Friday, April 8, 2011

தேவதச்சன்

இன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு பௌர்ணமி நாளில் மருதப்ப ஆச்சாரி மிக்க குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.அவருடைய சந்தோஷத்திற்கு காரணம் இருந்தது.அது என்னவென்றால் "கச்சக்" பொன்னுசாமி கவுண்டர் அவருடைய புது வீட்டின் தச்சு வேலைக்கு அவரைக் கூப்பிடிருந்தார்.தச்சு வேலை அவருடைய தொழில். அதில் குதூகலமடைய என்ன பெரிய காரணம் வேண்டிக் கிடக்கிறது என்ற ஆகப்பெரிய கேள்விக்கு ஆகச்சிறிய பதில் என்னவா
இருக்குமென்றால் அவர் கடந்த ஆறு வருடங்களாக தொழிலுக்குப் போகவில்லை என்பதுதான்.



அவர் ஏன் ஆறு வருடங்களாக தொழிலுக்குப் போகவில்லை என்ற ஆகச்சிறிய கேள்விக்கு மிகச் சிறந்த பதில் என்னவாக இருக்குமென்றால் அவரை யாரும் தச்சு வேலைக்கு கூப்பிடவில்லை என்பதாகத்தான் இருக்கும். அவரை ஏன் யாரும் தச்சு வேலைக்கு கூப்பிடவில்லை என்ற ஆகச்சிறந்த கேள்விக்கு பதில்கள் ஏராளம்.



முதலாவது அவருக்கு வயதாகிவிட்டது.அதெல்லாம் ஒரு காரணமா என்று எதிர்க்கேள்வி எழுவது இயல்புதான்.ஆனால் இயல்பிலே மிக நிதானமான ஆள் மருதப்ப ஆச்சாரி.வயது கூடக் கூட அவர் நிதானம் எல்லை கடந்து விட்டது. அந்த அளவுக்கு நிதானமும், பொறுமையும் எங்கள் ஊரில் யாருக்கும் இல்லை. இரண்டாவது, மனைவி போன சோகத்தில் குடித்து விட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். பதினைந்து பேர் தவிர மற்ற எல்லாரும் குடிகாரர்களாக இருக்கும் ஒரு ஊரில் இது ஒரு பெரிய முறைப்பாடாக இருந்தது.மூன்றாவது, இப்போது வரும் இளம் தச்சர்கள் , சிறியதும் பெரியதுமான பல மின்சாரத் தளவாடங்களை வைத்துக் கொண்டு வேலை பார்க்கிறார்கள். ஒரு பீடியைப் பற்ற வைப்பதற்குள் எவ்வளவு

பெரிய பலகையானாலும் அறுத்துத் தள்ளி விடுகிறார்கள். ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தம் மட்டுமே வருகிறது.அறுந்து போன பலகை கீழே விழுகிறது.அவ்வளவுதான். ஓட்டை போடுவதற்கும் அப்படியே. சப்தம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாய் வருகிறது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று. இவர்களுக்கு முன் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.



அதிலும் அந்த பலகையில் ஓட்டை போடும் சமாச்சாரம் மற்றவர்களை விட, பல சமூக நாடகங்களில் "ஸ்த்ரீ பார்ட்" வேஷம் கட்டும் "தங்க முருகன்" என்றழைக்கப்படும் "கோல்டு" முருகனுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. அவன் அவரிடம் எடுபிடியாக வேலை செய்து வந்தான். இப்போது கொளத்து வேலைக்கு போவதாகக் கேள்வி.



இதையெல்லாம் விட மிதமிஞ்சிய ஒரு காரணம் உண்டு.சிட்டேபாளையம் சுப்பைய நாயக்கர் அவருடைய "தொடுப்பு" க்காக கட்டிய சிறிய வீட்டின் கூரையை வேய்ந்து கொண்டிருந்தபோது, மிகு போதையில் பீடியைப் பற்ற வைத்து விட்டு மறக்காமல் நெருப்பை கூரை மீதே போட்டு விட்டார். ஒரு முனையில் அது பற்றி எரிந்து கொண்டிருந்தபோது மறுமுனையில் இவர் மும்முரமாக கூரை வேய்ந்து கொண்டிருந்தார். இவர் முழு வேலையையும் முடித்து விட்டு கீழே இறங்கியபோது கூரை முற்றிலுமாக எரிந்து, பல காலமாக வெற்றிலையும், பாக்கும்,புகையிலையும் போட்டுத் துப்பிய பல்லில்லாத கிழவியின் வாய் மாதிரி தோற்றமளித்தது.



ஆறு வருட காலமாக இவர் வனவாசம் போன கதை இதுதான். இவையெல்லாம் அவருக்கு தெரிந்தே இருந்தது. ஆரம்பத்தில்
கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், நம்முடைய காலம் முடிந்து விட்டது என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது. ஆனாலும் வருத்தம் வருத்தம் தான்.வயிற்றுப்பாட்டுக்கு பிரச்சனையில்லை. சொந்தமாக அவருக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. வங்கியில் கொஞ்சம் சேமிப்பும் இருந்தது.ஆற்றில் விழுந்த இலை போல அவர் பாட்டுக்கு வாழ்க்கையோடு போய்க் கொண்டிருந்தார்.



இந்த நேரத்தில்தான் பொன்னுசாமிக் கவுண்டரின் அழைப்பு அவருக்கு வசந்த அழைப்பாக இருந்தது. இனித்தது.போதக்குறைக்கு இருநூறு ரூபாய் வேறு முன்பணமாகக் கொடுத்து விட்டு போயிருந்தார். பணத்தை எடுத்துக் கொண்டு நேராக மதுபானக் கூடத்துக்கு போனார். தனது சாகாக்களுடன் ஜமாவை ஆரம்பித்தார். முதல் கிளாஸ் சல்பட்டுக்கு " தீன கருணாகரனே நடராஜா" என்று பாகவதரில் ஆரம்பித்தவர், மூன்றாவது ரவுண்டுக்கு " அமைதியில்லாதென் மனமே" என்று கண்டசாலாவில் வந்து நின்றார்.ஐந்தாவது ரவுண்டை " தென்றல் உறங்கிய போதும்..திங்கள் உறங்கிய போதும்" என்று ஏ.எம்.ராஜாவில் முடித்தார். ஆறாவது ரவுண்டை
எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினார்.



பூப்படைந்த பெண்ணின் இளம் கொங்கைகளைப் போன்ற பரிசுத்தமான நிலவொளியில் வரப்பின் மீது அடி மேல் அடி வைத்து மெதுவாக
நடந்தார்." மோகனப் புன்னகை வீசிடும் நிலவே..மேகத்திலே நீ மறையாதே" என்று சௌந்தரராஜனின் அற்புதமான பாடல் ஒன்றை மெதுவாக பாடியபடியே வீடு வந்து சேர்ந்தார்.மங்கிய குண்டு பல்பின் வெளிச்சத்தின் கீழே அவருடைய சோம்பேறி நாய் ஜும்பா படுத்திருந்தது.அது யார் வந்தாலும் குரைக்காது. அதற்காக கடிக்காது என்று அர்த்தம் கிடையாது.கடிக்கும். சில சமயங்களில்.



யார் வருகிறாரென்று பார்த்துக் கொண்டே இருக்கும்.ஆனால் அந்த வீட்டுக்கு வருகிறவர் ஆச்சாரி மட்டுமே. அவர் வீடு. வருகிறார்.
மற்றபடி யாரும் அந்த வீட்டுக்கு வருவதில்லை.அதனால் அதற்கு கடிப்பதற்கு சரியான சந்தர்ப்பம் கிட்டவில்லை.மத்தியானம் சமைத்து
வைத்திருந்த சோற்றில் கொஞ்சத்தை ஜூம்பாவிற்கு போட்டு விட்டு வீட்டின் பின்பக்கம் போனார்.அங்கே ஒரு பெரிய தகரப் பெட்டி ஈசான்ய
மூலையில் கிடந்தது.அந்தப் பெட்டியில் தான் அவருடைய தச்சு வேலைக்கான அத்தனை தளவாடங்களும் இருக்கிறது. மெதுவாக அந்த
கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு முன் பக்கம் வந்தார்.



ஜூம்பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.பெட்டியைத் திறந்தார். அத்தனை பொருட்களும் துருப்பிடித்துக் கிடந்தது. ஆடி மாதம் கழிந்து தன் மனைவியைத் தொடும் ஆடவனைப் போல ஆசையாகத் தொட்டுத் தொட்டு பார்த்தார்.கொஞ்சம் சீமை எண்ணையைத் தடவி , பக்கத்திலிருந்த சொர சொரப்பான தரையில் "தர்ர்ர்..தர்ர்ர்ர்" என்று தேய்த்து துருவை அகற்றினார்.சாணைக் கல் கொண்டு கூர்மை தீட்டினார்.எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து, தனது வேட்டியில் நனைத்து துடைத்து பளபளப்பாக்கினார்.எல்லாம் முடிந்த போது அவருடைய தளவாடங்கள் தொண்டைமானின் போர்க் கருவிகளைப் போல ஜொலித்தது.நடு நடுவே " உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என்று எஸ்.சி. கிருஷ்ணனையும் பாட மறக்கவில்லை. நள்ளிரவு தாண்டி, சாப்பிடக் கூட மறந்து உறங்கிப் போனார்.



அடுத்த நாள் அவர் பொன்னுசாமிக் கவுண்டரின் வீட்டுக்குப் போனார்.

" மருதப்பா! பெருசா ஒண்ணுமில்ல..ஏழு ஜன்னலு..நாலு கதவு..மேல சாரங் கட்டி ..ஓடு போட்டுக் குடுத்துரு.அவ்ளோதான்..பவக்காளியைக் கூட்டிட்டு போய் நாயக்கரோட மர மண்டியில இருந்து , என்னென்ன மரம்,பலக வேணுமோ எடுத்துட்டு வந்துரு..சரியா..பொறுமயா வேல பாரு..ஒண்ணும் அவசரமில்ல..செலவுக்கு எதுனா வேணுமின்னா கேளு..சரியா.."


" அது சரி பொன்னு..எந்த நாயக்கர நீ சொல்ர.."


"நம்ம ஊருல எத்தன பேருடா இருக்காங்க...நம்ம சுப்பைய நாயக்கருதான்"

ஆச்சாரிக்கு 'சுருக்' கென்றது. காட்டிக் கொள்ளவில்லை.



அவர் அத்தனை மரப்பலகைகளையும் கொண்டு வந்து சேர்த்தபோது மணி இரவு எட்டாகி விட்டது.அவரும், பவக்காளியும் மெதுவாக நடந்து மதுபானக் கடைக்கு போனார்கள். மெலிதான மழை.

ஒரு புட்டி வாங்கிக் கொண்டு கால்வாய் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஜமாவை ஆரம்பித்தார்கள். பவக்காளியும் அவரைப் போலவே திக்கற்றவன்.இருவரும் மிக்க மகிழ்ச்சியாகக் குடித்தார்கள். அவர்களுக்கு ஏறிய போதையில் , கொஞ்சம் அன்னியோன்யமும் கலந்திருந்தது.




***********************************************************

மூன்று நாட்கள் கழித்துத் தான் அவரால் வேலையை ஆரம்பிக்க முடிந்தது. மழையால் ஊரெல்லாம் சகதியாகக் கிடந்தது. முதலில் ஜன்னலுக்கு அளவெடுத்து மரத்தை அறுக்க ஆரம்பித்தார்கள்.மருதப்ப ஆச்சாரியின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது.அவர் பாட்டுக்கு மரப்பலகைகளை அறுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். எது எதற்கு என்று மிக்க குழப்பத்தினூடே பவக்காளி அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.அறூப்பு வேலையை மட்டும் 6 நாட்கள் செய்தார்.இதனூடே ஆச்சாரி தன் ஜாகையை மொத்தமாக அந்த கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு மாற்றிவிட்டார். அவர் வீடு கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலே என்பதால் வேலை முடியும் வரை இந்த ஏற்பாட்டை செய்தார்.பக்கத்தில் ஒரு குடிசை போட்டு அதில் தங்கிக் கொண்டார்.ஜூம்பாவும் வந்து விட்டது. சமையலும் அங்கேயே. ஆனால் ஜூம்பா புது இடத்திற்கு பழக கொஞ்ச நாள் பிடித்தது. பவக்காளி தன் வேட்டியை அதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு நாளில் சில மணிநேரங்களை செலவிட வெண்டியிருந்தது.



அவர் அவனுக்கு அந்த ஊர்க் கதைகளைச் சொல்லியபடியே வேலை செய்தார். நடு நடுவே ' ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது'
என்று கண்டசாலாவின் பாடலை நேயர் விருப்பப் பாடல் போல பாடிக்கொண்டேயிருந்தார். காலை 9 மணிக்கு ஆரம்பித்தால்
மதியம் 1 மணி வரை. கொஞ்சம் சாராயம்.சோறு.தூக்கம். பிறகு இருட்டும் வரை வேலை. பிறகு சாராயம்,சோறு, தூக்கம்.இப்படியாக தினசரிகள் கழிந்தன. கவுண்டர் வாரத்திற்கு ஒரு முறை வருவதோடு சரி.



அது மழைக் காலம் என்பதால் கட்டுமான வேலைகளும், இவர் வேலையோடு சேர்ந்து கெட்டது. பளீரெனெக் காணப்படும் வானம்
திடீரென்று ஓட்டைப் பானை போல கொட்டும். அந்த வேளைகளில் சாரயத்தைக் குடித்து விட்டு குடிசையில் படுத்துக் கொள்வார்.



இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முந்தைய ஒரு பௌர்ணமி நாளில் ஆச்சாரி அத்தனை வேலைகளையும் முடித்து ஓடு வேய்ந்து அந்த வீட்டை முழுமையாக்கினார்.

அன்றிரவு,அவரும், கவுண்டரும், பவக்காளியும் மது அருந்தினார்கள். மெலிதான காரம் போட்டு வறுத்த நாட்டுக்கோழியும், ஆவி பறக்கும் இட்லியும், பாம்பு மீன் குழம்பும் பவக்காளி சமைத்தான்.



ஆச்சாரி, ஒரு பீடியை பற்றவைப்பதற்காக தன் பட்டாபட்டியில் கை விட்டு துழாவினார். ஒன்றே ஒன்றுதான் இருந்தது.சிரித்தார்.

' என்னடா மருதா சிரிப்பு..!

'ஒன்னுமில்ல பொன்னு...நம்ம 'மொரப்பா' கந்தசாமி ஒன்னு அடிக்கடி சொல்லுவான்..அத நெனச்சேன்!"

' அவன் என்ன பெரிசா சொல்லிட்டான்னு நீ இப்போ உன் அண்டா வாயத் தொறக்கற!"

"இல்ல...ரெண்டு பீடி இருந்தா எந்தக் கவலயுமில்லாம ஒன்னக் குடிக்கலாமின்னு சொல்லுவான்'



கவுண்டர் தன்னிடமிருந்த ஒரு சுருட்டை எடுத்து நீட்டினார்.வாங்கிக் கொண்டு அவர் அந்த கடைசி பீடியைப் பற்றவைத்துக் கொண்டார்.

' மருதா..கூலினு நான் எதுவும் உங்கிட்ட பேசல..நீயும் கேக்கல..எவ்வளவுன்னு நீயே சொல்லு..காலயில வந்து வீட்ல வாங்கிக்க..சரியா?'

ஆச்சாரி விசும்ப ஆரம்பித்தார். மற்ற இருவரும் அவரை வேடிக்கையாக பார்த்தபடி இருந்தனர்.

மழை மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. குளிர்ந்த காற்றோடு, மின்னல்களும் வீசின.

' எனக்கு கூலி வேண்டாம் பொன்னு'

'உனக்கென்ன பைத்தியமா..ரெண்டு மாசமா வேல செஞ்சிருக்க..கூலி வேண்டாங்கற!

' இல்ல பொன்னு வேண்டா..ஒன்னு சொல்லட்டா..இந்த ஊர்ல இருக்கற முக்காவாசி வீடு நான் வேல செஞ்சது.ஆறு வருசமா என்ன நம்பி யாரும் வேல தரல.நீ குடுத்த. இதோ இந்த பெட்டி இருக்கே..இந்த உளி,ரம்பம் இதெல்லாந்தான் எனக்கு சோறு போட்டது..என் ரெண்டு புள்ளைங்களுக்கு கல்யாணாம் மூச்சுக் குடுத்துது..கடசி காலத்துல நான் யார் கிட்டயும் கையேந்த விடாம நெலமும்,கொஞ்சம் பணமும் சம்பாதிச்சுக் குடுத்துது...இது வரைக்கும் நான் எல்லர்கிட்டயும் கூலி வாங்கியிருக்கேன்..உங்கிட்ட வாங்க எனக்கு மனசு வல்ல..நீ பெரிய பணக்காரன்..நான் கேட்கிற பணம் உனக்கு ஒன்னுமில்ல..ஆனாலும் எனக்கு வேண்டா'

முகத்தைப் பொத்திக் கொண்டு சிறுபிள்ளை போல அழுதார்.



ஆச்சாரி எதோ குடி போதையில் உணர்ச்சிவயப்படுகிறார் என்று கவுண்டர் நினைத்துக் கொண்டார்.,

' சரி விட்ரா...நல்லா திருப்தியா சாப்புட்டு தூங்கு..காலயில பாக்கலாம்'

'இல்ல பொன்னு..நான் என் வீட்டுக்கு போறேன்'

' மழ வர்ராப் போலிருக்கு..இங்கயே தூங்கிக்க"

"இல்ல நான் போறேன்..ஏ! ஜூம்பா..வா இந்தப் பக்கம்..போலாம் நம்ம வீட்டுக்கு'

தளவாடங்கள் அத்தனையும் பொறுமையாக எடுத்து பெட்டியில் அடுக்கினார்.போதையில் கொஞ்சம் தடுமாறினார்.

அடுக்கியதும் கவுண்டரை பார்த்து கை நிறையக் கும்பிட்டார்.

பெட்டியைத் தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டு , ஜூம்பா முன் செல்ல, பூப்படைந்த இளம் பெண்ணின் கொங்கைகளைப் போன்ற பரிசுத்தமான நிலவொளியில் ' மோஹனப் புன்னகை வீசிடும் நிலவே..மேகத்திலே நீ மறையாதே" என்ற சௌந்தரராஜனின்
அற்புதமான பாடலைப் பாடிய படியே வீடு வந்து சேர்ந்தார். பெட்டியை அதே ஈசான்ய மூலையில் வைத்து விட்டு உப்புக்கறை படிந்த
கன்னங்களோடு அப்படியே தூங்கிப் போனார். அன்றிரவு சூறைக் காற்றும், மழையும் பலமாக இருந்தது.



மறுநாள் காலை பவக்காளி கூலிப்பணத்தை எடுத்துக் கொண்டு ஆச்சாரி வீட்டுக்குப் போனான்.

அங்கே, அவருடைய நாய் ஜூம்பா, தரைமட்டமாகி கிடந்த ஆச்சாரியின் வீட்டைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது.