Tuesday, October 12, 2010

ஜிட்டக்கியும், ஒரு மழைநாள் இரவும்

இரண்டு நாட்களுக்கு முன் ,மின்னல்,காற்று சமேதராய் மழை பெய்த போது, ஆற்றுக்கு அப்பால் இருந்த சிட்டேபாளையம் சுப்பையா நாயக்கனின் எதுவும் விளையாத தோட்டத்தில் பலகாலமாக காய்க்காமல் இருந்த இரட்டைப் பனைமரத்தில் சடசடவென்று இறங்கிய ஒற்றை இடி என் தலை மேல் இறங்கியது போல் இருந்தது அந்தச் செய்தியைக் கேட்டபோது.

நான் வேட்டியை சரி செய்து கொண்டு அதை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்குள், தெருமுக்கில் திரும்பி வடகிழக்கு திசை நோக்கி ஓட்டம் எடுத்தான் 'பொவாக்கு' தம்பி.


மேலுக்கு ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு பித்தானை மாட்டி மாட்டாமல், பின்வாசல் வழியாக, வழியில் படுத்திருந்த இரண்டு கர்ப்பம் தரித்த ஆடுகளை ஒரு பாய்ச்சலில் தாண்டி கொட்டாரத்தில் புகுந்து ஓடி, கிழவியின் வீட்டு வாசலில் விழுந்தடித்து நின்றேன். வாங்கிய மூச்சைத் தாண்டி, கண்ணில் நீர், இதோ வந்துட்டேன் என்று எட்டிப் பார்த்தது.


"தொளசீ" என்று குரல்வளையில் குத்துப்பட்டவனைப் போல் குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே போனேன்.

பாத்திர பண்டங்களை பரணில் அடுக்கிக் கொண்டிருந்தவள் விம்மினாள் " ஆச்சு ராஜா..ஆயே போச்சு..".

கிழவியைப் பார்த்தேன். கட்டிலில் படுத்துக் கொண்டு என்னையே பார்ப்பது போல் இருந்தது. பக்கத்தில் போனேன். மார்பைத் தொட்டேன். சுட்டது.

" ஆரு பாத்தது"

" ராமசாமி".

" எந்த ராமசாமி?"

" மைனர் கவுண்டன் கூத்தியா மவன் ஓமியோபதி ராமசாமி"

"அவனா"- கால் தளர்ந்து விட்டது. தசையில் கட்டியிருந்த நரம்புகள் பட்டென்று அறுந்து திசைக்கொன்றாக ஆட்டம் போட்டது. கயிற்றுக் கட்டிலைப் பிடித்து உட்கார்ந்தேன். அவன் சொன்ன சாவு எதுமே பொய்த்ததில்லை. தாயளி மவன். அது சரி. அவனைத் திட்டி என்ன பிரயோசனம். விதி.

முலைகள் சுருங்கி எலும்போடு ஒட்டிய கிழவியின் மார்புகள், ஊஞ்சலைப் போல் சிறிது உயரம் கிளம்பி இறங்கிய வண்ணம் இருந்தது.மெல்லிய சுவாசம்.

" எத்தன நேரமுன்னான்?"

" ரெண்டு மணி நேரம். மேல போனா நடுஜாமம்.அதுக்கு மேல தாங்காதாம்".இப்போது அழுதாள்.

அப்போது கம்பளத்தான் முருகைய்யன் புயல் வேகத்தில் நுழைந்து "கெளவீ..கெளவீ" என்று கட்டிலைப் பிடித்துக் கொண்டு ஆட்டினான்.

பிரயோசனமில்லை என்பது போல அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். என்ன நினைத்தானோ, ஓங்கி கத்திவிட்டு எழுந்து மேற்குப் பக்கமாக ஒட்டம் எடுத்தான்.

" அன்னம்மாவுக்கு சொல்லி விட்டாச்சா?"

" பவக்காளி போயிருக்கான்"

பாத்திரத்தை அடுக்கி விட்டு அழுது கொண்டே வந்து என்னைக் கட்டிக் கொண்டு அழுகையைத் தொடர்ந்தாள்.என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஊர்ப் பெரியதுகள் வரட்டும். வந்து சொல்லட்டும். சொல்வதை செய்யலாம். கிழவியின் மார்பில் கை வைத்து. கையில் என் தலை வைத்தேன்.இதயம் துடித்த மாதிரி தெரியவில்லை.


வெளியே " ஹோ" வென்ற இரைச்சல் கேட்டது. ஆண்களும், பெண்களுமாய் ஒரு கூட்டம் வடகிழக்கு திசையிலிருந்து வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது. பொவாக்கு தம்பியின் வேலையாக இருக்கும். கிழவி போய் விட்டாள் என்றே சொல்லி விட்டானா. அத்தனை பேரும் நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தார்கள். தடுப்பதற்கு நானும், துளசியும் தயாராக கைகளை விரித்துக் கொண்டு நின்றோம்.


மேற்கு திசையிலிருந்தும் அதே அளவு கூட்டம் , வடகிழக்கு கூட்டத்தின் வேகத்திற்கும் சத்தத்திற்கும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இது கம்பளத்தானின் வேலைதான். வந்தவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கு மேல் நுழைய முடியாத அந்த சிறிய வீட்டு வாசலில் நின்று கொண்டு, சந்நதம் வந்த காளி கோயில் பூசாரியைப் போல் திங்கு திங்கென்று குதித்தார்கள். யாரும் எங்கள் சொல்பேச்சை கேட்பதாகத் தெரியவில்லை.

அவர்கள் போட்ட சத்தம் நாராசமாக இருந்தது. தாங்க முடியவில்லை. வைத்த கெடுவுக்கு முன்னால் கிழவியை வண்டி ஏற்றிவிடுவார்கள் போலிருந்தது.


துளசி பொறுக்க மாட்டாமல், திமிறிக் கொண்டு முன்னால் வந்த "பெல்பாட்டம்" பழனிச்சாமியின் செவிட்டில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

" யோவ் ! கெளவி சாகலைய்யா...கெடுதான் போட்ருக்காங்க..மூடிட்டு ஓரமா உக்காருங்கய்யா..."

அவ்வளவுதான்.கூட்டத்தின் சத்தம் அப்படியே இறங்கி அசாத்திய அமைதி ஒரு சில மணித்துளிகள் நிலவியது. அதன் அர்த்தம் சந்தோசமா இல்லை ஏமாற்றமா என்று தெரியவில்லை.


*************
அடுத்த அரை மணி நேரத்தில், பெரிசுகள் அத்தனை பேரும் என்னை தலைக்கு தலை விரட்டினார்கள். கம்பளத்தான்,பொவாக்கு,கிட்டான், செல்வன், சின்னப்பையன் என்று ஆளுக்கொரு திசையில் பறந்தார்கள் சேதி சொல்வதற்கு. கார்த்திகை மாதம்.நிறைந்த அமாவாசை. மசங்கிய மாலை நேரம்.

மழை எப்போது வேண்டுமானாலும் பொத்துக் கொண்டு பெய்யலாம். குளிர்ந்த காற்று " அப்பிடியே வந்தேன்...ஒரு எட்டு பாத்துட்டு போலாமின்னு" என்பதைப் போல் என்னைத் தாண்டியது.


ஊரே மயானம் ஆகிவிட்டது. ஜனங்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஜனக்கூட்டம் பெருகிக் கொண்டே போனது. வேட்டைக்கு போகும் செவ்விந்தியர்கள் மாதிரி "ஆய்...ஊய்" என்று சப்தங்களை எழுப்பியபடி வந்து கொண்டிருந்தார்கள். நிற்பதற்கு அந்த வீதியில் இடமே இல்லை.பின்னே ஜீவன் பெரிசில்லையா.


முதல் வேலையாக பந்தல்காரனை போய் கையும், அவன் கையில் பிடித்துக் கொண்டிருந்த வேட்டியுமாக பிடித்தேன் பின்னே மழை வந்து விட்டால். ஜனங்கள் எங்கே போவார்கள். நான்கு வண்டிகளில் பந்தல், சவுக்கு மரம், பந்தல் போட வந்த நான்கு குடிகாரர்கள் என்று அத்தனை பேரையும்
ஏற்றிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.


பந்தல் போடுவது அத்தனை சுலபமாக இல்லை. பஞ்சாயத்து தலைவர் ஒதுக்கிய நிதியில் ஒழுங்காக கான்க்ரீட் ரோடுகளைப் போட்டிருந்தார். இடித்து, பொடித்து எப்படியோ சவுக்கு கம்பங்களை நட்டுக் கொண்டிருந்தார்கள். முடிந்த அளவுக்கு நானும் இடித்தேன்.
கடப்பாறை காலில் பட்டு ரத்த காவு வாங்கியவுடன் கட்டு போட்டு கொண்டு ஓரத்தில் உட்கார்ந்து விட்டேன். திரும்ப விரட்டினார்கள். வருபவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டுமாம். சரிதான். குதத்தில் கோல் விட்டதைப் போல் ஓடினேன்.


நான்கு பெரிய "கொப்பறை" குண்டான்கள். உபரி சாமன்கள். நான்கு கேஸ் அடுப்புகள். சட்டி, சடப்பு, மயிர் மட்டைகள் என்று கொண்டு வந்து சேர்ப்பதற்குள் வாயில் நுரை தப்பிவிட்டது.

கரியனிடம் " பாத்துக்கோ மாமா " என்று சொல்லி விட்டு திரும்புவதற்குள் அடுத்த ஆணை எங்கிருந்தோ வந்தது.


சமையல் செய்வதற்கு ராஜம்மா, மல்லிகா, கபாட சுந்தரம் ஆகியோருக்கு சொல்லி கையோடு கூட்டி வந்தேன். அத்தனை பேரும் குத்து போதையில் இருந்தார்கள். ஆளுக்கு தலா ரெண்டு அறை விட்டு இழுத்து வந்தேன் காலில் ரத்தக் கசிவு நிற்கவில்லை. விண் விண்ணென்று தெறித்தது. சல்பட் ஒரு கிளாஸ் போட்டால் தேவலாம் என்று தோன்றியது. வழியில்லை. இருண்ட ஒரு சந்தில் புகுந்து சிகரெட்டை பற்ற வைத்தேன். மளிகை சாமன்கள் வாங்க வேண்டுமாம். கரியன் வந்து சிகரெட்டை பிடுங்கிக் கொண்டு விரட்டினான்.


ஒரு எழவும் இல்லாத நேரத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு வீதிக்கு பத்து பேர் திரிவார்கள். கிழவி சாகக் கிடக்கிறாள். இலவச வேட்டி, சேலை வாங்க வந்த மாதிரி ஜனங்கள் மொய்க்கிறார்களே தவிர யாராவது ஒரு வேலை செய்கிறார்களா.துக்கத்தில் பங்கு கொள்ள வந்த மந்தைகளாம். யாருடைய துக்கத்தில் என்று தெரியவில்லை.


கிழவியின் மகன்களோ, மகள்களோ இல்லை அவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் செருப்படி அடிப்பது என்று நாங்கள் எப்போதோ எடுத்த முடிவு. நாங்கள் என்றால் நாங்கள். நான், கம்பான்,பொவாக்கு, நாங்கள்.அவ்வளவுதான். சொத்தை பிரிக்கவில்லை என்று கிழவியை எத்தனை ஏச்சு ஏசினார்கள். எவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன கிழவியை நான் ஒருத்தானாகவே கொண்டுபோய் அடக்கம் செய்து விட்டு வந்து விடமாட்டேனா. ஓடினேன்.

மளிகை சாமான்கள் கொண்டு சேர்த்தபோது மழை மிக மிக மெதுவாக , அப்போதுதான் வெட்டிய ரத்தம் சொட்டும் மீனின் வாடையை பிடித்த பூனை மாதிரி வந்து கொண்டிருந்தது.


ஒரு வழியாக பந்தல் போட்டாகி விட்டது. பெண்கள் பாதி பேர் சமையலுக்கு உதவி செய்ய ஓடி வந்தார்கள். ஆண்கள் அத்தனை பேரும் சீட்டாட்ட ஜமாவுக்கு தயாரானார்கள்.

"மற்றதுக்கு" ஏற்பாடு செய்ய வேண்டும்.திரும்ப விரட்டினார்கள். பூசாரிபாளையம் பொன்னுசாமியின் வீட்டுக்கு ஒடினேன். வைக்கோலறையில் வைத்திருந்த எட்டு கள்ளுப் பானைகளையும், மூடியிருந்த சாராயக் கடையை திறந்து எட்டு கேஸ் பிராந்தி பாட்டில்களையும் கொண்டு வந்து சேர்த்தேன். முடியவில்லை. மழை பிலுபிலுவென பிடித்துக் கொண்டது.

சேதி சொல்ல போனவர்கள் என்ன ஆனார்களோ. அவர்கள் போன அத்தனை ஊர்களும் அந்த லட்சணம். போன் கிடையாது. பஸ் போகாது.தண்ணீர் வராது.
மக்கள் மட்டும் இருந்தார்கள் வண்டி வண்டியாக.


விதவிதமான வாகனங்களில் ஜனங்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஊரில் இருந்த மூன்று கல்யாண சத்திரங்களையும் திறந்து பந்தி போட வசதி பண்ணி விட்டு வருவதற்குள் கபாட சுந்தரம் வந்து முறைப்பாடு செய்தான். வரக்காப்பி போட காப்பித் தூளும், சர்க்கரையும் இல்லையாம்.

"காப்பி எதுக்கு. இங்கே என்ன பொண்ணு பாக்கவா வந்திருக்கானுக" - கோபம் தலைக்கேறி விட்டது.

" மழ நேரம். காப்பி இருந்தா ஒரு "இதுவா" இருக்கும்"

ஓடினேன். ஜிட்டக்கி இப்படி என்னை யாராவது வேலை வாங்குவதை பார்த்தாளானால் நெடுக்காக பிளந்து விடுவாள். அவளோ கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளுக்காகத்தான் இப்படி ஓடிக் கொண்டிருந்தேன்.ஒரு வழியாக எல்லாம் ஓய்ந்து, ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு கண்களை மூடினேன்.


இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் பண்ணிய காபராவில், அவளுக்காக துக்கப்பட கூட முடியவில்லை. கொத்தாக வந்திறங்கும் ஜனங்களைப் பார்க்க பார்க்க கோபம்தான் வந்தது. எதற்கு என்று தெரியவில்லை. இவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. எதற்கு வருகிறார்கள். வந்து கிழவியைப் பார்த்து விட்டு துண்டாலோ, சேலைத் தலைப்பாலோ வாயை பொத்திக் கொண்டு பூத் பூத்தென்று அழுகிறார்கள். சரி போகட்டும். அவர்கள் அழுதால் என்ன. அவிழ்த்து போட்டுக் கொண்டு ஆடினால் என்ன. என் கவலை எனக்கு.கிழவி நாளை இருக்க மாட்டாள் என்பதை நினைக்க நினைக்க ஆத்திரம்தான் வந்தது.அழுகை வரவில்லை.


மணி பனிரெண்டைத் தாண்டிவிட்டது. தூக்கி வாரிப் போட்டது. நடு ஜாமம் வரைக்கும்தான் தாங்கும் என்றானே. கிழவி போய்விட்டாளா.
செத்தவளை வைத்துக் கொண்டு சம்ரட்சணை செய்கிறார்களா. அலறியடித்துக் கொண்டு ஓடினேன். சாகவில்லை. மூச்சு அதே மாதிரிதான் வந்து கொண்டிருந்தது. அதானே. அவ்வளவு சீக்கிரம் போகிற கட்டையா அது. நூறாண்டுகள் குத்துக்கல் மாதிரி இருந்தவள் அப்படி பொசுக்கென்று போய்விடுவாளா என்ன. மழை நின்ற மாதிரி தெரிந்தது. கொட்டாரத்துக்கு போய் கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று காலை எடுத்து வைத்தேன்.


வாய்க்கால் கரையில் இருந்து யாரோ வாணவேடிக்கை விட்டது மாதிரி இருந்தது. பொறி பொறித்துக் கொட்டியது. என்ன என்று யோசிப்பதற்குள் பெரிய சத்தத்துடன் எதோ வெடித்தது. சந்தேகமே இல்லை. ட்ரான்ஸ்பார்மர் தான். கரண்ட் போய் விட்டது. மழை ஆரம்பித்து விட்டது.


அடுத்து எதற்கு என்னை விரட்டுவார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். காத்திருக்கவில்லை. சவுண்ட் சர்வீஸ் மாரியப்பனை தேடிக்கொண்டு ஓடினேன். அவன் எங்கள் ஜில்லாவிலேயே மிகப் பெரிய குடிகாரன். எங்கே விழுந்து கிடக்கிறானோ. பரவாயில்லை. என்னைப் படுத்தவில்லை.அவன் வீட்டுத் திண்ணையில்தான் படுத்திருந்தான்.

என்னை சிலுவையில் அறைந்து விடுங்கள் என்பதைப் போல கை,கால்களை அகட்டி படுத்திருந்தான். தட்டி எழுப்பி, ஏழு பெட்றொமாக்ஸ் விளக்குகளை வாங்கிக் கொண்டு வந்தேன்.


குடிகாரர்களின் உலகமடா இது. நான் வருவதற்குள் எவனோ ஒரு குடிகாரன் வெளிச்சம் வேண்டுமென்று பந்தத்தைக் கொழுத்தி விட்டான். இலவச இணைப்பாக போட்டிருந்த பந்தலையும் சேர்த்து பற்ற வைத்து விட்டான். ஏக களேபரம். சிவனே என்று நின்று கொண்டிருந்த கபாட சுந்தரத்தை யார் தள்ளி விட்டார்கள் என்று தெரியவில்லை. நேராகப் போய் கொதித்துக் கொண்டிருந்த வரக்காப்பி சட்டியில் மூஞ்சியை வைத்து விட்டான். அவன் ஆடிய ருத்ர தாண்டவத்தில் அந்த ஏரியாவே அமளி துமளியாகி விட்டது.

மழை. நெருப்பு. கூட்டம்.கசகசப்பு.துக்கம்.எழவு.கூச்சல். முடியவில்லை. நொடி நேரம் நிற்காமல் கொட்டாரத்துக்கு விரைந்தேன்.

*********************

சாவு விழுந்தால் அழுவதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் உண்டா இல்லையா? காரணத்தைப் பொறுத்து துக்கத்தின் அளவும் மாறுபடுமா இல்லையா?

ஆனால் பவக்காளியின் காரணம் சற்று வித்தியாசமானதாக இருந்தது.

" சக்கர இல்லாத காப்பி வாங்கிட்டு வரச் சொல்லுவியே ஜிட்டூ! கடக்காரன் மறந்து சக்கரயப் போட்டுட்டான்னா நீயே குடினு எனக்கு குடுப்பியே!
இனி யாரு என்னை சக்கர இல்லாத காப்பி வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க" என்று உச்சஸ்தாயில் அழுதான். தோளைத் தட்டி ஆறுதல் படுத்தினேன். மத்தியமத்துக்கு வந்தான்.

நான் என்ன காரணத்தை சொல்லிக் கொண்டு அழுவது. எல்லாமே காரணம்தான். எனக்கு மட்டுமல்ல, எங்கள் ஜமாவிலிருந்த அத்தனை பேருக்கும் எல்லாமே காரணம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த இருபத்தைந்து வருடத்தில் எதோ ஒரு வகையில் அவளைச் சுற்றிக் கொண்டேதான் வளர்ந்திருக்கிறோம்.


எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியதுதான்.ஆனால் ஜிட்டக்கியின் அந்த நாள் இன்றைக்கு என்பதை மனம் நம்ப மறுத்தது. தூங்கியவள் அப்படியே செத்திருந்தாலும் பரவாயில்லை. இப்படி கெடு வைத்துக் கொண்டு சாவது கொடுமை. அது சரி.சாகப் போகிறோம் என்ற விசயம் அவளுக்கு தெரியுமா?

வந்த ஜனங்களின் எண்ணிக்கை மலைப்பூட்டியது. இனி மேல் எத்தனை ஆயிரம் பேர் வரப் போகிறார்களோ? எனக்கு தெரிந்து எங்கள் ஊர்சுத்திலேயே பெரிய ஜீவன் அது.

ஒன்றல்ல, ரெண்டல்ல, ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருக்கிறாள். ஏனோதானோ என்று இல்லை. நிறைவாக. அவளுக்கும், எல்லோருக்கும்.
அந்தக் கால மிராசு குடும்பம். இப்போது கிழவியின் சொத்து மதிப்பை கணக்கு போட்டாலும் சில கோடிகளைத் தாண்டும். அதைப் பிரிக்கத்தான் பிள்ளைகள் சண்டை போட்டார்கள். முடியாது என்று சொன்னதும் ஏசினார்கள். இது நடந்து பத்து வருடம் இருக்கலாம். அதற்கு பின் யாரும் கிழவியை வந்து பார்க்கவில்லை. போனவர்கள் போனவர்கள்தான்.


ஜிட்டக்கி இருந்த வீடு எங்கள் வீட்டுக்கு பின்புறம் இருந்தது. சிறிய வீடுதான். ஒரு படுக்கை. அவளுடைய துணிகளை வைக்க சின்ன அலமாரி. நான்கைந்து பாத்திரங்கள். ஒரு மண் அடுப்பு. ஒரு குண்டு பல்ப். அவ்வளவுதான். அவ்வளவு எளிமையான வீட்டை நான் எங்குமே பார்த்ததில்லை.

சீட்டாட்ட ஜமாவில் யாரோ என்னைக் கூப்பிட்ட மாதிரி இருந்தது. எவன் பேச்சையும் கேட்க நான் தயாரில்லை. இவர்களுக்கு சீட்டு விளையாட வேறு இடமே இல்லையா. வந்து விட்டார்கள் எழவு வீட்டில் வெத்தலை பாக்கு போட. கேட்டால் பொழுது போகவேண்டாமா என்பார்கள். என்ன மனிதர்களோ.
சட்டி நெருப்பை அள்ளி அத்தனை பேர் தலையிலும் கொட்டலாமா என்று கோபம் வந்தது.


கொட்டாரத்துக்கு வந்த போது எங்கள் கோஷ்டி உட்கார்ந்திருந்தது. ஆளாளுக்கு பாட்டிலும் கையுமாக இருந்தார்கள். அத்தனை பேரும் ரத்த காயத்தோடு குத்துக் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். இந்த அமாவாசை இரவில் , மழையில் அந்த ஊருக்கெல்லாம் போய்விட்டு உயிரோடு திரும்பி வந்ததே பெரிய விசயம்தான்.


நீண்ட பெருமூச்சு விட்டு உட்கார்ந்தேன். ஒரு ரவுண்ட் முடிந்தவுடன் போய் கிழவியின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம் என்றான் கிட்டான்.
என்னால் முடியாது. அதற்கான தைரியம் எனக்கு இல்லை. துக்கம் அடைத்தது. கண்ணீர் வரவில்லை.


எப்போதும் சிட்டுக்குருவி மாதிரி ஒரு கிடையில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பாள். வீட்டில் வெத்தலை போட்டுக் கொண்டு ஊர் முழுக்க துப்பி விட்டு வருவாள். இன்று காலை கூட எதையோ தேடிக் கொண்டிருந்தாள். எப்போதும் இல்லாத ஒரு பரபரப்பு அவள் கண்ணில் தெரிந்தது. என்ன என்று கேட்டதற்கு "ஒன்னுமில்லே" என்றாள். ஒருவேளை இன்றைக்கு சாகப் போகிறோம் என்று தெரிந்திருக்குமோ என்னவோ.


இரண்டு முறை வீட்டுக்கு வந்து " கக்கு வருது.கக்கு வருது" என்று புலம்பினாள். " வந்தால் கக்க வேண்டியதுதானே என்றேன்." வரலே என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். மத்தியானம் கூட அவளுடைய தேடுதல் நின்ற பாடில்லை. அந்த சின்ன வீட்டில் அப்படி தேடுவதற்கு என்ன இருக்கிறதோ. மதியம் சாப்பிடவில்லை. மாலை படுத்துவிட்டாள்.


மழை பிரித்துக் கொண்டு அடித்தது. நடு ஜாமம் தாண்டியும் கிழவி இழுத்துக் கொண்டேதான் கிடந்தாள். ஒரு விசயத்தை முற்றிலுமாக மறந்தே போயிருந்தேன்.அட அதுதான் காரணம்.

" டேய் பொவாக்கு...ஜமுக்காளக் கவுண்டனுக்கு யார்ரா தகவல் சொல்ல போயிருக்காங்க"

" ஓலப்பளத்தான் ராசு"

அவந்தான் சரியான ஆள். அவனை விட்டால் யாருமே துணிந்து அந்த காட்டுக்குள் போக முடியாது. அதுவும் இந்த பேய் மழையில்.

கிழவிக்கு சொந்தமான நாலு ஏக்கர் நிலம் கெஜ்ஜலட்டியில் இருந்தது. அந்த இடத்துக்கு அவ்வளவு சுலபமாகப் போக முடியாது. காராச்சிகொரை செக்போஸ்டைத் தாண்டினால் எட்டு மைல் தூரம். ரோடு கிடையாது. அடர்ந்த காடு. நடுவில் மாயாறு. ஆழமில்லாத இடத்தில் ஆற்றைத் தாண்டி
கல்லாம்பாளையம் பிரிவில் போனால் எப்படியும் ஐந்து மணி நேரத்துக்கு குறையாத பிரயாணம். மாதத்துக்கு ஒருமுறை போய் வெள்ளாமையை பார்த்து விட்டு வேலைக்காரர்களுக்கு சம்பளப் பட்டுவாடா பண்ணிவிட்டு வருவான். இன்று காலைதான் சிறிய லோடு வண்டியை எடுத்துக் கொண்டு போனான். அதற்குள் இப்படி ஆகிவிட்டது.


ஜமுக்காளக் கவுண்டன் கதை பெரிய கதை. எனக்கு அவனை நினைக்கத் தான் ஆகப் பெரிய துக்கமாக இருந்தது. நாங்கள் பரவாயில்லை.இளசுகள்.
ஆனால் அவன் கிட்டத்தட்ட எழுபத்தைந்து வருடங்கள் ஜிட்டக்கியுடன் இருந்திருக்கிறான். கிழவி இல்லாத வாழ்க்கையை அவன் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான்.

இப்போது வந்தவர்கள் போக இன்னும் கூட லட்சம் பேர் வரட்டும். வந்து அழுது வண்டி வண்டியா கண்ணீர் விடட்டும். அவனுடைய ஒரு சொட்டு கண்ணீருக்கு ஈடாகாது.


கவுண்டனின் அம்மாவும் அப்பாவும் கூத்தாமண்டியிலிருந்து எங்கள் ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்.ஒரு என்பது வருடங்களுக்கு முன்பு.
கூத்தாமண்டி ஒரு ஊரே அல்ல. எங்கிருந்து பார்த்தாலும் வெயிலும், பாறைகளும் தவிர எதுவுமே இல்லாத ஊர்.
கிழவியின் பண்ணையத்தில்தான் வேலை பார்த்தார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு ஜமுக்காளம் பிறக்க போகும் சமயம்.

அப்போது ஜிட்டக்கியும் கர்ப்பமாகத்தான் இருந்தாள். ஆறாவதோ, ஏழாவதோ.

கவுண்டனின் அப்பா இதே கார்த்திகை மாத மழையில் , கெஜ்ஜலட்டிக்கு வண்டி கட்டிக் கொண்டு போனார்.

திரும்பி வரும்போது காட்டாற்றில் சிக்கி வண்டியோடு போய் விட்டார். இரண்டு நாள் கழித்துதான் சடலத்தைக் கண்டுபிடித்தார்கள். நரிகளும், செந்நாய்களும் குதறித் தள்ளியிருந்தது.


இரண்டு நாள் இடைவெளியில் கவுண்டனும், ஜிட்டக்கியின் ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். பெண் குழந்தை இறந்து பிறந்தது.

கவுண்டனின் அம்மா வலிப்பு வந்து செத்துப் போனாள். தன் குழந்தைக்காக சுரந்த தாய்ப்பாலை இவனுக்கு புகட்டி தன் மகனைப் போலவே வளர்த்தாள்.

இப்போது ஜமுக்காளத்திற்கு எழுபத்தைந்து வயது. எனக்கு கண்ணீர் முட்டியது. என்ன ஒரு வித்தியாசமான உறவு.


வெத்தலை, சுருட்டு,மூக்கு பொடி, சல்பட், சாராயம், கஞ்சா என்று அத்தனை கிழவியிடம் இருந்த அத்தனை கெட்ட பழக்கங்களும் அவனிடமும் இருந்தது.
யாரிடமிருந்து யார் கற்றார்கள் என்று தெரியவில்லை.


கஞ்சாவை அவர்கள் இருவரும் சாப்பாட்டோடு சேர்த்து சாப்பிடவில்லை. அவ்வளவுதான். மற்றபடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் 'பப்பு" இழுத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.கிழவியின் நீண்ட ஆயுசுக்கும் இதுதான் காரணமா என்று நான் பல தடவை யோசித்ததுண்டு.

அதிலும் அடித்து விட்டு அவள் சொல்லும் கதைகள் விவகாரமானதாக இருக்கும். நூறாண்டுகள் வாழ்ந்தவளிடம் கதைகளுக்கா பஞ்சம்.

அப்படி நாங்கள் கேட்டதுதான் 'கோடையிடி' முத்தம்மாவின் கதை.

அதாவது முத்தம்மா எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு வேசியாம். அப்படி ஆவதற்கு முன் டவுன் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவன் அவளை வைத்திருந்தானாம்.

அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் கூட உண்டாம். முத்தம்மாவிற்கு நகை,நட்டு, பணம் , வீடு என்று அத்தனை வசதிகளும் செய்து குடுத்தானாம்.

இது அவன் பெண்சாதிக்கு தெரிந்து பிரச்சினை ஆகி பஞ்சாயத்து நடந்ததாம்.

என்னை கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டான். ஒன்னு எனக்கு தாலியைக் கட்டு இல்லன்னா பணம் குடு என்று பெரிய தொகையை கேட்டாளாம்.

அவன் அதுக்கு " இதுவரைக்கும் குடுத்ததெல்லாம் எங்கடீ போச்சுன்னு" கேட்டானாம்.

அதுக்கு அவள் ஒரு பதில் சொன்னாளாம். அந்த பதிலை கிழவி எங்களுக்கு சொல்லவில்லை. நாங்களாகவே ஊகித்துக் கொண்டோம்.

அது சரியான பதில்தானா என்று இன்றுவரை எங்களுக்கு தெரியாது. இப்போ போய் எழுப்பி கேட்கவா முடியும்.

இப்படி பல கதைகளுக்கு அவள் பதிலே சொன்னதில்லை.


சில சமயம் தத்துவமாக கொட்டுவாள். 'மழயில நெனஞ்சுட்டேன்" என்றால் " மழயில நீ நெனயல.மழதா உன்ன நெனச்சது" என்பாள்.

என்ன வித்தியாசம் என்று இதுநாள் வரை எங்களுக்கு தெரியாது. வேலியோரம் சண்டை போட்டுக் கொள்ளாமல் வளரும் பெயரில்லாத செடி,கொடிகளைப் போல அவளுடன் வாழ்ந்திருக்கிறோம். எது எப்படியோ. எல்லாம் முடிந்து போய் விடும் இன்னும் சற்று நேரத்தில்.


அசதியில் அத்தனை பேரும் கம்பத்துக்கு ஒருவராக சாய்ந்திருந்தார்கள். மறுபடியும் ஒரு ரவுண்ட் விட்டேன். மழை தூறலானது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும். எனக்கும் கண் அசந்தது. கைகளைத் தலைக்கு கொடுத்து முட்டாக்கு போட்டு படுத்துக் கொண்டேன்.
ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்பேன். கவுண்டன் போன லோடு வண்டியின் சத்தம் கேட்டது.


அத்தனை பேரையும் எழுப்பிக் கொண்டு ஓடினேன். கவுண்டன் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு தலைக்குத் தலை அடித்துக் கொண்டு அழுதான். கிழவிக்கு யாரோ துளசி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாதி பாதியாக மட்டும் போய்க் கொண்டிருந்த தண்ணீர் மொத்தமாக வாயிலிருந்து வழிந்தது.

அத்தனை பேரும் எழுந்து விட்டார்கள். கவுண்டன் உள்ளே போய் கிழவியின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஜிட்டம்மா..ஜிட்டம்மா" என்று அரற்றினான்.

மெலிதாக வாங்கிக் கொண்டிருந்த மூச்சு இப்போது மேலும் கீழும் பலமாக இழுத்தது. கைகளும் கால்களும் அசாத்திய நடுக்கம் நடுங்கின.

மயான அமைதி. அத்தனை பேரும் அழுவதற்கு தயாரானர்கள்.


நடுக்கம் குறைந்து கொண்டே வந்து மொத்தமாக நின்றது. கடைசியாக துளசி தண்ணீர் விட்டார்கள்.

மொத்தத்தையும் "கடக்" கென்று முழுங்கிவிட்டு எழுந்து உட்கார்ந்து ஜமுக்காளக் கவுண்டனின் செவிட்டில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

அறைந்து விட்டு கேட்டாள் " எங்கடா வெச்சுட்டுப் போன கஞ்சா பொட்லத்த ".


கம்பளத்தானும், பொவாக்கு தம்பியும் , மைனர் கவுண்டன் கூத்தியா மகன் ஓமியோபதி ராமசாமி வீட்டை நோக்கி கொலைவெறியோடு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார்கள்.