Wednesday, June 29, 2011

...என்று சொல்லப்பட்டது

48 முறை வாய்தா வாங்கப்பட்ட
அந்த வழக்கின் தீர்ப்பு ஒரு
அமாவாசை நாளன்று கீழ்கோர்ட்டில்
வாசிக்கப்பட்டது.
எதிர்த்து மேல்கோர்ட்டில்
முறையீடு செய்யப்பட்டது.
அங்கேயும் அதே தீர்ப்பு
உறுதி செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டிலும்
அதே தண்டனை வழங்கப்பட்டது.
ஒரு புகழ் பெற்ற சிறைச்சாலையில்
அவனுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது.
கருணை மனு ஒன்று
மேதகு ஜனாதிபதிக்கு
அனுப்பப் பட்டது.
கொஞ்ச நாள் நிலுவையில் இருந்து
அதுவும் நிராகரிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றும் நாள்
அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
அந்நாளன்று அவனுக்கு
காலையில் குடிக்க பால்
கலக்காத தேநீர் வழங்கப்பட்டது.
தண்டனை நிறைவேறியதும்
பிரேத பரிசோதனை நிகழ்த்தப்பட்டது.
பின் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

இதே தண்டனை,
வழக்கு பதியப்படாமல்
வாய்தா வாங்கப்படாமல்
தீர்ப்பு வாசிக்கப்படாமல்
கருணை மனு
விண்ணப்பிக்கப்படாமல்
சிறைச்சாலையில் இடம்
வழங்கப்படாமல்
தண்டனை நிறைவேற்றும் நாள்
அறிவிக்கப்படாமல்
ஆற அமர யோசிக்கப்படாமல்
என்னால் ஒரு உயிருக்கு
வழங்கப்பட்டது.

அது கொலை என்று சொல்லப்பட்டது

Saturday, June 25, 2011

கருநாகங்கள் புணரும் கல்லறை

அந்தக் கோவிலைப் பற்றி பாம்படக் கிழவி சொன்ன கதையின் சாரம்சம் இதுதான்:

" மேற்கிலிருந்து  கூட்டம் கூட்டமாக மக்கள்,கால்நடைகள்.அந்த கானகத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மேற்கிலிருந்து வந்ததன் காரணம் அங்கிருந்த ஒரு துஷ்ட மாந்த்ரீகனின் இம்சைகள். இரவுக்கு ஒரு பெண் ,சாராயம், ஒரு கிடா.
தாங்க மாட்டாமல் அவர்கள் கிளம்பி மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி, கானகத்தை ஒட்டி இருந்த ஒரு கிராமத்தை நோக்கிப்
போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வழித்துணையாக ஒரு கல் தெய்வம். பின்னாலே வந்து கொண்டிருந்தது.கிழவர்களும்,
கிழத்திகளும் வலிமையான உட்டி(மூங்கில்) மரங்களில் கட்டிய தொட்டில்களில் தொங்கிக் கொண்டு வந்தனர். அந்தக் கல் தெய்வம்
அவர்கள் பாதி வழியைக் கடந்து வந்து ஒரு இடத்தில், குடிக்க நீரில்லாத ஒரு இடத்தில் இளைப்பாற அமர்ந்த போது அவர்களுக்கு
அறிமுகமானது. அவர்கள் தங்களுக்குத் துணையாக வருமாறு அதை வேண்டிக் கேட்டுக் கொண்டனர். மந்திரவாதியினால் எதேனும் இடர்
நேருமோ என்று அவர்கள் அஞ்சினர்.தான் இந்த இடத்தை விட்டுவரலாகாது என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அம்மக்களின் அன்புக்கிணங்க
அவர்களின் வேண்டுகோளை அது ஒப்புக் கொண்டது.ஆனால் ஒரு ஒப்பந்தத்தின் பேரில்.
அதாகப்பட்டது, "நீங்கள் அனைவரும் முன் செல்வீர்களாக.
நான் பின் தொடர்ந்து உங்களைக் காத்துவருவேன்.யாரும் திரும்பிப் பார்க்கலாகாது. "
"' ஆகட்டும். நீ எங்களைத் தொடர்ந்து வருகிறாய்
என்று எங்களுக்கு எப்படித் தெரியும்"
' என் கால் சலங்கைகள் ஒலி எழுப்பியபடியே வரும்.அதுதான் சமிக்ஞை."
 இப்படியாக அவர்கள் ஏழு இரவுகள்,ஏழு பகல்கள் கடந்து
பயணத்தைத் தொடர்ந்த வண்ணமிருந்தார்கள். கானகத்தின் ஒரு எழில் மிகுந்த பகுதியைக் கடக்கும் போது, அந்தக் கல் தெய்வமானது அந்தக்
கானகத்தின் எழிலில் மெய் மறந்து, வற்றாது பொங்கிக் கொண்டிருந்த ஒரு நீருற்றில் காலை வைத்தது. சலங்கைச் சத்தம் நின்றது.
நான்கு அடி முன்னால் வைத்த மக்கள் சலங்கை ஒலி நின்றது கண்டு திரும்பிப் பார்த்தனர். கல் தெய்வம் கோபம் கொண்டு
' நான் இனி மேல் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன். இனி என் வீடு இங்கேதான். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டி வழிபடுங்கள்'
என்று சொல்லி காற்றில் கறைந்தது"

ஆனால் இதைக் கேட்ட பின்பும் மூப்பன் சமாதானமாகவில்லை.

'கிழவி உளறுகிறாள். நான் அதை நம்பத் தயாரில்லை'
' சரி.நீ நம்பினாலும்,நம்பாவிட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை'
' அது கோவில் அல்ல. கல்லறை'
'மூப்பா! இதை நீ பல தடவை என்னிடம் சொல்லி புலம்பிவிட்டாய். ஒன்று கேட்கிறேன்.அது எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்?"
' நீ என்னை நம்பவில்லை.அப்படித்தானே?"
"மூப்பா! அது கோவிலோ..கல்லறையோ..இன்று வரை அது நம்பிக்கைதான்.அதை பார்த்தவர்கள் கிடையாது.
நாம் கேட்டதெல்லாம் இந்தக் கிழவிகள் சொல்லும் கதைகள் தான். அதுவும் உண்மையா என்று தெரியாது.நீ ஏன்
அதைப் பற்றி வீணில் கவலைப் படுகிறாய்?"
"காரணம் உண்டு.அந்தக் கல்லறைக்குக் கீழே எதோ ஒரு மர்மம் புதைந்திருக்கிறது"
"இந்தப் பிதற்றலை நான் கோடி முறை கேட்டு விட்டேன். என் வீட்டில் உன்னுடன் சேர்ந்து சுற்ற வேண்டாம், பழக வேண்டாம் என்று
எச்சரித்திருக்கிறார்கள். அது என்ன எழவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டுமே. பிறக்காத குழந்தைக்கு
பெயர் வைக்காதே.இதை இத்தோடு விட்டு விடு"

மூப்பன் என்னிடம் கோபம் கொண்டு போய் விட்டான். ஆனால் அவன் இதைப் பற்றி பலரிடம் புலம்பிக் கொண்டிருப்பதாக
கொம்பன் என்னிடம் சொன்னான். ஒரே வாக்கியம்' அது கோவில் அல்ல.கல்லறை'. இதையேதான் திரும்பத் திரும்ப புலம்புவதாக
சொன்னான்.

ஒரு பௌர்ணமி நாளின் நள்ளிரவில், ஊரோரம் இருந்த மசானத்தில் இருந்து பயங்கரமான அலறலும், கூச்சலும் எழுந்தது. நாங்கள் அனைவரும் அங்கு
சென்று பார்த்தபோது மூப்பன் அங்கிருந்தான். நிர்வாணமாக நின்றிருந்தான்.அத்தனை கல்லறைகளையும் தோண்டிப் போட்டிருந்தான்.
முன் தினம் இறந்திருந்த ஒரு கிழவியின் உடல் உட்பட. அது பாதி அழுகி,அழுகாமல், பன்றிகள் குதறிய கை, கால்களற்ற சதைப் பிண்டத்தைப் போல்
காட்சியளித்தது.

ஊரார் அவனை நெருங்க பயந்தார்கள். கொம்பன் அவனைப் பின்னால் இருந்து தாக்கி மயக்கமுறச் செய்தான். அவனை ஒரு இருட்டறையில்
அடைத்து வைப்பதென முடிவானது. நாங்கள் அவனை அங்கே கொண்டு செல்லும் முன் விழித்துக் கொண்டான்.
 ' அது கோவில் அல்ல ..கல்லறை..என்னை விடுங்கள்..நான் போக வேண்டும்.
நான் அதைக் கண்டுபிடிப்பேன்...உங்களிடம் சொல்வேன்..நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள்...என்னை விடுங்கள்...இன்னும் நிறைய கல்லறைகள் இருக்கின்றது..
அவைகள் என்னை அழைக்கின்றது...அதில் ஒன்றில் தான் நான் தேடும் கல்லறை உள்ளது..அந்த மர்மத்தைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன்.என்னை விடுங்கள்'
என்று கத்தியபடியே வந்தான்.அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

அந்த இருட்டறைக்கு ஜன்னல்கள் கிடையாது. ஒரு கதவு. கீழே சாப்பாட்டு தட்டை கொடுப்பதற்கு ஒரு சிறிய வழி. அவ்வளவே.
அங்கே அவனை அடைத்தபின்னர் எங்கள் யாருக்கும் நிம்மதி இல்லை. ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ.
அப்படி இருக்கும் பட்சத்தில் அதைத் தெரிந்து கொண்டு செய்யப் போவது என்ன?. என்ன அங்கே இருக்கும். வரலாற்றின் மறைக்கப்பட்ட
உண்மையோ? யாருக்கும் தெரியாத கதையோ?புதையலோ? மனம் வெகுவாகக் குழம்பியது.

நாட்கள் கடந்தன.இப்போதெல்லாம் மூப்பன் அவனுடைய வழக்கமான புலம்பலை விட்டு விட்டு புதிதாக ஒன்றை உளற ஆரம்பித்தான்.
'என்னைக் கருநாகங்கள் தீண்ட வருகின்றன.என்னைக் காப்பாற்றுங்கள்.என்னை வெளிக்கிடுங்கள்.' முதல் முதலாக இந்த அலறலை
அவன் அலறியதும் நாங்கள் பதறிப் போய் ஓடினோம்.ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. மூப்பன் அறையின் ஒரு மூலையில் நிர்வாணமாக
குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தேன். அவனுடைய கண்கள் ஒரு திசையை வெறித்துப் பார்த்தபடி இருந்தன.மிகவும் பயந்திருந்தான்.
ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக வீடு திரும்பினோம்.

இந்தப் புதுப் புலம்பல் எங்களுக்கு வழக்கமாகி விட்டது.ஒரு நாள் பௌர்ணமி இரவில் அவனுடைய கூச்சல் வழக்கத்திற்கு மாறாக
மிகவும் பயங்கரமானதாயிருந்தது. ஆதி பயத்தின் அத்தனை சக்திகளையும் அவன் தன் குரலில் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தான்.

அன்று நாங்கள் அங்கே போகாதிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது அடுத்த நாள் காலை தான் தெரிந்தது. மூப்பன் இறந்திருந்தான்.
அவனுடைய ஆடையில்லாத மெலிந்த உடல் முழுவதும் கருநாகங்கள் தீண்டிய தடயங்கள் காணக் கிடைத்தது. மிகுந்த சோகத்தில்
அவனை அடக்கம் செய்தோம். அவனுக்காக அவன் விட்ட பணியை நாங்கள் தொடர்வது என்று முடிவு செய்தோம்.

இது நடந்த சில நாட்களில், கொம்பன் ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கூறினான். அவன் ஒரு கனவு கண்டதாக.
அதன் சாரம்சம் என்னவென்றால்: ' ஒரு கானகம்.அடர்த்தியான, அழகான கானகம். அதன் நடுவில் வெள்ளை மணல் பகுதி.
அதன் நடுவே ஒரு கல்லறை. பௌர்ணமி நாள். அங்கே நிறைய கருநாகங்கள் மெதுவாக பல திசையில் இருந்து ஊர்ந்து
வருகின்றன. அந்தக் கல்லறை மீது மெதுவாக ஏறிப் புரள்கின்றன."

"சரி! அப்படியே வைத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கு எப்படிப் போவது?"
"மூப்பனின் அறையில் அவன் நிறைய குறியீடுகள் வரைந்து வைத்திருக்கிறான். அதை பார்த்தால் தெரியும்"

நாங்கள் இருவரும் அந்தக் குறியீடுகளை மிகக் கவனமாக ஆராய்ந்து அந்தக் கல்லறைக்குப் போவதற்கான வழியைக் கண்டு பிடித்தோம்.

எதிர்வரும் பௌர்ணமி நாளில் அங்கே போவதாக முடிவெடுத்துக் கொண்டோம். இடைப்பட்ட ஒரு நாளில் கொம்பன் இன்னொரு
ஆச்சரியமான கனவைக் கண்டதாகக் கூறினான். ' அந்தக் கருநாகங்கள் ஒரு பெண் பாம்போடு புரள்வதாகவும்.அந்தப் பெண் பாம்பு
மிக்க வலியில் துடிப்பதாகவும், அதை ஒரு ஒற்றைக் கருநாகம் பக்கத்திலிருந்த ஒரு அத்தி மரத்தின் பொந்தில் இருந்து பார்ப்பதாகவும்,
அந்த ஒற்றை நாகத்தால் நகர முடியவில்லை எனவும், அதன் கண்களில் தெரியும் கோபத்திலிருந்தும், விரிந்த படத்தின் அனலிலிருந்தும்
அந்தப் பெண் பாம்பு, அதற்குச் சொந்தமானது போல் தெரிகிறது என்றும் கூறினான்,"

அந்த இடத்திற்கு போகவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. மர்மம் மெலிதாகப் புலப்படத்தொடங்கியது.

அந்தப் பௌர்ணமி நாளின் மதியப் பொழுதில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால் கானகத்தின் வழியே நடப்பது அவ்வளவு
எளிதாக இல்லை. ஒரு வழியாக மாலை முடிந்து இரவு தொடங்கிய ஒரு நிமிடத்தில் நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம்.அந்தக் கல்லறை
இருந்தது. நடுநிசியில் தான் கருநாகங்கள் வருமென கொம்பன் உறுதி படக் கூறினான். நாங்கள் ஒரு கூடாரம் அமைத்தோம்.

உணவு தயாரித்துக் கொண்டே குடித்தோம். எனக்கு உணவு உண்டபின், உறக்கம் கண்களை மிகப் பலமாக அழுத்தியது.

' கொம்பா! நான் கொஞ்ச நேரம் உறங்குகிறேன். சரியாக நடுநிசி வந்ததும் என்னை எழுப்பி விடு' என்று சொல்லி விட்டுப்
படுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து எனக்கு தானாகவே விழிப்பு வந்து விட்டது. ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை.

' கொம்பா! நீ எங்கே இருக்கிறாய்.?"
"இங்கே தான். உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறேன்."
'நேரம் என்ன?'
'விடிந்து விட்டது'
'என்னது விடிந்து விட்டதா? ஏன் என்னை எழுப்பவில்லை'
'எனக்கு எழுப்பத் தோன்றவில்லை'
'உளறாதே. சரி நீ கருநாகங்களைப் பார்த்தாயா?"

அவனிடம் பதில் இல்லை. ' கொம்பா! கொம்பா' என்று கத்திக் கொண்டே கண்களைத் திறந்து கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

என் முன்னால் இருந்த கல்லறை மறைந்தது.கானகம் மறைந்தது. கருநாகங்கள் மறைந்தன. ஒற்றை அத்தி மரம் மறைந்தது.
கூடாரம் மறைந்தது. கொம்பனும் மறைந்தான்.

ஜன்னல்கள் இல்லாத, உணவு கொடுப்பதற்கு ஒரு  துவாரம் உள்ள ஒரு சிறிய கதவு மட்டும் கொண்ட என் இருட்டறையின்
சுவர்கள் முழுக்க அந்தக் கல்லறைக்குப் போவதற்கான குறியீடுகள் விரவிக் கிடக்கக் கண்டேன்.