Monday, December 12, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இருத்தல்

கிராமத்து மூலையிலிருக்குமோர் குடிசை.

மலையடிவாரத்திலிருக்குமோர் பனை மரம்

ஊரின் எல்லையிலிருக்குமோர் கோவில்

கொடியில் தொங்குந்தென் தூமைத்துணி

Friday, December 9, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - உத்தமர்கள்

தெருவில் சிவனே என்று
நின்றிருந்தாலும்
அழைக்கிறாயா என்கிறார்கள்.
நடக்கும்போது நிலவைப்
பார்த்துக் கொண்டே நடந்தால்
கூடவே வருவது போல் அல்லவா தோன்றும்.
ஒன்று நடக்காதே.
இல்லையெனில்
நடக்கும் போது
நிலவைப் பார்க்காதே.

Sunday, December 4, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - மொழிதல்

இங்கு வருவோருண்டு.
வந்து போவோருண்டு.
வருவோரிடமும், போவோரிடமும்
என்றும் கேட்டதில்லை
ஏனிங்கு வந்தீர் என்றோ
ஏனதற்குள் போகிறீர் என்றோ.
ஆனால் வருவோரும்
போவோரும் தவறாமல்
கேட்கிறார்
'ஏனிங்கு வந்தாய்?' என்று.
பதிலைச் சொன்னால்
இனி மேல் வாரார் என்பதற்கில்லை.
ஆனாலும் பதிலைச்
சொல்வதற்கில்லை.

Thursday, December 1, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -நடை பயில்தல்

நாயுடன் நடை பயில வந்தவர்
இன்று வந்தார்.
வரும் போது நாயை அவர்
அழைத்து வந்தார்.
போகும் போது நாய்
அவரை அழைத்துக் கொண்டு போனது.

Thursday, November 24, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் -சிறைச்சாலை

இது கனவுக் கோட்டை.
கனவில் கட்டிய கோட்டை.
கனவு காணத் தெரியாதவர்களால்
உள்ளே நுழைய முடியாத கோட்டை.
ஆதி காலத்திலிருந்து
கனவு காணத் தெரிந்தவர்களால்
கட்டப்பட்ட கோட்டை.
அப்படிக் கட்டியவர்களையே
தன்னுள் சிறை வைத்திருக்கும் கோட்டை

Wednesday, November 23, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - இன்மை

என்னிடம்
கூச்சத்தோடு வந்தவர்
பலர்.
என்னைக்
கூச்சப்பட வைத்தவரென்றொருவருமிலர்.

Tuesday, November 22, 2011

தேவதாசியின் நாட்குறிப்புகள் - பிரயத்தனம்

தலை நிறையப் பூச்சூடி
ஒவ்வாத சரிகைப் புடவையணிந்து
இடையை ஒடித்து
உடலை வளைத்து
உதட்டைக் கடித்து
நாக்கைச் சுளித்து
மார்பை விலக்கி
கண்களில் பொய் போதை காட்டி.
கண்ணகியாவதற்கு
காலமெல்லாம்
கதவுக்குப் பின்னாலிருந்தால்
போதுமென்பது நிதர்சனம்.
மாதவியாவதற்குத்தான்
எத்தனை பிரயத்தனம்.