அத்துவானக் காட்டில் அத்தானைத் தேடி பொத்தானைத் திருகியபடி வந்தது ஒரு முத்தான ஜிகிடி" என்று வசனம் சொல்பவர்.கேட்டால் அது கவிதை என்பவர். "தாதி தூது தீது, தத்தை தூதோதாது" என்று தத்தகாரத்தையும் குறுக்கும் நெடுக்குமாக பிளப்பவர்.புலவர். எவ்வளவு புண்பட்டாலும் புறமுதுகிடாதவர்.திருக்குறள் ஒரு முழுமையான நூல் அல்ல என்றவர். ஏன் என்று கேட்டதற்கு அதில் அறம்,பொருள், இன்பம் மட்டும்தான் உண்டு,வீடுபேறு இல்லை என்று வாதிட்டவர். வாழும் வள்ளுவர் என்று பத்தாவது வார்டு கவுன்சிலரால் புகழப்பட்டவர். அந்தப் புகழ்ச்சிக்கு உரியவர் தான் அல்ல என்றும், அது ஏற்கனவே மற்றொருவருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்பதால் பரிமேலழகர்,மோசிகீரனார்,ஒட்டக்கூத்தர், சீத்தலைச் சாத்தனார் என்று வேறு எதோ பெயரை பரிசீலிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டவர்.



வாய்க்கால் பாசனம் பாயும் ஐந்து ஏக்கரா புஞ்சை, நான்கு மாடுகள் வைத்திருந்தவர். கந்து வட்டிக்கு வாங்கி வீடு கட்டியவர். பின் வீட்டை விற்று வட்டி கட்டியவர்.நான்கு பெண்களுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்வித்தவர்.பொறுப்பான குடும்பத்தலைவர்.



கருப்பசாமியின் மகன் "பாட்டு" சுந்தரம் என்பது மருவி கபாட சுந்தரம் என்றானவர்.



மழை பொய்த்ததால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், அத்தனை சொத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு, நள்ளிரவில், ஊர் உறங்கும் சமயத்தில் எங்கேயோ போனவர்.



காணாமல் போன போது அழுக்கடைந்த உடுப்பும், அவமானமும் கண்ணீரும் பூசிய முகமும், கையில் வெறும் ரேகையும், நோய்ப் படுக்கையில் இறந்துபோன மனைவியின் நினைவுகளைத் தன் நெஞ்சிலும் கொண்டிருந்தவர்.



இத்தகைய அடையாளம் கொண்டவரை, புழுதி கவிந்த எதோ ஒரு நகரத்தின் தேனீர்க் கடை சிப்பந்தியாகவோ, உணவகத்தில் மேசை துடைப்பவராகவோ , மூத்திரச் சந்துகளிலோ, சாலையோரக் குடியிருப்புகளிலோ காண நேர்ந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.



"எதொவொரு கிராமம்".



Tuesday, January 4, 2011

சொல்லாமல் போனவரும்,இப்போது இருப்பவரும்

இரண்டு வருடங்களுக்கு முன்பு மழை பொய்த்ததாலும்,போன வருடம் பேய் மழை பெய்து தோட்டம்,துரவுகள் நாசமானதாலும்,திருவிழா காணாத ஆராத்தம்மனுக்கு இந்த வருடம் காப்பு கட்டி, ஊரெல்லாம் பந்தல் போட்டு,'ஜே!ஜே!' என்று எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியிருக்கிறது.

'ஆத்துக்கு அந்தப் பக்கம்
ஆடு மேக்கிற சின்னத்தம்பி
ஆடு போனா மசுராச்சு
ஆட்டத்துக்கு வந்து சேரு...!!!'

என்று மத்தளக்காரர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்து விட்டு, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து உருமாலை கட்டிக் கொண்டு பவக்காளி 'தும்!தும்!' எனக் குதிக்க ஆரம்பித்தான்.

ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இந்த பாட்டைக் கேட்டவுடன் கைக்குழந்தையின் ஞாபகம் வந்தது.கைக்குழந்தைக்கு வயது எண்பது இருக்கும். அது அவருடைய செல்லப் பெயர். உண்மையான பெயர் இப்போது தேவையில்லை.அதைத் தெரிந்து கொண்டு நானோ,நீங்களோ செய்யப் போவது ஒன்றுமில்லை.பெயர் என்பது அழைப்பதற்குத்தான். அழைப்பதற்கு ஆள் இருந்தால்தானே?

போன வாரம் தான் போய்ச் சேர்ந்தார். எங்கள் பஞ்சாயத்து யூனியனில் மழை பெய்கிறதென்றால் அது அவருக்காகத்தான்பெய்கிறது என்பார் என் அப்பா.அவ்வளவு நல்ல மனிதர். காலம் கலிகாலம்.நல்லவர்களுக்குத் தான் நல்ல சாவு வருகிறதில்லையே.
வாரம் ஒரு முறை கூடும், முடுக்கந்துறை சந்தைக்கு வரி வசூல் செய்யப் போனவர், திரும்பி வரும்போது ,தோரணப் பள்ளத்துக்கு அருகில் அடிபட்டு அலங்கோலமாகக் கிடந்தார்.

வசூலித்த பணத்துக்கு ஆசைப்பட்டு எவனோ ஒருவன் அவரை அடித்து போட்டு விட்டு . ஒங்கிக் கத்தக் கூடமுடியாதபடி கழுத்தை கவனமாக அறுத்து விட்டும் போயிருந்தான்.கிழக்கு திசை நோக்கி கண்களை வெறித்தபடிஉயிரை விட்டிருந்தார். அடித்தால் திருப்பி,வார்த்தையால் கூட எதிர்ப்பு காட்ட முடியாத அந்த வயதானவரை, இப்படி பண்ணி விட்டு போனவன், யாரென்று எனக்குத் தெரியவில்லை. கொளத்துக்காடு ஓதிச்சாமி வகையறாவைச் சேர்ந்த ஒருவன் தான் என்று பொவாக்கு தம்பி நிச்சயமாகச் சொன்னான்.

மத்தாளச் சத்தம் நின்றது.

'வுழுந்தா பெருங்காயம்
என் வால்பாற வெங்காயம்
காயத்துக்கு கட்டுப் போட்டு
காலம்பற வந்து சேரு..!!!' என்று யாரோ பெருங்குரலில் கத்தினார்கள். நெருப்பு தெறித்த மாதிரி மத்தாளம் சத்தம் எழுப்பிக் கொண்டு முழங்கியது.

இதே பாட்டுகளை, அவர் என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு பாடும் போது கேட்டிருக்கிறேன்.
பாடுவதற்கு பாட்டுகள் இன்னும் அவரிடம்  இருந்திருக்கலாம்.பாடுவதற்கு அவர் இல்லை.கேட்ட பாடல்கள் இனிமையானவைதான்.கேட்காத பாடல்கள் இன்னும் இனிமையானவையாகக் கூட இருக்கலாம். யார் கண்டது.?

அவர் பிணமாகக் கிடந்ததை முதலில் பார்த்தது நான். அவர் கைகள் அப்போது அசைந்த மாதிரி தெரிந்தது.உயிர் இருக்குமோ என்ற ஆசையில் பக்கத்தில் போனேன். வலது கையை ஒட்டி கோதுமை நாகம் ஒன்று அவரின் கழுத்துக்குப் பக்கத்தில் தலை வைத்துப் படுத்திருந்தது. அதை அடித்துத் தூக்கிப் போட்டு விட்டு, அவரைத் தூக்கி பக்கத்திலிருந்த மோரியில் கிடத்தினேன். போலீஸும்,ஆம்புலன்சும் வந்த போது மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தது.

'ஆஸ்பத்திரிக்கு நான் போறேன். நீ போய் கெளவி கிட்டயும்,ஊர்லயும் தகவல் சொல்லிப் போடு' என்று சொல்லிவிட்டு பொவாக்கு தம்பி போய் விட்டான். நான் சாவு செய்தி சொல்ல எங்கேயும் போனதில்லை.அதுவும் சம்பந்தப்பட்டவரிடமே போய் சொல்வது எப்படி? ஒரேடியாக போய் 'நீ கட்டினவன் செத்துப் போயிட்டான்" என்று கெளவியிடம் சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. அவளுக்கு காது கொஞ்சம் மந்தம். காதுக்கு பக்கத்தில் போய் கத்தி சொல்ல வேண்டும். அவள் சத்தியமாகத் தாங்க மாட்டாள்.அவளுக்கு அவரை விட்டால் வேறு உலகம் தெரியாது. இருந்தாலும் போனேன்.

'ஆத்துக்கு கரயிருக்கு
ஆட்டுக்கு கெடயிருக்கு
வயலுக்கு வரப்பிருக்கு
வாய்க்காலத் தாண்டி வந்து சேரு...!!" - பவக்காளி வெறிசலங்கை எடுத்துக் கொண்டு மைதானத்தை அளந்து கொண்டு ஆடினான்.


கைக்குழந்தையின் வீடு ஊருக்கு மேற்குப்புறத்தில் இருந்த மாகளிக் கவுண்டன் குதித்து செத்த, பாழுங்கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்தது. சொந்தமாக ஒரு ஏக்கரா நிலம். நிலம் மொத்தமும் கீரைப்பாத்திகள். மெதுவாக நடந்து வீட்டுக்குப் பக்கத்தில் போய் விட்டேன்.
நாலு எட்டு இருக்கும்போது கால் பின்னல் போட்டது. எப்படி சொல்கிறது?

ஜன்னலிலிருந்து மஞ்சள் நிற குண்டு பல்பின் வெளிச்சம் மங்கலாகத் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன். அடுப்புக்கு முன்னால் கால் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.சுருங்கிப் போய் எலும்போடு ஒட்டிக் கொண்ட மார்புகள். நைந்து போன இரட்டை இழை சேலை.எப்போதும் லேசாக ஆடிக் கொண்டிருக்கும் தலை.கவிந்து தரையையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள்.பக்கத்தில் அப்பொது வடித்திருந்த அரிசிச் சோறு. கீரைக் கூட்டு. உள்ளே போய் குரல் கொடுத்தேன்.

"மழ வர்ராப் போலிருக்கு.நேரம் என்னன்னுட்டு தெரியல. இந்த வரி வாங்கித்தான்
வகுரு காயணுமா.சவத்தெளவு. சட்டுனு சாப்டமா..சடாரு படுத்தமானு இல்லாம? எத்தன நேரமா இப்பிடி உக்காந்து கெடக்க? யாருக்கு இப்பிடி சம்பாதிக்கனுமின்னு இன்னிக்கி கேட்டுப் போடுவேன் கேட்டு. கண்ணு வேற மசங்கலாத் தெரியுது. இல்லன்னா ஒரு எட்டு சந்தைக்கு வெருசா போய்ட்டு வந்துருவேன். நீ கெளவனப் பாத்தியா சந்தையில? வெளியில போனா நேரத்துக்கு வரணுமா இல்லையா?" என்று என்னிடம் பேசிக் கொண்டே போனாள்

சொல்லிவிட்டேன்.

'ஜாமம் இப்போ நடு ஜாமம்
ஜலத்துக்கு மேல வெறும் வானம்
ஜமுக்காளக் கோடங்கி
வாரதுக்குள்ள வந்து சேரு...!!!!- பவக்காளி தீச்சட்டியை தலையில் வைத்துக் கொண்டு, மத்தளக்காரன் அடித்த
நாலு அடி துக்கடாவுக்கு எடுப்பாக, நடை வைத்து ஆடினான்.

கைக்குழந்தையை ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்து அடக்கம் செய்யும் வரை நான் கிழவியின் பக்கமே போகவில்லை. ஊர் ஜனங்கள் அத்தனை பேரும் வந்து ஒரு மூச்சு அழுதுவிட்டு போனார்கள். அவள் அழவில்லை. எதையோ வெறித்தமாதிரி பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். கவிந்த கண்களும்,நடு நடுங்கும் தலையுமாக அப்படியேதான் இருந்தாள்.

இன்றைக்கு ஊரே கூடி திருவிழாவில் சந்தோஷமாக இருக்கிறது. அவள் வரவில்லை. போய் ஒரு நடை பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது.மெதுவாக எட்டு வைத்து நடந்தேன். போய் என்ன கேட்பது? ' நல்லாருக்கியா? என்று கேட்பது உத்தமமில்லை.

மொத்தமாக போய் ' அப்பிடியே வந்தேன்..சரி ஒன்ன ஒரு எட்டு பாத்துட்டு போலாமின்னு' என்று சொல்லி வைப்போம் என்று முடிவெடுத்துக் கொண்டு நடந்தேன். இப்போது உருமியின் சத்தமும் சேர்ந்து கேட்டது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே கிழவி வீட்டுக்கு வெளியே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது தெரிகிறது. மணி எட்டாகிறது. இந்த நேரத்தில் வெளியே உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாள். மேய்ந்து கொண்டிருந்த கோழிகளைப் பிடித்து கூடையில் கிடத்துவதற்குள் போதும் போது என்றாகி விட்டது. அவளிடம் துளி அசைவு இல்லை. எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் உட்கார்ந்து ' அங்க என்னத்த பாக்குறவ?" என்று கேட்டேன். பதில் இல்லை. பார்வையை திருப்பவில்லை.

தோளைத் தொட்டுத் திருப்பினேன். மெலிதாக நடுங்கும் தலையை அரை வட்டமாகத் திருப்பினாள்.

'நான் ஆருன்னு தெரியுதா பாட்டி?" - , உதடு விரியாமல் சிரித்தாள்.

' அங்க என்னத்த பாக்குறவன்னு கேட்டேன்? "

என்னை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்து விட்டு சொன்னாள்.

"மழ வர்ராப் போலிருக்கு.நேரம் என்னன்னுட்டு தெரியல. இந்த வரி வாங்கித்தான்
வகுரு காயணுமா.சவத்தெளவு. சட்டுனு சாப்டமா..சடாரு படுத்தமானு இல்லாம? எத்தன நேரமா இப்பிடி உக்காந்து கெடக்க? யாருக்கு இப்பிடி சம்பாதிக்கனுமின்னு இன்னிக்கி கேட்டுப் போடுவேன் கேட்டு. கண்ணு வேற மசங்கலாத் தெரியுது. இல்லன்னா ஒரு எட்டு சந்தைக்கு வெருசா போய்ட்டு வந்துருவேன். நீ கெளவனப் பாத்தியா சந்தையில? வெளியில போனா நேரத்துக்கு வரணுமா இல்லையா?"