Friday, January 20, 2012

தேவதாசியின் நாட்குறிப்புகள் - ஏழைகள் வாழும் வீடு

கருவளையத்தில் இடுங்கிய கண்கள்.
ஒட்டிப் போன கன்னங்கள்.
உலர்ந்து போன உதடுகள்.
துவண்டு போன கழுத்து.
தொங்கிப் போன மார்புகள்.
வற்றிப் போன முலைகள்.
சுருங்கிப் போன வயிறு.
தூர்ந்து போன தொடைகள்.
சலித்துப் போன பெண்மை.
"என் மூலதனம் இதுதான்.
அடிக்காதீர்கள் ஐயா" என்று
எவ்வளவு கதறினாலும்
கேட்பதில்லை காவலர்கள்.
பசித்த வயிறுக்காகவும்,
காயத்துக்கு போட வேண்டிய கட்டுக்காகவும்
உடலெங்கும் பொங்கி வழியும் உஷ்ணத்தோடும்,
சொருகும் கண்களோடும்,
சொல்ல முடியாத வலியோடும்
கட்டிலில் காத்திருக்கும் என் மேல்
படரும் வாடிக்கையாளர்
கிழிந்து ரத்தம் தோய்ந்த என்
உதடுகளின் மீது தர முனையும்
முத்தத்தைத் தவிர்க்க
என் முகத்தைத் திருப்பி அவர் முகத்தை
என் மார்போடு அணைத்துக் கொள்கிறேன் இதமாக.
அவரோ முயங்குகிறார் மூர்க்கமாக.