Sunday, April 11, 2010

தேவ‌தாசியின் நாட்குறிப்புக‌ள்

உண்டு பருத்த‌,
வ‌னப்பும் வ‌ஸீக‌ர‌மும்,
செழுமையும் செழிப்பும்,
அச்ச‌மேற்றும் மெதுமெதுப்பும்
அடிவ‌யிற்றில் க‌த‌க‌த‌ப்பும் கொண்ட‌,
புணர்த‌லுக்கு பின்,வெயில் இறங்கும் மாலைப்பொழுதுக‌ளின்
இளம் வெப்பம் தகிக்கும்
செம்ம‌ண்ணில் மெதுவாக‌ ஊர்ந்து உல‌ர்ந்து அய‌ர்ந்து
த‌ன் ச‌ட்டையை க‌ழற்றும்
க‌ருநாக‌ ச‌ர்ப்ப‌த்தை போல்
உணரும் உணர்வொன்று என‌க்குண்டு.

நானும் நாக‌மும் ஒன்று.
அத‌ன் விஷத்துக்கு என் ப‌க்தி ச‌ற்றும் குறைந்த‌த‌ன்று.

வேறுபாடு ஒன்றுண்டு.

உல‌க‌றியும் விஷமென்றால் என்னவென்று.
ஆனால் யார‌றிவார்
என் ப‌க்தி என்னை,
குறைப்பிர‌ச‌வ‌மாக‌ பிற‌ந்து,
குற்றுயிராக‌க் கிட‌க்கும்
ச‌வ‌லைப் பிள்ளையின்
ர‌த்த‌ம் தோய்ந்த‌ மிருதுவான‌ தொப்புள் கொடி வழியே
மேயும் கொலைப்ப‌சி கொண்ட‌
செவ்வெறும்புக‌ளின் தாகத்தோடு அரித்து அடிக்கிறதென்று.
வேண்டுகிறேன் இன்று.
இறைவா ! நான் முத‌ன்முதல் ப‌னிக்குட‌ம் உடைந்து
உல‌கைக்க‌ண்ட‌ முதல் க‌ணத்தில்
இருந்த‌ ப‌ரிசுத்த‌த்தோடு
என்னை உன்னிட‌ம் ச‌மர்ப்பிக்கின்றேன் என்று.