Friday, May 4, 2012

அமுக்கான்

களக்காடு வேலப்பன் குடும்பச் சண்டை காரணமாக தன் மனைவியை வெட்டிச் சாய்த்து விட்டு இரு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு , துரத்தி வந்த ஊர்க்காரர்களிடம் இருந்து தப்பி நெடுந்தூரம் ஓடி வந்து, இனி முடியாது என்ற நிலையில் தன் வேட்டியைக் கொண்டு தூக்குப் போட்டுக் கொண்ட  விட்டத்தின் கீழ் திம்மன் குடி போதையில் படுத்திருந்தான்.


திம்மனுக்கு வயது நற்பதைத் தொட்டுவிட்டது. நல்ல குடிகாரன்.நல்ல வேலைக்காரன்.அருமையானபட்டைச் சாராயம். கொழுத்த இரையை விழுங்கிய மலைப்பாம்பு மாதிரி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.


அவன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போயிருந்தாள். வசதியாகப் போயிற்று. தின்னாமல் விட்ட கருவாடு சிதறிக் கிடந்தது. செவ்வெறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.சிலது அவனையும்
மொய்த்துக் கொண்டிருந்தன.கடித்தால் தெரியாத அளவுக்கு நல்ல போதை.அவன் வீடு அது. எத்தனையோ பேர் எவ்வளவோ சொல்லியும் திம்மன் அந்த வீட்டை காலி செய்யவில்லை.


ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்ட வீட்டிலே பெண்டாட்டி,பிள்ளைகளோடு வாழலாகாது.நல்லதல்ல.கேளப்பா திம்மா!.புத்தி சொன்னவர்கள் அவன் தெளிவாக இருக்கும் போது சொன்னால் ஆயிற்று.போதையில் இருக்கும் போது சொன்னால்?.ஆயிற்றா?.திம்மன் கூலிக்கு வேலை செய்பவன்.சூத்துக் கழுவ தண்ணி இல்லாத ஊரிலே ஆத்துத் தண்ணிக்கு எங்கே
போவது.அடி மாட்டு விலைக்குக் கிடைத்த வீடு.அவன் காலி செய்யவில்லை.


தினமும் வேலை முடிந்ததும் அவன் மனைவி வீட்டுக்குப் போய் விடுவாள். திம்மன் நல்ல சுதி ஏற்றிக் கொண்டு தள்ளாடி நடந்து வருவான். சமையலில் கருவாடு தினமும் உண்டு.சில சமயம் அரை வயிறு உண்பான். அதுவும் மனைவிஅதட்டினால். இல்லையென்றால் ஒரு வாய் இரண்டு வாய்.அவ்வளவுதான்.விட்டத்தின் கீழ் படுத்துக் கொள்வான்.
அங்கே படுத்துக் கொள்வதில் அவனுக்கு ஒரு சுகம்.


மறுநாள் காலையில் அவனால் எழ முடியவில்லை. கை கால்கள் எல்லாம் பத்து பேர் சேர்ந்து உருட்டுக் கட்டையால் அடித்தது போல் வலித்தது.உருண்டான்.தலைகீழாக புரட்டிப் போட்ட ஆமை போல தவித்தான். நா வறண்டது. பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து இருந்த மிச்ச நீரை குடித்து பெருமூச்சு விட்டான்.இடது கையை ஊன்றி எழுந்தான். இடறி விழுந்தான்.மறுபடியும் எழுந்தான்.தூணைப் பிடித்துக் கொண்டான்.தலையைச் சாய்த்து பெருமூச்செறிந்தான். வலது கையால் முகத்தை அழுந்தத் துடைத்தான்.கண்களைக் கசக்கினான்.பின் மண்டை வலித்தது.ஜன்னலைத் திறக்க முயன்றான்.கொண்டி மாட்டிக் கொண்டது.தள்ளாடி வந்து வாசற்கதவைத் திறந்தான். பஞ்சு போல மிருதுவான வெயில்.
திண்ணையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான்.வழியில் போன ஒரு பொடியனிடம் சொல்லி வரக்காப்பி வாங்கிக் குடித்தான். மயக்க்ம் தீர்ந்தபாடில்லை.திண்ணையிலேயே சாய்ந்து விட்டான்.


வெயில் சுள்ளென்றது.எழுந்து கை கால்களை விறைப்பாக்கி கொண்டு பொடக்காளி பக்கம் நடந்தான். கோவணத்தோடு நின்று தண்ணீரை எடுத்து பொட பொடவென்று தலையில் ஊற்றிக் கொண்டான்.தொட்டி தண்ணீர் தீர்ந்ததும் துவட்டிக் கொண்டு  ஜிட்டக்கியின் வீடு நோக்கி நடந்தான்.


ஜிட்டக்கி கஞ்சா போதையில் மிதந்து கொண்டிருந்தாள்.


'ஜிட்டம்மா..பசிக்கிது..'


இரண்டு கம்பு அடையுடன் நேற்றிரவு வைத்த ஆட்டுக்கறிக் குழம்பை சுவைத்து உண்டான்.


'ஏண்டா திம்மா...ஒடம்புக்கு சொகமில்லியா?"

'ஆமா..ஒடம்பெல்லாம் திண்டு திண்டா வலிக்கிது.."

'எளவு அந்த வூட்ட காலி பண்ணியும் தொலயுன்னா கேட்டாத்தானே?'

'இப்ப அதுக்கென்ன..புள்ள குட்டிகளோட நல்லாத்தான இருக்கேன்.."

'அதுக்கில்லடா...வீடு ஒத்தக் கட்டு வீடு..விட்டம் ஒத்த விட்டம்..அதுவும் வேலப்பன் செத்த விட்டம்..அமுக்கான் அமுக்கிப் போடும்டா"

'கத வுடாத ஆத்தா...' - திம்மனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.இடது கையை தலைக்கு வைத்து திண்ணையில் படுத்துக் கொண்டான்.வயிற்றைப் பிசைந்தது.


'கத இல்ல திம்மா...விட்டத்துல எப்பவுமே அமுக்கான் இருக்கும்டா'- கஞ்சாவை இழுத்தாள்.


'கேளு...ஒரு காலத்துல ஒருத்தன் வீடு கட்ட நெலம் வாங்குனானாம்..அந்த நெலத்துல இருந்த ஒரு புங்க மரத்த வெட்டி விட்டத்துக்கு செதுக்கி வச்சானாம்.அது ஒருத்தன் தூக்கு போட்டு செத்த மரம்.அடிக்கால் நாட்றதுலர்ந்து, கருங்கல் வக்கிறது,செம்மண் பூசுரதுன்னு எல்லாத்தயும் நல்ல நேரத்துலயே செஞ்சானாம்..வீடு கட்ட அறுவது வருஷம் ஆச்சாம்..ஆனா விட்டத்தமட்டும் தப்பா எமகண்டத்துல வெச்சானாம்..அவன் கெட்ட நேரம்..தெரியாமத்தான் வெச்சிருப்பான்..வீடு புகுந்து மொத நா ராத்திரி
விட்டத்துக்கு கீழே பஞ்சு மெத்த போட்டு தூங்கிக்கிட்டு இருந்தானாம்.அவம்பொண்டாட்டி கால அமுக்கி விட்டுக்கிட்டிருந்தா..
அவனும் நல்லா தூங்கிப் போட்டான்..அப்ப ஒரு கனாக் கண்டானாம் ...அதுல ஒரு கொரல் கேட்டுச்சாம் ' அமுக்கவா..தள்ளவா' னு..இவனும் நல்ல தூக்கத்துல பொண்டாட்டி தான் கேக்குறளோனு ' அமுக்குன்னு' சொன்னானாம். விட்டம் இடிஞ்சு ஒரேடியா அமுக்கிப் போட்டுதாம்.அவனும் ரத்தங்கக்கி செத்துப் போனானாம்...தெரியுதாடா திம்மா..எளவு அந்த வூடு ஆகாது திம்மா..இது எங்கம்மா எனக்கு சொன்னது..இப்ப நாஞ்சொல்றேன்...உஞ்சவுரியமப்பா..திம்மா...அடேய் திம்மா..எந்திரிடா'.


உலுக்கினாள். திம்மன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தோடு திண்ணையிலிருந்து பொத்தென்று விழுந்தான்.


திம்மனை அமுக்கான் தான் அமுக்கி விட்டதென்று ஊர் பேசிக் கொண்டது. இருந்தாலும் இருக்கலாம் யார் கண்டது?